“ஐய்யயோ சீமான் தேர்தலில் வெற்றி பெறலை…
ஐய்யயோ நாம் தமிழர் இன்னும் எம்.எல்.ஏ, எம்பி கூட ஆகலை !”
முதலைக் கண்ணீர் வடிக்கும் திராவிட முகமூடிக் கைக்கூலிகள் !
தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தொடங்கினா, அதிமுக அல்லது திமுகவுடன் சீட்டும், நோட்டும் வாங்கிக் கொண்டு எம்.எல்.ஏ, எம்பி ஆகிடனும், அத்தோட அந்தக் கட்சிகளின் தலைமைகளுக்குத் துதி பாடிக்கொண்டு இறுதிவரை கொத்தடிமைகளாக, தொங்கு சதைகளாக இருக்கவேண்டும்.
அப்படியிருந்தால் ஆஹா அருமை அட்டகாசம் பேஷ் பேஷ் எனும் அவலமான நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் இந்தத் திராவிட முகமூடித் திருவாளர்கள்.
பிராமணரல்லாதவர்களுக்கான இயக்கமாகத் தொடங்கப்பட்டு பிறகு பிராமணர் இல்லாத அரசியலே இல்லையென ராஜாஜி தொடங்கி பிரசாந்த் கிஷோர் பாண்டே வரை பிராமணர்களோடு ஒட்டியும் உறவாடியுமே வாழ்ந்து வருகிறது திமுக தலைமை.
ரங்கராஜ் பாண்டேவாக இருந்தாலும் எச். ராஜா ஷர்மாவாக இருந்தாலும் ஓடோடிச் சென்று கரம் கோர்த்து கண்களில் நீர் மல்க உறவாடுகிறது திமுக.
பிராமணப் பார்ப்பனப் பத்திரிகை உரிமையாளர்களை அறிவாலய மேடைக்கே வரவழைத்து கவுரவிக்கிறது திமுக.
இராஜ இராஜ சோழன் பிராமணர்களுக்கு / பார்ப்பனர்களுக்கு இடம் கொடுத்துவிட்டான் என்று குய்யோ முறையோ என்று கத்திக் கூப்பாடு போடும் திராவிட இயக்கத் தொங்கு சதைகள் முன்னிலையிலயே பார்ப்பனர் எஸ்.வி. சேகரின் அப்பாவின் பெயரை ஒரு தெருவுக்கே சூட்டுகிறது திமுக. தொங்கு சதைகள் வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கின்றன.
திமுக தலைவரின் மனைவி ஒரு கோயில் விடாமல் சென்று வழிபடுகிறார். 4000 கோயில்களுக்கு மாய்ந்து மாய்ந்து குடமுழுக்கு செய்து பெருமைப்படுகிறது திமுக.
ஆக, திக – திமுகவின் பிராமண / பார்ப்பன எதிர்ப்பு என்பதே ஒரு வடிகட்டிய அண்டப்புளுகு என்பது உறுதியாகிறது.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பிராமண / பார்ப்பன எதிர்ப்பை முன்வைப்பது. அதிகாரத்தைப் பிடித்தபின் பிராமண பார்ப்பானர்களுக்கு பல்லக்குத் தூக்குவது எனும் நாடகத்தை 1949 லிருந்து விடாது நடத்தித் தமிழர்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர் திராவிட முகமூடிகள். திராவிட முகமூடி இயக்கத்தின் அடிப்படையான பிராமணர் அல்லாதவர்களுக்கான இயக்கம் – கட்சி என்பதே பொய் எனும்போது பிற கொள்கைகளைத் தனித்தனியே பார்க்க வேண்டியதில்லை.
பெண்ணுரிமை தொடங்கி சாதியற்ற சமூக நீதி வரை எல்லாம் நாடகமே, பொய்யே, புரட்டே.
பணம், பதவி, விருது, கையூட்டு, இலவசம், மது, திரைக்கவர்ச்சி உள்ளிட்டவற்றை வைத்து மயக்கி மயக்கியே ஆட்சி அதிகாரத்தை எப்பாடுபட்டாவது கைப்பற்றிவிட வேண்டியது அதன்பிறகு வாக்களித்தவர்களின் தலையில் மிளகாய் அரைப்பது, சுரண்டிக் கொள்ளையடிப்பது எனும் ஒரே உத்தியை 1949 லிருந்து தொடர்ந்து செய்து வருகின்றன திராவிட கட்சிகள்.
பள்ளி மாணவ மாணவிகள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை திமுக. அது பெரிய நெட்ஒர்க் என்று அதிகாரமற்ற ஒரு எளிமை மனிதர் போல சப்பைக் கட்டுக் காரணம் சொல்கிறது திமுக.
பணத்தைக் கொடுத்தால் வாலாட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள் அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் என்று தமிழர்களை ஏளனமாக எடைபோட்டு வைத்திருக்கிறது திமுக.
இப்படிப்பட்ட அரசியல் களத்தில், கூட்டம் – மாநாடு போட பணம், மது, பிரியாணி கொடுக்காமல், வாக்குகளுக்குப் பணம் கொடுக்காமல் 1 விழுக்காட்டில் தொடங்கி 8.22 விழுக்காடு வாக்குகள் வரை பெற்று தனித்து முன்னேறிக் கொண்டிருக்கிற நாம் தமிழர் கட்சியை எப்பாடுபட்டாவது ஏதாவது ஒரு கூட்டணியில் திருமாவளவன் போல, இடது சாரிகள் போல, வைகோ போல பிரேமலதா விஜயகாந்த் போல, பாமக போல தொங்கு சதைகளாக ஆக்கிவிட வேண்டும் என்பதில் திராவிட முகமூடிகளைவிட பத்திரிகை ஊடகவியலாளர்கள், சமூக ஊடகர்கள் சிலரே முனைப்பாக இருக்கின்றனர்.
இவர்களை இவ்வளவு முனைப்பாக வைத்திருப்பதே திராவிட முக முடிகளின் “ஊடகப் பிரிவு” தரும் “சிறப்பு” ஊதியம்தான்.
நாம் தமிழர் கட்சியினரிடமும் திரு. சீமானிடமும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும், நேர்காணல்களிலும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தவறாமல் கேட்கப்பட்டு வரும் கேள்விகள் “நீங்க ஏன் கூட்டணி வைக்கலை , அப்புறம் எப்படி எம்எல்ஏ, எம்பி ஆவது, இப்படியே இருந்தா எப்படி ? நீங்களும் கூட்டணி சேர்ந்தால்தானே ஆச்சு, உங்க தொண்டர்கள் சோர்ந்து போயிடமாட்டாங்களா ?” என்பது. இதில் சிலர் ஒருபடி மேலே சென்று ” இப்படி வெற்றி பெறாமல் இருப்பதே திமுகவை வெற்றி பெற வைக்கவே” என்று வினோதமாக உருட்டுவது என்று எப்படியாவது நாம் தமிழரை கூட்டணிச் சாக்கடையில் விழ வைக்கத் துடிக்கிறார்கள்.
இதுதான் நாம் தமிழரின் மகத்தான வெற்றி. இதுதான் நாம் தமிழரின் கொள்கைகளுக்கான அங்கீகாரம். இதுதான் நாம் தமிழர் குறித்து மக்களுக்கான நம்பிக்கையை அதிகரிக்கும் அடிப்படை.
ஆமாம்…சீமானிடம் விடாது இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருங்கள். அப்போதுதான் நாம் தமிழர் இன்னமும் ஆழமாக வேரூன்றும், திராவிட முகமூடிகளை வேரும் வேரடி மண்ணுமாக அகற்றும். உண்மையான தமிழ்த் தேசியம் மேலும் வலுவடையும்.
–தமிழன் கரிகாலன்

