-ஐயா பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
கடந்த திருவள்ளுவர் ஆண்டு 22.03.2057, (05.04.2026) அன்று வட அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் – மெட்ரோ பகுதியில் வட அமெரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (NORTH AMERICAN THAMIZH NATIONAL ASSOCIATION) முதல் மாநாடு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இம் மாநாட்டின் தனிச் சிறப்புகள் பல இருக்கின்றன. இதன் முதல் தனிச்சிறப்பு ‘தமிழ்’ என்பதை ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனி போல் ‘TAMIL’ – டமில் என்று எழுதாமல் ‘THAMIZH’ – ‘தமிழ்’ என்று எழுதியதாகும்.
தமிழ்நாட்டு மாநில ஆட்சியை 1967 இல் கைப்பற்றிய தி.மு.க. “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்தபோது, அவர்களின் ஆங்கிலேய எசமானர்கள் வைத்தபடி “TAMILNAD” என்று ஆங்கிலத்தில் மாற்றிச் சொன்னார்கள். அப்போது ம.பொ.சி. அவர்கள் ‘THAMIZH NADU’ என்று மாற்றச் சொல்லியும், வட மாநிலத்தவர் – வெளி நாட்டினர் உச்சரித்திட – எளிதாக இருப்பது ‘TAMILNADU’ தான் என்று கூறிவிட்டார் அண்ணா! NAD என்பதை NADU என்று மட்டும் மாற்றினார்.
இனம், மொழி, தாயகம், மெய்யியல் (தத்துவம்), அரசியல் எதிலும் தற்சார்பில்லாதவர்கள், அயலாரைப் பின்பற்றுவோர் திராவிட அரசியலார்! அவர்களைப் பின்பற்றும் நடிகர் விஜய், தம் கட்சிக்கு TAMILAKA VETRI KAZHAKAM என்று ஆங்கிலத்திலும் – தமிழக வெற்றிக் கழகம் என்று தமிழிலும் பெயர் வைத்து இரட்டை வேடம் போட்டுள்ளார். ஆனால் அதே பெயரில் உள்ள கழகம் என்பது மட்டும் ‘KALAKAM’ என்று எழுதப்படாமல் ‘KAZHAKAM’ என்று எழுதப் படுகிறது. தி.மு.க. வினரும் தங்கள் கட்சியில் உள்ள கழகத்திற்கு ‘ZH’ போடுகிறார்கள். ஆனால் திராவிட என்பதை ‘DRAVIDA’ என்று எழுதுவார்கள்.
வட அமெரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரிலுள்ள மற்றொரு சிறப்பு “தமிழ்த்தேசியம்” என்பதாகும். தமிழ்நாட்டில் செயல்படும் நமது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பெயரில் ஏற்கெனவே “தமிழ்த்தேசியம்” இடம் பெற்றுள்ளது.
தமிழ்த் தேசிய எழுச்சிக் காலம்
தமிழ்த்தேசியத்தின் எழுச்சிக் காலம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் வளர்ந்து கொண்டுள்ளதைப் பார்த்து வருகிறோம். அந்த எழுச்சியின் தொடர்ச்சிதான் வட அமெரிக்காவில் (U.S.A.) தமிழர்களால் ‘வட அமெரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ அமைக்கப்பட்டு, அதன் முதல் மாநாடு நடந்துள்ளதாகும்.
இம் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து வட அமெரிக்கா சென்று பணியாற்றிவரும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் முதன்மை ஆற்றல்களாகவும், வட அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்கள் – கனடாவில் இருந்து வந்த தமிழர்கள் – மலேசியத் தமிழர்கள் முதலானோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் மிக மிகச் சிறப்பு “தமிழ்த்தாய் வாழ்த்து”டன் மாநாடு தொடங்கியது. இங்கு பாடியது தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது திணித்த ‘திராவிடத் தாய் வாழ்த்து’ அல்ல! பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய அசல் “தமிழ்த் தாய் வாழ்த்து!” “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே, என் தமிழ்த் தாயே” என்று இளம் தமிழ்ப் பிள்ளைகள் பாடியதைக் கேட்டபோது மெய் சிலிர்த்தது! அடுத்து வட அமெரிக்க நாட்டுப் பண் பாடினார்கள்.
வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் இம் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் இரவி. சுப்பிரமணியம் அவர்கள் நம்பிக்கை ஒளி வீசும் வரவேற்புரை வழங்கினார். மாநாட்டிற்கு வருகை தந்திருப்போரை – “குடும்பத்தினரே” என்று விழித்து – தமிழ்க் குடும்பப் பாசத்துடன் சுருக்கமாகப் பேசினார். வட அமெரிக்கக் கூட்டமைப்பின் தலைவரும் மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவருமான முனைவர் தணி குமார் சேரன் அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடங்க வேண்டிய தேவை எப்படி எழுந்தது? ஏற்கெனவே ‘தமிழ்க் கூட்டமைப்பு’ என்ற பெயரில் தமிழுக்கு எதிரான வேலைகள் எப்படி அரங்கேறுகின்றன என்பவற்றைப் பேசி, அச் சிக்கல்களுக்கான தீர்வாகத்தான், நமது அசல் இனமான தமிழ் இனத்தின் பெயரில் நேரடியாகப் புதிய அமைப்பு தேவைப்பட்டது என்பது உள்ளிட்ட விளக்கங்கள் பல கொடுத்தார்.
வெளி நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் கடைபிடிக்க வேண்டிய சில பழக்க வழக்கங்கள் பற்றிய புதிய விளக்கங்கள் கொடுத்தார். வெளி நாட்டில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்தாலும் தமிழர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளும் போது தமிழிலேயே பேசிக்கொள்ள வேண்டும்! குடும்ப உறுப்பினர்களுக்குள்ளும் தமிழிலேயே பேசிக்கொள்ள வேண்டும்! அதுபோல் நமது பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டைச் சுருக்கமாக “தமிழகம்” என்று அழைக்கவே கூடாது; “தமிழ்நாடு” என்று மட்டுமே சொல்ல வேண்டும் என்றார்.
தமிழ்த்தேசியம் என்ற தேசியம் தமிழர்கள் அனைவருக்கும் உரியது. இந்த இயற்கையான மரபு வழிவந்த – ‘தமிழர்’ என்பதை மறைத்து ‘திராவிடர்’ என்றும் ‘இந்தியர்’ என்றும் கூறும்படி தமிழின மறுப்பாளர்கள் சொல்லித் திரிகிறார்கள். ‘திராவிடர்’ என்ற பெயரில் மரபு இனமும் இல்லை – தேசிய இனமும் இல்லை. இந்தியா என்பது பல இனங்களை – பல தாய்மொழிகளைக் கொண்ட ஒரு நாட்டின் பெயர். அதுவும் ஆங்கிலேயக் காலனி ஆதிக்க வாதிகள் சூட்டிய பெயர். ‘இந்தியர்’ என்ற பெயரில் ஓர் இனம் இருப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.
எனவே தமிழர்கள் இந்தியாவில் – தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும், வெளி நாடுகளில் வாழ்ந்தாலும், தங்களைத் “தமிழர்கள்’ என்றே கருத வேண்டும் – கூறிக்கொள்ள வேண்டும்! இவ்வாறான கருத்துகளை மையமாக வைத்துப் பேசினார் ஐயா தணி குமார் சேரன் அவர்கள்.
பின்னர் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சசிகுமார் ரெங்கநாதன், திரு. செந்தில் வாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வரும் 2026 சூலை மாதம் நடைபெறவுள்ள பேரவை விழாவிற்கு தமிழர்கள் திரண்டு வருமாறும் அழைப்பு விடுத்தனர். அதுபோல் பல தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் உரையாற்றினர்.
சிறப்புரைகள் :
தமிழ்நாட்டிலிருந்து சிறப்புரையாளர்களாக தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சியின் தமிழ் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் – முனைவர் தா. மணி, டிஎன் டிவி (TN TV) தமிழ் ஊடக நிறுவனர் திரு. விசுவா என்கிற வளர்மெய்யறிவான், தமிழ்ப் பேரரசுக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. இயக்குநர் வ. கௌதமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். ‘தமிழ்த் தேசியம்’ தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் எழுச்சி பற்றியும், அது எட்ட வேண்டிய இலக்குகள் குறித்தும் சிறப்பாகப் பேசினர்.
“வெல்லட்டும் தமிழ்த் தேசியம்” என்ற தலைப்பில் திரு. சங்கர் தங்கவேல் நெறியாள்கையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முனைவர் சுந்தர் குப்புசாமி, திரு. பாலமுருகன் சம்பந்தம், திரு. அகத்தாய்வன் தங்கவேலு, திரு. இளம்பரிதி கருப்பன், திரு. அரங்கன் கன்னியப்பன், திரு. வேல் ஆகியோர் பேசினர்.
“திராவிட அறிவுறை” (அறிவுரை அல்ல) என்ற தலைப்பில் இளம்பரிதி வழங்கிய கவிதை மண்டபத்தில் எழுச்சி ஊட்டியது.
‘நாடு கடந்த தமிழீழ அரசின்’ தலைமை அமைச்சர் மாண்புமிகு. உருத்திர குமாரன் அவர்கள் பன்னாட்டு அரசியல் சூழலைப் பயன்படுத்தி, நாம் – நம் தமிழீழ உரிமைகளை மீட்பதற்குரிய நகர்வுகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாடல்கள், நடனங்கள் என முழு நிறைவாக வட அமெரிக்காவில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நடந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தேர்தல் வெற்றிக்கு . . .
இம் மாநாட்டில் பத்து (10) தீர்மானங்கள் திரு. இராசா இளங்கோவன் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இவற்றில் சிகரம் வைத்த தீர்மானம், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்த வேண்டும்” என்பதாகும்.
தமிழ்நாட்டுத் தமிழர்களே !
தமிழ்நாடு, தமிழர்களுக்கான மூலத் தாயக நாடு. ஆனால் பல நாடுகள் தமிழர்களின் நிகழ்கால தாயகங்களாக விளங்கி வருகின்றன. அங்கெல்லாம் எவ்வளவு வாய்ப்பு வசதிகள் இருந்தாலும் தமிழர்களின் மூலத் தாயகமான தமிழ்நாட்டின் வளர்ச்சி – இன எழுச்சி – தமிழர்களின் இன்னொரு மூலத் தாயகமான தமிழீழத்தில் நடந்த தமிழினப் பேரழிவுகள், படுகொலைகள், இவற்றுக்கான தீர்வுகள், தமிழீழம் அமைதல் ஆகியவற்றின் மீது தான் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் கவலைப் படுகிறார்கள் – கவனமாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுத் தமிழர்களே, தமிழ்நாட்டில் மட்டும் எட்டு கோடி பேர் வாழ்கிறோம்; வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் நலன்கள், அவர்களோடு பண்பாட்டு உறவு கொள்ளுதல், அவர்களின் கோரிக்கைகள் முதலியவற்றில் நாமும் அக்கறை செலுத்துவோம். தமிழ்நாட்டில் வாழும் எட்டு கோடி தமிழர்களும், இந்தியாவில் இதர மாநிலங்களில் வாழும் 2 கோடி தமிழர்களும்,வெளி நாடுகளில் வாழும் தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருப்போம். அவர்கள் நலனில் அக்கறையோடு செயல்படுவோம். அவர்கள் எல்லாம் எதிர்பார்க்கும் உலகத் தமிழர்களின் நலம் காக்கும் தாயகமாக தமிழ்நாட்டை வளர்ப்போம்! “தமிழ்த் தேசியம் என்பது தமிழ்நாட்டு முழக்கம் மட்டுமல்ல, அது உலகத் தமிழர்களின் முழக்கம்” என்ற நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம். அவர்களின் காப்பாளர்களாக தமிழ்நாடு விளங்கட்டும்!
“நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று வட அமெரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்தையும் நெஞ்சில் நிறுத்திப் பணியாற்றுவோம்!

