“உலகம் தலைகீழாக மாறிவிட்டது – நாம் அனைவரும் இதை உணர்கிறோம்” இதுதான் ஐநா மனித உரிமைகள் ஆணையர் போல்கர் டீர்க் (Volker Türk) சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தின் 61 வது கூட்டத் தொடரை கடந்த 1 ம் தேதி (மார்ச் 1, 2026) தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் முதல் இரண்டு வரிகள்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், “யாரிடம் அதிகாரம் இருக்கிறது, எப்படி அதிகாரம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறுகிறது, எப்படி அதிகாரம் உருவாகிறது” என்று அதிகாரம் குறித்த விவாதங்கள்தான் எங்கும் நடைபெறுகின்றன. நிலம், ஆற்றல்(வளம்), கவன ஈர்ப்பு ஆகியவற்றுக்கான போட்டிகளில்தான் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் எந்த எல்லை வரை ?!
உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தவா ? மேலும் கூடுதலாக அதிகாரத்தைப் பெருக்கவா ? செயற்கை நுண்ணறிவை விண்வெளியில் செலுத்தவா ? ஆனால் நிச்சயமாக இவை தவிர வேறு காரணங்களுக்காகவும் அதிகாரம் சேவையாற்ற வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள மக்களிடம், “நீங்கள் அதிகாரத்திடமிருந்து என்ன பெற விரும்புகிறீர்கள் என்று கேட்டால், “அமைதி, பாதுகாப்பு, மரியாதையுடன் கூடிய தரமான வாழ்க்கை” என்றுதான் ஒன்றுபோலவே பதிலளிப்பார்கள்.
சுருக்கமாகச் சொல்வதானால், மக்கள் அதி தீவிரமாக, மனித உரிமைகளைத்தான் பெற விரும்புகிறார்கள். எப்போது தலைவர்கள் இந்த மனித உரிமைகளை அளிக்கத் தவறி விடுகிறார்களோ அப்போது பின்விளைவுகள் ஏற்படுகின்றன.
தெருவில் போராடும் ஜென் Z க்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள்.
எப்போது அந்தத் தலைவர்கள் இந்த மக்களைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கிறார்களோ அப்போது நம்பிக்கை உடைபடுகிறது. எப்போது அந்தத் தலைவர்கள் அதிகாரத்தைத் தங்களின் சுய நலனுக்காகப் பயன் படுத்துகிறார்களோ அப்போது அவர்கள் சுரண்டலிலும், அடிமைப்படுத்தலிலும் ஈடுபடுகிறார்கள்.
மனித உரிமைகள் என்பவை வெறும் கோட்பாடுகளின் தொகுப்பு அல்ல.
மனித உரிமைகளும், அந்த உரிமைகளின் அடிப்படையிலான விதிகளும், அதிகாரமிக்கவர்கள் விரும்பியதையெல்லாம் செய்யாமல் தடுக்கக் கூடியவை. அவர்கள் (ஜென் Z) ஆதிக்கம் செய்யப்படுவதையும், அடிமைப்படுதலையும் ஏற்க மறுக்கிறார்கள். எப்படி வாழவேண்டும் என்று மக்கள் விரும்புவதை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள்.
“ஏமாறாதீர்கள். உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள்கூட எல்லாவற்றிற்கும் பிறரையும் சட்டத்தையும் நம்பித்தான் இருக்கிறார்கள்,”
தகராறுகளைத் தீர்க்க மிரட்டல் விடுப்பதும், படை பலத்தை பிரயோகிப்பதும் அடிக்கடியும், இயல்பாகவும் நடைபெறுகிறது. கடந்த 2010 ம் ஆண்டிலிருந்து ஆயுதப் போராட்டங்கள் சுமார் 60 என்கிற எண்ணிக்கையில் இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளன.
அப்பாவிப் பொதுமக்களின் மீதான தாக்குதல் மூன்றில் ஒருமடங்கு அதிகரித்துள்ளது. மேலும், உலகம் உண்மையில் மிகவும் அபாயகரமானதாக மாறியிருக்கிறது. உண்மையில் நல்ல மனமுடைய ஒருவரும் அதை விரும்பவில்லை.
வன்முறைக்குப் பதிலாக வன்முறையையே ஒரு ஒருங்கிணைந்த கொள்கையாகத் திருப்பித் தரக் கூடாது. பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடந்தபோது அது பெரிய அளவில் உலக அளவிலான கூக்குரலாக எதிரொலித்தது. ஆனால் இன்று, மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதாரம் பேணும் இடங்கள் மீது நாளொன்றுக்கு சராசரியாகப் பத்துத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைச் சட்டக் கட்டுமானம் பன்னாட்டு அளவில் கண்களின் முன்னே சிதைக்கப்படுதற்கு உலகம் துணை போக முடியாது.
எனவே ஒவ்வொரு நாடும் உலகளாவிய பொதுவாதத்திற்கும், ஒற்றுமைக்கும் துணை நிற்க வேண்டும். போட்டிக் கதைகள், வரலாற்றுச் சார்புகளில் விழுந்துவிடாமல் இருக்கவேண்டும். அது உண்மைகளைப் பதிவு செய்து அலசி ஆய்ந்து (தவறு செய்யும்) ஒவ்வொருவருக்கும் எந்தவித சமரசமும் அளிக்காமல், எவரும் விடுபடப்படாமல் அனைவருக்கும் கடுமையாக ஒரே தரத்துடன் நடைமுறைப் படுத்தப்படுவதில் தொடங்குகிறது.”
என்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் போல்கர் டீர்க் (Volker Türk)

