“சர்வதேசம்” எனும் முகமூடியில் வடலூர் வள்ளலார் அமைப்புகளில் ஊடுருவிய…
அமெரிக்கவாழ் தமிழர்களிடம் 1200 கோடி ரூபாய் சுருட்டிய மோசடிக் கூட்டம் ?!
“சர்வதேசம்” எனும் முகமூடியில் வடலூர் வள்ளலார் அமைப்புகளில் ஊடுருவிய…
அமெரிக்கவாழ் தமிழர்களிடம் 1200 கோடி ரூபாய் சுருட்டிய மோசடிக் கூட்டம் ?!
வள்ளலார் மாநாடு எனும் பெயரில்
தலைக்கு 500 ரூபாய், குளுகுளு பேருந்து, புடவை துணி கொடுத்து ஆள்பிடிக்கும் அவலம் !
==================================
“”இப்படி, இறைவர் வந்து நடமாடி, நடனமாடி, அங்குமிங்கும் ஓடியாட வசதியான 106 ஏக்கர் திருவருட் பெருவெளித் தலம் என்று வள்ளலார் போற்றிக் கொண்டாடிய அந்த இடத்தில்தான்,வெளிநாட்டுக் காரர்கள் வந்து தங்க சொகுசு விடுதி, சந்திப்புக் கூடம், விலை உயர்ந்த உணவை விற்கும் பன்னாட்டுத் தரத்திலான உணவு விடுதி, தங்குமிடம் என கட்டடம் கட்ட அத்திரவாரமே தோண்டிவிட்டது மு.க.ஸ்டாலின் – சேகர் பாபு நிர்வாகம்.””
==================================
சிறப்புக் கட்டுரை :
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் வார இதழ், மெய்யியல் ஆய்வாளர், நிறுவனர் : தமிழியல் நடுவம்.
==================================
சாதியும் மதமும் சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி…
இறைவர் ஒருவரே… அவர் ஒளிமயமானவர்….
பசி என்பது 35 விதமான மரண அவத்தைகளைக் கொடுப்பது, எனவே பசியாற்றுதலே இறைநிலைக் கதவை திறக்கும் திறவுகோல்…
என்று 1870 ம் ஆண்டுகளில் மாபெரும் புரட்சி செய்த சிதம்பரம் இராமலிங்கம் எனும் வடலூர் இராமலிங்க வள்ளற்பெருமானுக்கு அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட வடலூர் பார்வதிபுரம் மக்கள் 80 காணி நிலம் அதாவது 106 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்தனர்.
அதில் 1867 ம் ஆண்டு மே மாதம் 23 ம் தேதியன்று பசிப் பிணி போக்கும் தருமச்சாலை ஒன்றை திறந்து வைத்தார் வள்ளற்பெருமானார்.
24 மணி நேரம், 7 நாட்கள் ஆண்டுக்கு 365 நாட்கள் என எப்போதும் அடுப்பு புகைந்து கொண்டு பசித்தவர்க்கு உணவு தயாரித்து அளிக்க வேண்டித் திறக்கப்பட்ட தருமச்சாலை அது. (இன்று அப்படி முழு நேரம் நடப்பதில்லை)
மக்கள் தங்கள் வசதி, தகுதிக்கேற்ப அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய் என அங்கு கொண்டு வந்து கொடுக்க, அதை சமைத்து பசித்தவருக்கு அளிப்பதே இந்த தருமச்சாலையின் திட்டப்பணி.
அதன்பிறகு அவரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஞானசபை 1872 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை மற்றும் ஞானசபை என இவற்றுக்குப் பெயர் சூட்டினார்.
அன்றுமுதல் இன்றுவரை 150 ஆண்டுகளாக பல நூறு கோடி மக்களின் பசியாற்றிக்கொண்டு தங்கு தடையின்றி இந்தச் சேவை தொடர்கிறது.
கோவிட் 19 காலங்களில் பசியின்றி மக்கள் வாழ வடலூர் தருமச்சாலையும் பிற ஊர்களில் உள்ள தருமச்சாலைகளும் பெருமளவில் பங்காற்றின.
பார்வதிபுரம் மக்கள் கொடுத்த 106 ஏக்கர் நிலம் தவிர, பல நூறு பேர் இடங்களை வாங்கியும், தங்களின் இடங்களையும் வள்ளாலரின் அமைப்புகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தையும் தானமாகக் கொடுத்தனர்.
ஆனால் அந்த இடங்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி படிப்படியாகக் காணாமல் போயின. எங்கே எனக் கேட்டவர்கள் அடாவடியாக மிரட்டப்பட்டனர், தாக்கப்பட்டனர்.
இருக்கும் இந்த 106 ஏக்கரும் காணாமல் போய்விடும் என்று அஞ்சிய அன்றைய இந்து சமய அறநிலையத்துறை இயக்குநர் பாலகிருஷ்ண பிள்ளை 1960 ம் ஆண்டுக்கு முன்பே வள்ளலாரின் அமைப்புகளை இந்து சமய அறநிலையத்துறையின் (அப்போது அது மெட்ராஸ் இந்து சமய அறக்கட்டளைத் துறை) கீழ் கொண்டு வந்தார்.
உண்மையில், மதம் – சமயமற்ற வள்ளலாரின் சமரச சுத்த சத்திய சன்மார்க்கத்தை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதே வள்ளலாருக்கு செய்யும் முதல் துரோகம்.
எனினும், இருக்கும் 106 ஏக்கர் நிலமாவது பாதுகாப்பாக இருக்கட்டும் என்கிற அடிப்படையில் பாலகிருஷ்ண பிள்ளை எடுத்த முடிவு அன்றைய காலகட்டத்தில் சரியானதே.
இதில் கவனிக்கப்படவேண்டிய உண்மை, அன்று முதல் இன்று வரை 106 ஏக்கரும் சிதம்பரம் இராமலிங்கம் எனும் பெயரில் அதாவது வள்ளலாரின் பெயரில் இருக்கும் பட்டா நிலம்தானே தவிர அரசு நிலம் அல்ல.
ஆனால், இந்த எண்ணத்திலும் மண் அள்ளிப்போட்டது பிற்காலத்திய இந்து சமய அறநிலயத்துறை.
1975 ம் ஆண்டு, 106 ஏக்கரில் 25 ஏக்கர் நிலத்தைப் பிரித்துத் தனியாருக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்துள்ளது அன்றைய திமுக அரசின் கீழ் இயங்கிய மாவட்ட நிர்வாகம்.
ஆக, 81 ஏக்கர் நிலம்தான் மிஞ்சியது. அதிலும் ஒரு ஆறேகால் ஏக்கர் நிலத்தை அங்கே ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருந்த ஒரு சிவாச்சாரியார் ஆக்கிரமித்து தமது பெயரில் மாற்றி வைத்திருக்கிறார்.
இப்போது…”வேண்டுமானால் பணம் கொடுத்து எம்மிடம் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று நில உரிமையாளர் வள்ளலாரிடமே விலை பேசுகிறார்.
இத்தகைய நிலையில், 2021 ம் தேதி பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 100 கோடி ரூபாய் செலவில் எஞ்சியிருக்கும் 72 ஏக்கர் நிலத்திலும் “சர்வதேச மையம்” கட்டுகிறோம் என்று அறிவித்தது.
அதாவது, 1975 ல் தமது முந்தைய திமுக அரசால் தவறுதலாகத் தனியாருக்குப் பட்டாப் போட்டுக் கொடுக்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்தை மீட்க துரும்பைக் கூட அசைக்கவில்லை சேகர் பாபு மற்றும் மு.க.ஸ்டாலின் நிர்வாகம். மேலும், சிவாச்சாரியார் வசம் இருக்கும் ஆறே கால் நிலத்தை மீட்கவும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மாறாக, எஞ்சியிருக்கும் 72 ஏக்கரையும் அடைத்து வெளிநாட்டுக்காரர்கள் வந்து தங்க சொகுசு விடுதி, சந்திப்புக் கூடம், விலை உயர்ந்த உணவை விற்கும் பன்னாட்டுத் தரத்திலான உணவு விடுதி, தங்குமிடம் என…அதை ஒரு வணிக வளாகமாக ஆக்கும் திட்டத்தோடு 100 கோடி நிதியையும் ஒடுக்கிவிட்டது மு.க. ஸ்டாலின் – சேகர் பாபு அரசு.
அதாவது….
“உத்தர ஞான சிதம்பரம், உத்தர ஞான சித்திபுரம், திருவருட் பெருவெளித் தலம்” என்றெல்லாம் வள்ளலாரால் வருணிக்கப்பட்டு….
வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே.
அதாவது சிதம்பரத்தில் நடனமாடிக் கொண்டிருக்கும் நடராசப் பெருமானை வடலூருக்கு அழைத்து வாருங்கள், வந்தால் பெறலாம் நல்ல வரம் என்கிறார் வள்ளலார், மேலும்
சிந்தை களிக்கக் கண்டு சிவானந்த மதுவுண்டு
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்யப் பவுரி கொண்டு
இந்த வெளியில் நடமிடத் துணிந்தீரே அங்கே
இதைவிடப் பெருவெளி இருக்குதென்றால் இங்கே வருவார்
சிதம்பரத்தை விடப் பெரிய வெளி “பெருவெளி” அதாவது 106 ஏக்கரில் பரந்து விரிந்த வெட்ட வெளித் தலம் வடலூரில் இருக்கிறது என்று சொன்னால் அவர் வருவார்…அழைத்து வாருங்கள் என்று பாடுகிறார் வள்ளலார், மேலும்…
இடுக்கிலாமல் இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
இங்கம்பலம் ஒன்றங்கே எட்டம் பலம் உண்டைய
ஒடுக்கில் இருப்பதென்ன உளவு கண்டு கொள்வீர் என்னால் உண்மை இது வஞ்சமல்ல உம்மேல் ஆணை என்று சொன்னால் வருவார்
சிதம்பரத்தில் இடைஞ்சலாக, குறுகலான, நெருக்கடியான ஒரு அம்பலம் மட்டும்தான் உள்ளது…ஆனால் வடலூர் பெருவெளித் தலத்தில் அதாவது 106 ஏக்கர் அளவுக்கு உள்ள பரந்து விரிந்த தலத்தில் எட்டு அம்பலம் – அதாவது எட்டுக் கதவுகள் கொண்ட அம்பலம் உண்டு எனவே அங்கு வாருங்கள் என்று அழைத்தால் நடராசப் பெருமான் வருவார் அழைத்து வாடி என்கிறார் வள்ளற் பெருமான்.
இப்படி, இறைவர் வந்து நடமாடி, நடனமாடி, அங்குமிங்கும் ஓடியாட வசதியான 106 ஏக்கர் திருவருட் பெருவெளித் தலம் என்று வள்ளலார் போற்றிக் கொண்டாடிய அந்த இடத்தில்தான், வெளிநாட்டுக்காரர்கள் வந்து தங்க சொகுசு விடுதி, சந்திப்புக் கூடம், விலை உயர்ந்த உணவை விற்கும் பன்னாட்டுத் தரத்திலான உணவு விடுதி, தங்குமிடம் என கட்டடம் கட்ட அத்திரவாரமே தோண்டிவிட்டது மு.க.ஸ்டாலின் – சேகர் பாபு நிர்வாகம்.
அடுத்தவேளை உணவுகூடக் கிடைக்காதவர்களின் பசியாற்றும் தருமச்சாலை உள்ள 106 ஏக்கர் இறைவரின் திருவருட் பெருவெளித் தலத்தில் “விலை உயர்ந்த பன்னாட்டு உணவுக் கடை” திறப்பது எனும் முடிவு திமுகவின் எப்பேர்ப்பட்ட அறிவார்ந்த செயல் பாருங்கள் !
வள்ளலார் பத்தர்கள், சங்கத்தவர்கள், பார்வதிபுரம் மக்கள், அமைப்புகள் எனக் கடுமையான போராட்டம் நடத்திய பிறகே இந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன.
போராட்டம் நடத்தியவர்கள் பிணையில் வர முடியாத அளவு மீது வழக்குத் தொடுத்தது சேகர் பாபு – மு.க.ஸ்டாலின் அரசு.
இந்த அளவுக்கு உக்கிரமாக திமுக அரசு அதிலும் மு.க.ஸ்டாலின் அரசு வள்ளலார் மீது கொண்டிருக்கும் பத்தியில் / விசுவாசத்தில் மேற்கொள்கிறதா என்றால்….
அப்படி இருந்தால், இறைவரின் திருவருட்பெருவெளித் தலத்தில் சொகுசு விடுதி, உணவுக்கடை என திறக்குமா திமுக ? திறக்க மனம் வருமா ???!!!
ஆக, திமுக அரசைப் பொறுத்தவரை வள்ளலார் குறித்தோ, வள்ளலார் உருவாக்கிய 106 ஏக்கர் திருவருட்பெருவெளித் தலம் குறித்தோ, உத்தர ஞான சித்திபுரம், உத்தர ஞான சிதம்பரம் என்பது குறித்தோ எந்த அடிப்படை அறிவும் இல்லை என்பதே வெளிப்பாடு.
அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு இல்லாதிருப்பதில் வியப்பில்லை, அவர்களுக்கு ஆலோசனையாக அமர்ந்திருக்கும் “ஆன்மீக” அறிவு ஜீவிகளுக்காவது இவை குறித்த அடிப்படை அறிவிருக்கிறதா என்றால் சுத்தமாக இல்லை.
காரணம், இவர்கள் மேடைப் பேச்சாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்களே தவிர எவரும் சமரச சுத்த சத்திய சன்மார்க்கம் குறித்த எந்த அடிப்படை அறிவுமற்றவர்களாக உள்ளனர்.
மேடை, பொன்னாடை, கைதட்டல்கள், வந்து செல்ல வாகனம், பேசுவதற்கு பேட்டாத் தொகை கொடுத்தால் போதும் எப்படி வேண்டுமானாலும் இவர்களின் நாக்குகள் குட்டிக்கரணம் அடிக்கும்.
இப்படிப்பட்டவர்களுக்கு “உத்தரஞான சிதம்பர மாலை” எனும் தலைப்பில் திருவருட்பெருவெளித் தலம் குறித்து மட்டும் 11 பாடல்கள் வள்ளற் பெருமான் இயற்றியுள்ளது எப்படித் தெரியும் ?!
“உலகமெலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே
இலக எலாம் படைத்து ஆருயிர் காத்தருள் என்றதென்றும்
கலகமிலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது “பார் திலகம்” என நின்றது உத்தர ஞான சிதம்பரமே.”
அதாவது, உலகில் உள்ள மக்களால் தொழுதற்கு உரியதாகவும், கொல்லாமை – புலால் உண்ணாமையை வலியுறுத்தும், தருமச்சாலை மூலம் பசியாற்றி ஆருயிர்களைக் காக்கும் தலமாகவும், கலகம் இல்லாத சுத்த சன்மார்க்க சங்கமும் கலந்து நிற்கும் பூமியின் நெற்றிப் பொட்டுதான் 106 ஏக்கர் உத்தரஞான சிதம்பரம் அதாவது திருவருட்பெருவெளித் தலம் என்கிறார் வள்ளற் பெருமான்.
இங்கேதான்….ஆடம்பர நுழை வாயில், 80 அடி சாலைகள், பளபள அலங்கார மண்டபங்கள், முக்கண் சிலை, சொகுசு விடுதி, விலை உயர்ந்த உணவு விடுதி, தங்கும் விடுதி கட்டப்போகிறார்களாம். என்ன கொடுமை இது ?!
இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவருட்பெருவெளித் தலத்தை ஏதோ ரியல் எஸ்டேட் இடம்போல கருதும் அறிவுக்குருடர்களை அங்கே அனுமதித்ததே வள்ளலாரின் பின்பற்றாளர்கள் செய்த பெருந்தவறு.
இதற்கிடையில், இந்த சர்வேதச கட்டுமானங்கள் “கட்ட” மட்டுமே தமிழ்நாடு அரசு 100 கோடி நிதி தரும். ஆனால் அதனைப் பராமரிக்கப் பணம் தராது.
பிறகு வருவாய் ?!
அதற்குத்தான் அமெரிக்காவில் உள்ள நண்பன் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையின் பினாமிகள் இங்கே இருக்கிறார்களே ?!
யார் இந்த நண்பன் பவுண்டேஷன் ?!
கோவிட் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள வள்ளலார் தருமச்சாலைகள் மூலம் கஞ்சி ஊற்றும் சேவைக்கு பணம் கொடுத்த அமைப்பு.
நல்லதுதானே என்று எண்ணலாம். ஆனால், இங்கே ஒரு லட்சம் ரூபாய்க்குக் கஞ்சி ஊற்றிவிட்டு அமெரிக்காவில் ஒரு கோடி வசூல் செய்து சுருட்டியிருக்கிறது இந்த பவுண்டேஷன்.
அதுமட்டுமல்லாமல், அங்கே டெக்ஸாஸ் மாகாணத்தில் 100 ரூபாய் முதலீடு செய்தால் 200 ரூபாய் திருப்பித் தருகிறோம் என்று கூறி தமிழர்களிடம் 1200 கோடி ரூபாய் சுருட்டிய அமைப்புதான் இது.
விவரம் அறிந்த அமெரிக்க பங்கு வர்த்தகக் கட்டுப்பாட்டு அமைப்பு இவர்களின் சுமார் 600 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி அதனை விற்று முதலீட்டாளர்களுக்கு அரைவாசிப் பணமாவது அளிக்க முயற்சி செய்து வருகிறது.
அந்த அமைப்பின் பினாமிக்கள்தான் இப்போது தமிழ்நாட்டில் வள்ளலார் பெயரில் சில நகரங்களிலுள்ள சங்கங்களைக் கைப்பற்றி அதன் பெயரில் “பெருவெளிக்குள்தான் சர்வதேச மையம்” கட்டவேண்டும் என்று இங்கே கூவித் திரிகிறார்கள். மேலும் அதற்கு ஆதரவாளர்களை உருவாக்க பல கோடிகள் பணம் அள்ளி இறைக்கிறார்கள்.
அப்படி வாரி இறைக்கும் பொய்ச் சங்கத்தினர் எவரும் பரம்பரைப் பணக்காரர்கள் அல்ல, அவர்கள் ஒன்றும் பெரும் தொழில் அதிபர்கள் அல்ல, சிட்டுக்குருவி லேகியம் எனும் பெயரில் மக்களை ஏமாற்றி மருந்து எனும் பெயரில் குப்பைகளை விற்கும் சில்லறைகள்தான் அவர்கள். நண்பன் பாவுண்டேஷன் வருவதற்கு முன்னர் கடன்காரர்களாக சுற்றிக் கொண்டிருந்தவர்கள்தான் அவர்கள்
அப்படியானால் அவர்களிடம் அந்தப் பணம் எப்படி வந்தது ?!
1. கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தை வெள்ளையாக்க விரும்பும் அரசியல் கட்சியினர் பணமாக இருக்க வேண்டும்.
2. நண்பன் பாவுண்டேஷன் அடித்த பணம் 1200 கோடி. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து 600 கோடிதான். மீதமுள்ள 600 கோடி எங்கே ?!
ஆக, அந்தப் பணமாகவும் இது இருக்கலாம்.
வள்ளலாரின் 106 ஏக்கர் நிலத்தினுள் “சர்வதேச மையம்” எனும் பெயரில் 100 கோடி ரூபாயில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதனை நண்பன் பவுண்டேஷன் பினாமிக்கள் நடத்தும் “சங்கத்திடம்” ஒப்படைத்து விடும் இந்து சமய அறநிலையத் துறை. இதுதான் திட்டம்.
அந்தப் பினாமி சங்கம் அதன்பிறகு உலக அளவில் தமது வசூல் வேட்டையைத் தொடரும்.
இதில் உற்று நோக்க வேண்டியது என்னவெனில் “வள்ளலார் சர்வதேச மையத்திற்கு” தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ள தொகை 100 கோடி ரூபாய் மட்டும்தான்.
ஆனால், அதை பெருவெளிக்குள்தான் கட்டவேண்டும் என்று ஆதரவு திரட்ட மட்டுமே ஒவ்வொரு நகரங்களிலும் உள்ள வள்ளலார் அமைப்புகளுக்கு நன்கொடை எனும் பெயரில் லஞ்சம், அடுப்பு, பாத்திரம், வாகனம், நீதிமன்றத்தில் வழக்குச் செலவு என இதுவரை சுமார் 100 கோடிக்கும் மேல் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
வெறுமனே சோறு போடும் வள்ளலாரின் அமைப்பை இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து “ஆட்டையைப் போட” இவ்வளவு துடிப்பதன் பின்னணியில்….உலக அளவில் கிடைக்கும் அபரிமிதமான வசூல் பணம்தான் முக்கியக் காரணியாக உள்ளது. மேலும், கருப்புப் பணத்தை பல்வேறு நாடுகளில் இருந்து சர்வதேச மையம் மூலமாக வெள்ளையாக்கியும் கொண்டு வர முடியும் !
ஆகமொத்தம் வாழ்நாள் முழுதும் ஒரு வெள்ளைத் துணியை மட்டும் உடலில் சுற்றிக்கொண்டு, தமக்கென ஒரு குடிசை கூட அமைத்துக்கொள்ளாத இராமலிங்க வள்ளற் பெருமான் பொதுமக்களிடமிருந்து 106 ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று பசித்தவர்க்கு சோறு கொடுத்து, மக்கள் மரணமிலாப் பெருவாழ்வு வாழ வழிவகை செய்து கொடுத்த திருவருட்பெருவெளித் தலத்தை பாதுகாப்பதை விட்டுவிட்டு அதைப் பணம் காய்க்கும் மரமாக மாற்றத்துடிக்கும் கொள்ளைக்கூட்ட பினாமிக்கள் மீது அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசுக்குத்தான் அவப்பெயர் உருவாகும்.
தொடக்கத்திலிருந்தே இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசுக்குப் பெரும் சிக்கலைதான் ஏற்படுத்தி வருகிறது. காரணம், எந்தவித அடிப்படைப் புரிதலும் இல்லாமல், யாரோ எதையோத் தவறாக சொல்ல அதை நம்பி அரசு இங்கே கால்வைத்தது.
ஒரு சிறு எடுத்துக் காட்டைச் சொன்னால் புரியும்.
வடலூர் வள்ளலாரின் திருவருட்பெருவெளித் தலத்தில் வழிபாட்டுக்கான நாள் மாதம்தோறும் பூச நட்சத்திர நாள், சிறப்பு வழிபாட்டுக்கான நாள் ஆண்டு தோறும் தை மாதம் வரும் பூச நட்சத்திர நாள். மற்ற நாட்களில் அன்றாட சோதி வழிபாடு நடைபெறும். இதுதான் இந்தத் தலத்தின் சிறப்பே.
ஆனால், அரசுக்கு இந்தத் தகவலை திரித்துச் சொல்லியிருக்கிறார்கள் இந்த பினாமி சங்கத்தினர். அதாவது, ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டும்தான் வழிபாடு, மக்கள் வருகிறார்கள். மற்ற நாட்களில் பாழடைந்து கிடக்கிறது என்று அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டு அரசை நம்ப வைத்தியிருக்கிறார்கள். மேலும், சர்வேதச மையம் கட்டினால் அன்றாடம் கூட்டம் வரும் என்று கதை அளந்திருக்கிறார்கள்.
அன்றாடம் மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் மாதப் பூசம் அன்றும் தைப்பூசம் அன்றும் இந்த 106 ஏக்கர் பெருவெளித் தலத்தில் வந்து நிற்பவர்களுக்குதான் அண்ட – பிண்ட ஒளி விளக்கம் கிடைக்கும். அதாவது அன்றுதான் பேரண்ட (விந்து) ஒளியும், சிற்றண்ட (மனித விந்து) ஒளியும் ஒன்று கூடும். அனைத்து வளங்களையும் மக்கள் அடைந்து மரணமிலாப் பெருவாழ்வு வாழ்க்கையை நோக்கிப் படிப்படியாக நகர்த்தப்படுவார்கள் என்பதுதான் வள்ளலார் வகுத்துக் கொடுத்திருக்கும் வழிபாட்டு முறை.
இதற்கிடையில், வரும் டிசம்பர் மதம் “வள்ளலார் சர்வதேச மாநாடு” என்ற பெயரில் அரசியல் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் உண்மையான வள்ளலாரின் பின்பற்றாளர்கள் எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதால், தலைக்கு 500 ரூபாய், புடவை துணி, வேட்டி, குளு குளு வசதி கொண்ட வாகனங்கள், இவர்களை அழைத்து வரும் ஆட்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு வாரி இறைக்கிறார்கள்.
இதற்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை 10 கோடி ரூபாயாம். அதாவது மக்கள் வரிப்பணம்.
எங்கே எப்படி இந்த ஆட்டம் முடியும் என்பது அருட்பெருஞ்சோதி ஆண்டவரும், வள்ளலாரும் மட்டுமே அறிந்த இரகசியம்.
பெருவெளித் தலம் குறித்து முழு விளக்கம் அறிய : “வடலூர் வள்ளற் பெருமானாரின் திருவருட் பெரு வெளித்தலம் திரிப்புகளும் பேருண்மைகளும்” எனும் நூலை வாங்கிப் படியுங்கள்.
வடலூரில் ஞானசபை அருகே கல்யாணி புத்தகக் கடையிலும், அஞ்சல் வழியில் பெற 90805 68865 எனும் வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
-தமிழ் ஊடகம் வார இதழ், 18/112025




