தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
பருந்தார் ஜொய்ங்க் என்று வந்து அமர்ந்தார்.
அதென்னவோ தெரியலை விஜய் செய்தின்னா பருந்தார் எங்கெங்கோ இருந்து பறந்து வந்துவிடுகிறார் என்றோம்.
கோபம் வந்துவிட்டது பருந்தாருக்கு. சரி, நான் கிளம்பறேன் என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டு புறப்படவே ஆயத்தமாகிவிட்டார்.
ரொம்ப கிராக்கி செய்யாதீர்கள் பருந்தாரே…சூடாகாதீர்கள் விளையாட்டுக்காக சொன்னோம். எங்களுக்கு மட்டும் விஜய் செய்திகள் வேண்டாமா. இந்தாங்க மோர் குடியுங்கள் என்று கொடுத்து கூல் ஆக்கினோம்.
பிறகு அவரே ஆரம்பித்தார்.
விஜயின் மனைவி சங்கீதா குறிப்பிடும் நடிகை சமூக ஊடகங்கள்ல விவாதிக்கப்படும் மூன்றெழுத்து நடிகை அல்ல, உண்மையில் ஏழெழுத்து நடிகை என்றுதான் விவரம் அறிந்த வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
ஓ..அடடே அப்புறம்….
அது ஒருபுறம் கிடக்க, இந்த மணமுறிவு மனு குறித்த செய்தி கசியப்போவது விஜய்க்கு முன்கூட்டியே தெரிஞ்சிருக்கு. அதனாலதான் தமது கட்சிக்காரர்கள் தன்னோட அனுமதி இல்லாமல் எந்த ஊடக விவாதங்களிலும், நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ள வேண்டாம்னு விஜய் உத்தரவு போட்டிருக்கார்.
இது வேறயா…ம் ….
விஜயின் மனைவி சங்கீதா எந்த நடிகைன்னு பெயர் குறிப்பிடாம போட்டதால இப்போ திருடனைத் தேள் கொட்டியது போல விஜயின் நடிகை நண்பீஸ் உட்கார்ந்திருக்காங்க.
ஓ…..
அப்புறம் செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு தொடர்பான அறிவிப்பை விஜய் தரப்புல வங்கிக்காம இருந்திருக்காங்க. அதனால நீதிமன்றப் பணியாளர் மூலமாக விஜய் வீட்டுச் சுவற்றில் அந்த அறிவிப்பை ஒட்ட ஆயத்தமாகிட்டு இருக்காங்க நீதிமன்றத் தரப்பு. அப்படி ஒட்டினா ஊடகங்கள் அதைப் பெரிதாக்கிவிடும்னு முன்கூட்டியே இந்த செய்தியைக் கசிய விட்டதே விஜய் தரப்புதான்னும் ஒரு டாக் ஓடுது.
ம்…தலை சுத்துது.
மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்க என்று சம்பந்தமே இல்லாம ஒரு பழமொழியைச் சொல்லிக்கொண்டே திமுக பக்கம் தாவினார் பருந்தார்.
உண்மையில் பண பலம், கூட்டணி பலம், செய்த நலத்திட்டங்கள்னு 200 சீட் அடிச்சு நொறுக்கிடலாம்னு நினைச்சு பரப்புரை செய்த திமுக இப்போ அது பத்தி வாயே திறக்கறதில்ல.
ஆமாம், பாஜக அதிமுக கூட்டணி ஏற்பட்டவுடன் 200 சீட் வெற்றி என்கிற முழக்கத்தைத் திமுக கை விட்டுடுச்சே என்று எடுத்துக் கொடுத்தோம்.
ஆமாம், அது மட்டுமல்ல கூட்டணி பலமா இருந்தாலும் அதிமுகவின் நகர்வுகள்தான் திமுகவுக்குப் பெரிய சிக்கல்.
அதிமுக எங்க நகர்ந்தது…அதான் கூட்டணியே இன்னும் இறுதி வடிவம் பெறலை. எங்க கூட்டணி கலையாம பலம்மா இருக்குன்னு சொல்லிக்கறாங்களே உடன் பிறப்புகள், என்று கேட்டோம்..
அதெல்லாம் இல்லை, எடப்பாடி பழனிச்சாமி நகர்வுகள் வெளில தெரியலையே தவிர அவர் பெரிய திட்டத்தோடு காய்களை நகர்த்துறார். ஆனா பெரியதாக அறிவிக்கலை அவ்வளவே. இந்த இறுக்கமான நிலையில, நீங்க டிடிவியை இழுத்துடீங்களா நாங்க ஓபிஎஸ் சை இழுக்கிறோம். கூடுதலா தேமுதிகவையும் இழுக்கிறோம் என்கிற அரசியல்தான் திமுக செய்கிறது.
ம்…விஜய் ராகுல் சந்திப்பு, காங்கிரஸ் – தவெக கூட்டணின்னு பேச்சு ஓடுதே என்று கேட்டோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு தவெக பக்கம் நின்று கவுரவமாக இருக்கவே ஆசை. பணக்கார வீட்டுல வேலைக்காரனா இருக்கறதை விட ஏழைக்குடிசைல முதலாளியா இருந்துட்டு போயிடலாம்னு அவங்க விரும்பறாங்க. ஆனா, திமுகவுக்கு காங்கிரசை விட மனசில்லை. வெளில கெத்தாப் பேசினாலும், உள்ளுக்குள் ஒரு உதறல் திமுகவுக்கு இருக்கு. அதனால, காங்கிரசை இழுத்து உள்ளே போட்டுக்கவே திமுக முயற்சி செய்யும்.
நாம் தமிழர் மாநாடு….என்று தொடங்கியவுடனே பருந்தார் தொடர்ந்தார்.
சீமானும் அவரது தம்பி தங்கைகளும் சாதிச்சிட்டாங்க. உலக அளவுல வாழுற ஈ*ழத் தமிழர்கள் சிலரே சீமான் மீது நம்பிக்கை இல்லாம ஒரு விரக்தியிலதான் இருந்தாங்க. ஆனா, இந்த மாநாட்டைப் பார்த்த பிறகு சீமான் சாதாரண சராசரி அரசியல்வாதி அல்ல, தேசியத் தலைவர் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கார்னு அவங்களும் உணர்ச்சி பொங்க மகிழ்ச்சி அடைஞ்சிருக்காங்க.
சொல்லிக்கொண்டே பறந்துவிட்டார் பருந்தார்.

