– தலை சுற்ற வைக்கும் அதிகார அரசியல் !
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அரசு உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம். அதிலும் பொதுவாக, காவல்துறை அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் மாற்றப்படுவார்கள்.
ஆளும் கட்சிக்கு ஆதரவான அதிகாரிகள் பணியில் இருந்தால் தேர்தலில் ஒரு பக்கச் சார்பாக செயல்பட வாய்ப்புகள் உள்ளதால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதன்காரணமாகவே தேர்தல் பாதுகாப்புக்கு எல்லைப்பாதுகாப்புப் படையினர் அதாவது துணை இராணுவப் படையினர் நியமிக்கப்படுவதும் வழக்கம்.
எனினும், தமிழ்நாட்டில் குறிப்பாக காவல்துறை இயக்குனர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர், தலைமைச் செயலாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பணியாற்றிய டேவிட்சன் ஆசிர்வாதம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வியப்புக்குரிய நடவடிக்கை
இது சற்று வியப்புக்குரிய நடவடிக்கை. காரணம் சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம் என்கிற நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையில் பணியாற்றிய ஒருவரை காத்திருப்போர் பட்டியலுக்கு ஏன் மாற்றவேண்டும் என்கிற கேள்வி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
ஆனால், மாற்றம் செய்யப்பட்ட மற்றும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட அதிகாரிகளை சுற்றிச் சுழலும் அரசியல் இந்த வியப்பிற்குக் கிடைக்கும் பதிலாக உள்ளது.
தமிழ்நாட்டின் காவல்துறை இயக்குநராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவாலின் பணிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவடைந்தது.
அதற்கு மூன்று மாதங்கள் முன்னதாகவே அடுத்த இயக்குநாரகத் தகுதி வாய்ந்தவர்கள் பட்டியலை இந்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால், சங்கர் ஜிவால் பணிக்காலம் முடிந்தும்கூட அப்படி ஒரு பட்டியலைத் தமிழ்நாடு அரசு அனுப்பவேயில்லை.
வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, உச்சநீதி மன்றங்களில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அடுத்த காவல்துறை இயக்குநரை விரைவாகத் தேர்ந்தெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் வந்து மாற்றல் நடவடிக்கை எடுக்கும் வரையிலும் ஏழு மாதங்களாக, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுபோல நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவேயில்லை.
மாறாக, செப்டம்பர் முதல் இந்த மாறுதல் நடைபெறும் ஏப்ரல் மாதம் வரையில் பொறுப்பு காவல்துறை இயக்குனராக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டிருந்தார்.
வெங்கட்ராமன், காவல்துறை இயக்குனராக ஆவதற்கு அனுபவமும், மூப்பும் அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஐந்தாறு அதிகாரிகள் அவரை விடத் தகுதியுடன் காத்திருந்தனர். அதில் ஒருவர்தான் தற்போது தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் ராய் ரத்தோர்.
பொதுவாக, அசாதாரண சூழல் இருக்கும்போது மட்டுமே இதுபோன்று பொறுப்பு டிஜிபி நியமிக்கப்படவேண்டும் என்கிற விதி இருந்தும்கூட அத்தகைய எந்தச் சூழலும் இல்லாத நிலையில் பொறுப்பு இயக்குனராக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இப்படி டிஜிபி பணியிடத்தை அனுபவமும், பணி மூப்பும் இல்லாத ஒரு அதிகாரியை பொறுப்பு அடிப்படையில் வைத்து நிரப்பவேண்டிய தேவை என்னவிருக்கிறது என்பதில்தான் அரசியலே இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
காவல்துறையின் ஒவ்வொரு பிரிவுக்கும் உரிய அதிகாரிகள் இருந்தாலும்கூட டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் முதலமைச்சரிடம் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி அனைத்து அதிகாரிகளுக்கும் கட்டளை இடும் “சிறப்பு அதிகாரம்” கொண்டிருந்தார்கள் என்று விவரிக்கும் பெயர் வெளியிட விரும்பாத விவரம் அறிந்தவர்கள் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பிற அதிகாரிகள் திமுக அதிகாரிகள் போலவே செயல்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டுகளும் பலமாக எழுந்ததாகக் கூறுகின்றனர்.
சங்கர் ஜிவாலுக்கு அடுத்ததாக தகுதி வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் அனைத்து அதிகாரிகளுக்கும் கட்டளை இடும் “சிறப்பு அதிகாரம்” தமது கையைவிட்டுப் போய்விடும் என்பதாலேயே பொறுப்பு டிஜிபி நியமனம் போலவே, தமது அதிகாரத்திற்குக் கட்டுப்படும் அதிகாரிகளை மட்டும் முக்கிய இடங்களில் பணியில் விட்டு வைத்திருந்ததாக டேவிட்சன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவை ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள்தான்
இவை ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள்தான் என்று கூறும் தகவலாளர்கள், இந்த “அதிகாரிகள் மட்ட” அரசியலால் பல தகுதி வாய்ந்த அதிகாரிகள் உரிய பதவிக்கு, குறிப்பாக காவல்துறை இயக்குனர் – டிஜிபி பதவிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர்.
பொதுவாக காவல்துறை இயக்குநர் பொறுப்பு என்பதே இரண்டு ஆண்டுகள்தான். அதிலும், அந்தப் பொறுப்புக்கு மூப்பு அடிப்படையில் வரும் அதிகாரிக்கும் குறைந்தது ஆறுமாதம் பணிக்காலம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஏப்ரல் வரை கணக்கிட்டால் ஏழு மாத காலம் பொறுப்பு டிஜிபி ஒருவரை நியமித்து, பணி மூப்பு அடிப்படையில் பதவியேற்க வேண்டிய சீமா அகர்வால் போன்ற அதிகாரிகளுக்கு வாய்ப்பே இல்லாது செய்துவிட்டனர் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தேர்தல் வராமல் இருந்திருந்தால் அந்த வாய்ப்பு சந்தீப் ராய் ரத்தோருக்கும் காலாவதி ஆகியிருக்கக் கூடும் என்றும் விளக்கமாக எடுத்துக்கூறும் தகவலாளர்கள், இப்படி தாங்கள் மட்டுமே அதிகார மையமாக இருக்க வேண்டும், ஆட்சி அதிகாரத்தின் “கட்டளை அதிகாரிகளாக” இருக்க வேண்டும் என்கிற ஒரு சில அதிகாரிகளின் செயலால்தான் தேர்தல் ஆணையம் இந்த அளவு இறங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறுகின்றனர்.
தகவலாளர்களின் தகவல் சரிதானா என்று நாம் சரிபார்க்க முனைந்தபோது, பொறுப்பு ஏற்றவுடன் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இட்ட உத்தரவு ஒன்று அதை உறுதிப்படுத்துகிறது.
அதாவது, “தங்களுக்கு நேர் மேலே பணியில் இருக்கும் அதிகாரிகளின்” கட்டளைக்கு மட்டுமே காவல்துறையினர் பணிந்து வேலை செய்தால் போதும், “பிற” துறைகளில் உள்ள அதிகாரிகளுக்குப் பணிந்து செயல்பட வேண்டியதில்லை” என்று உத்தரவிட்டிருந்தார்.
இது நேரடியாக டேவிட்சன் போன்ற “சிறப்பு அதிகார” மையத்தைக் குறித்தது என்று அடித்துச் சொல்கிறார்கள் தகவலாளர்கள்.
மாநகர ஆணையர் அருண் இடம் மாற்றம்
மேலும், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செயல்பாடுகள் குறித்தும் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மாநகரத் துணை ஆணையர்கள் வழக்குகள் குறித்து நேரடியாகத் தமது ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்த நிலையில் மாநகர ஆணையர் அருண் இன்று இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னதாக, தலைமைச் செயலாளர் மற்றும் பொறுப்பு டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதை “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “அதிகாரிகள் மாற்றத்தில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்துக்கும் திமுகவுக்கும் இரகசிய உடன்பாடு” இருப்பதாக பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்.
ஆக, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் 58 ஆண்டுகள் பக்கச் சார்பு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்கிற உறுதிப்பாட்டுடன் செயல்படவேண்டிய உயர் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு ஏற்ப மாறி நின்று கட்சிக்காரர்கள் போலவே செயல்படுவது குடியரசு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்பதையே இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
–தமிழ் ஊடகம் சிறப்பு செய்தியாளர் குழுவினர்

