– தொல்லியல் ஆய்வறிஞர் வெ.நாராயணமூர்த்தி
திண்டுக்கல் – திருப்பூர் மாவட்ட எல்லையில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளது கரியபிரான் கோயில்.
இக்கோயில் கொமரலிங்கத்தில் 800 ஆண்டுகளுக்கு முன் பெருமாளுக்காக வைணவக் கோயிலாக கொங்குச் சோழர்களால் கட்டப்பட்டது.
இக்கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில் கோயிலுக்குரிய ஒரு கல்வெட்டு புதிதாகக் கண்டறியப்பட்டது.
இக்கோவிலில், 10 வரிகளில் உள்ள கல்வெட்டு ஒன்று மிகவும் சிதைந்து போய்த் துண்டுகளாக உள்ளன. கரியபிரான் கோயில் வடபகுதிக் கோட்டைச் சுவரில் ஆங்காங்கே இடம் மாற்றி மாற்றி 3 துண்டுகளாக வைக்கப்பட்டிருந்த இக் கல்வெட்டு தற்போது புதுப்பிப்பு பணிக்காக கீழே இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
மிகவும் சிதைந்துள்ளதால் கல்வெட்டில் அரசன் உட்பட யாருடைய பெயரும் கிடைக்கவில்லை. கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி. 12 — 13 ஆம் நூற்றாண்டு என கணிக்க முடிகிறது.
இக் கோயில் தொடர்பான வேறு சில தரவுகளின் படி இம்மன்னர் வீரராஜேந்திர சோழராக இருக்கலாம் என்று கருதமுடிகிறது.
ஏதோ ஒரு காரணத்துக்காக யாராலோ கை விடப்பட்ட விளைநிலம், ஒரு கொங்கு சோழ மன்னரின் ஆட்சியில், அரசால் மீட்டெடுக்கப்படுகிறது.இதை “இந்நிலம் நம்முதானமையில்”என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
அவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட நிலத்தின் நான்கு எல்லைகளைக் கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது.
மீட்டெடுக்கப்பட்ட நிலம் ஒருவர் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் அந்த நிலத்தில் இருந்து வரும் விளைச்சலை ஸ்ரீபண்டாரத்துக்கு ( கரியபிரான் கோயில் கருவூலம்) அளிக்கவேண்டும் என்று கூறுகிறது.
கரியபிரான் ஊரிலே எழுந்தருளி (உற்சவம்) திருவாராதனை செய்யும் போது அமுது படைக்க ஸ்ரீபண்டாரத்தில் ஒப்படைக்கப்பட்ட நெல்லில் இருந்து இருதூணி குறுணியும், விதைமுக்கலமும் ஸ்ரீபண்டாரத்தில்(கருவூலத்தில்) இருந்து ‘அளந்து’ எடுத்து வர வேண்டும் என்றும் கல்வெட்டு கூறுகிறது. மீட்டெடுக்கப்பட்ட நிலம் கரியபிரானுக்கு “திருவிடையாட்டமாக”-அதாவது வைணவக் கொடையாக- அளிக்கப்பட்டதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
அத்துடன் இந்நிலம் ‘குடிநீங்காத் தேவதானமாக’ இறைவனுக்கு கொடை அளிக்கப்பட்டது என்றும் கல்வெட்டு கூறுவதால், இந்த நிலத்தின் சிலபகுதிகள் மக்கள் குடியிருப்பாக இருந்தது என்றும் தெரிகிறது.
எனவே மக்களுக்குத் தொல்லை தராமல் அவர்களை வேறு இடத்துக்கு குடிபெயர்த்தாமல் இந்நிலம் இறைவனுக்கு கொடை அளிக்கப்பட்டது என்பதும் தெரிகிறது.
இந்நிலத்தைப் பெற்றுக் கொண்டவரும் அவருடை வாரிசுகளும் ‘மக்கள் மக்களாக’ அரசுஆணையை ஏற்று நடத்திக் கொள்ளலாம் என்றும் கல்வெட்டு கூறுகிறது.
இதைக் ‘கல்லிலும் செம்பிலும்'(கல்வெட்டாகவும்-செப்பேடாகவும்) வெட்டிக் கொள்ள அரசர் ஆணை பிறப்பித்து அனுமதி அளித்தார் என்று கல்வெட்டு இறுதியில் முடிகிறது.
இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டாகும்.
பண்டைய நாட்களில் சொந்தக் காரணங்களுக்காக ஊரைக் கைவிட்டு தூரப் பகுதிகளுக்கு வெளியேறுபவர்களின் நிலங்களையும், குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்று அரசால் பறிமுதல் செய்யப்பட்டவர்களின் நிலங்களையும் அரசு மீட்டெடுத்து இறைவனுக்கு கொடையாக அளிப்பது அன்றைய வழக்கமாக இருந்தது.
மீட்டெடுக்கப்பட்ட நிலங்களை தரிசாய்க் கிடக்க விடாமல், ஒருவரிடம் ஒப்படைப்பதால் அரசுக்கு வரிவருவாய் பெருகும் என்பதோடு, ஒருகுடும்பமும் தலைமுறை தலைமுறையாக இதனால் பயன்பெறும் என்பதும் பண்டைய சோழ அரசின் எண்ணமாக இருந்தது என்று கருதலாம்.
மீட்டெடுக்கப்பட்ட நிலத்தின் துல்லியமான நான்கு எல்லை குறிப்பு-நிலம் திருவிடையாட்டம் எனும் பெயரில் கரியபிரான் கோயிலுக்கு கொடைஅளிப்பு- விளைச்சலை கருவூலத்தில் சேர்ப்பது- உற்சவ நிகழ்வில் அமுதுபடைக்க, கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்ட தேவையான நெல்லின் பண்டைய ‘தூணி’ ‘குறுணி’ ‘கலம்’ போன்ற முகத்தல் அளவுகள்- அவை துல்லியமாக அளந்தேதான் எடுக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனை, போன்ற செயல்கள் பண்டைய தமிழ் அரசுகளின் நிர்வாகத் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இந்த ஆய்வுக்கு கொமரலிங்கம் செந்தில்குமார், பிரபு,ஜீவா ஆகியோர் உடனிருந்து உதவிபுரிந்தனர்.
08-03-2026.

