HD பிரிண்ட் – 7 GB அளவில் கோப்பு இருந்ததாகத் தகவல் !
–தமிழ் ஊடகம் பன்னாட்டு செய்திக்குழு
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை – நீதிமன்ற வழக்கு என்று இன்னமும் வெளியாகாமல் உள்ள நிலையில் அதன் முழுப்படமும் இணையத்தில் கசியவிடப்பட்டது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல நூறு கோடி ரூபாய் முதலீட்டுடன் எடுக்கப்பட்ட படம் வெளியிடப்படாமல் கால தாமதம் ஆகிவரும் நிலையில் அதற்கான முதலீட்டு வட்டியே அந்தத் தயாரிப்பாளர் – நிதி வழங்கியவர்களுக்குப் பெரும் இழப்பு.
இத்தகைய நிலையில் முழுப் படமும் இணையத்தில் வெளியாகி அதனை ஆயிரக்கணக்கானோர் தரவிறக்கம் செய்து பார்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்துள்ள நிலையில் தரவிறக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் குறித்த இணையதளங்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் சில அன்பர்கள் தரவிறக்கம் செய்யப்பட்ட ஜனநாயகன் படம் குறித்து அவர்கள் அறிந்த தகவல்களை தமிழ் ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டனர்.
இது வழக்கமான “பைரேட்”களால் வெளியிடப்பட்டது போலத் தெரியவில்லை என்கிறார்கள் அவர்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இது சுமார் 7 GB அளவில் உள்ள கோப்பாக இருந்தது என்கிறார்கள். பொதுவாக திரைப்படங்களை கள்ளத்தனமாக இணையத்தில் வெளியிடும் “பைரேட்”கள் MB கணக்கிலான காணொலியாகவே வெளியிடுவார்கள், GB கணக்கில் வெளியிடமாட்டார்கள் என்றும் மேலும், பொதுவாக திரையரங்கில் வெளியாகாத படங்களை அந்தப் பைரேட்டுகள் வெளியிட்டதில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
இத்தகைய நிலையில் வெளியிடப்பட்ட அந்த திரைப்படப் ப்ரிண்டில் 14/1/2026 என்ற தேதி உள்ளது என்று கூறுகிறார்கள் அவர்கள். அது பொங்கல் நாளைக் குறிக்கும் தேதி.
படத்தில் ஏராளமான வன்முறைக் காட்சிகள் உள்ளதாகக் கூறும் அவர்கள், “அண்ணா நகர் மாணவி பிரச்சனை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட தமிழ்நாடு மக்கள் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளையும் எதிர்த்து விஜய் அதாவது டி வி கே – தளபதி வெற்றி கொண்டான் போராடுவதாகவும், விஜய் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இது அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்பது போலவும்” படம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
படம் தொடங்குவதே “2026 தேர்தல் நாள்” என்றுதான் தொடங்குவதாகவும், படம் முழுவதும் கதைநாயகன் விஜயை டிவிகே, டிவிகே என்றே அழைக்கும் வகையிலும் படம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்தப் படத்தைப் பார்க்கிற விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உணர்ச்சி வசப்படும் எவரும் விஜய்க்கே வாக்களிக்கும் வகையிலேயே கதை, திரைக்கதை, வசனம், காட்சிகள், பெயர்கள் அனைத்தும் ஜனநாயகனில் அணு அணுவாக செதுக்கி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
படம் முழுக்க தளபதி தளபதி டிவிக்கே டிவிக்கே என்ற குரலே ஒலிப்பதாகவும் கூறப்படுகிறது.

