-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்
கடந்த அக்டோபர் மாதவாக்கில் இந்தியக் கடற்படை நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி “இந்தியப் பெருங்கடலின் பாதுகாவலன் நமது இந்தியக் கடற்படை” என்று பெருமிதம் பொங்கப் பேசினார்.
காரணம், இந்தியப் பெருங்கடல் மற்றும் அதன் அருகில் உள்ள பன்னாட்டுக் கடற்பரப்பில் அன்றாடம் ஆயிரக்கணக்கான கப்பல்கள் விலை உயர்ந்த பொருட்களை ஏற்றிச் சென்று வருகின்றன. அந்த அடிப்படையில் பெரும் கடற்பரப்பை கிழக்கு, மேற்கு, தெற்காகக் கொண்டிருக்கும் இந்தியா தம்மைச் சுற்றி மூன்று பக்கங்களிலுமுள்ள கடற்பரப்பின் “பாதுகாவலன்” என்று பிரதமர் மோடி வருணித்ததில் உள்ளார்ந்த ஆழமான பொருளும், பொறுப்பும் உண்டு.
ஆனால், பிரதமர் மோடி அவர்களின் இந்தக் கூற்றைப் பொய்யாக்கி இருக்கிறதா இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஈரான் போர்க் கப்பல் மூழ்கடிப்பு சம்பவம் என்று சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் பன்னாட்டுக் கடற்படை கூட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஈரானின் IRIS டேனா எனும் கடற்படைக் கப்பலும் பங்கேற்றது. இந்த முகாம் தொடர்பில் நடைபெற்ற பன்னாட்டு வீரர்களின் அணிவகுப்பை இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் பார்வையிட்டார் .
இந்த IRIS டேனா போர்க்கப்பல் முழுக்க முழுக்க ஈரானின் சொந்த தயாரிப்பாகும். இது உலக அளவில் 60,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாகப் பயணம் செய்து ஈரானின் கடற்படைப் பெருமையை பறைசாற்றி வந்தது.
அந்த வகையில், இந்த கடற்படை முகாமிலும் இந்தக் கப்பல் பங்கேற்றது. இது போர்க்கப்பல் என்றாலும், அதில் இருந்தவர்கள் பயிற்சி மற்றும் அணிவகுப்பு செய்யக்கூடிய வீரர்களே.
இந்தக் கப்பல் தமது இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கையைத் தாண்டி தமது நாட்டை நோக்கித் திரும்பிய வேளையில் இந்திய மற்றும் இலங்கைக் கடற்பரப்புக்கு அருகே பன்னாட்டுக் கடல் எல்லையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
இந்தக் கப்பலிலிருந்து காப்பாற்றக்கோரி அவலக்குரல் “சமிக்கைகள்” இந்தியக் கடற்படைக்கும், இலங்கைக் கடற்படைக்கும் கிடைத்துள்ளன
எனினும், இலங்கைக் கடற்படை மற்றும் வானூர்திப் படையினர் மட்டும் விரைந்து சென்று அங்கே தத்தளித்துக் கொண்டிருந்த 32 வீரர்களைக் காப்பாற்றிக் கரைக்கு கொண்டு வந்து இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். மீதம் சுமார் 80 பேர்வரை காணவில்லை என இலங்கைக் கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. அவலக்குரல் சமிக்கைகளைக் கேட்டும் இந்தியக் கடற்படை எந்த முயற்சியும் எடுக்கவில்லை அல்லது அது தொடர்பான பொது அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்தத் வழியாக இரண்டாவது ஈரான் கப்பல் ஒன்றையும் இலங்கை அரசு பாதுகாத்து திரிகோணமலையில் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு விருந்தினராக வந்த ஈரானியக் கப்பலை இந்தியா ஏன் காப்பாற்றவில்லை என்கிற கேள்வியுடன், ஈரானியக் கப்பல் செல்லும் வழியில் அமெரிக்க நீர்மூழ்கிப் போர்க்கப்பல் நின்று கொண்டிருப்பது இந்தியக் கடற்படைக்குத் தெரியாதா என்ற கேள்வியும் பொது ஊடகங்களில் எழுப்பப்படுகிறது.
அமெரிக்க கப்பற்படை முன்னாள் வீரர் ஒருவர், இந்தியக் கடல் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தியது என்று வெளியிட்ட கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு, ஈரான் கப்பல் ஏன் காப்பாற்றப்படவில்லையென்ற கேள்விக்கு எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.
இந்தியாவின் கடற்பரப்பின் பாதுகாவலன் என்று பிரதமர் நரேந்திர மோடியால் வருணிக்கப்பட்ட இந்தியக் கடற்படையினர் ஏன், ஈரான் கப்பலை இன்று இலங்கை அரசு காப்பாற்றியதுபோல காப்பாற்றவில்லை என்கிற கேள்வியுடன், இந்தியாவின் கடற்பரப்பு மீதான அதிகாரப் பொறுப்பையும் , ஆதிக்கத்தையும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் இந்தியா இழந்துவிட்டதா என்கிற கோணத்திலும் பொதுப் பரப்பில் விவாதிக்கப்படுகிறது.
ஈரான் தாக்குதலை இஸ்ரேல் – அமெரிக்கப் படையினர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் நட்பு பாராட்டியதும், மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதையும் நினைவு கூறும் எதிர்க்கட்சியினர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கன்னசெட் விருதும் மோடிக்கு அளிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த அதீத நட்பு மற்றும் உறவு காரணமாகவே ஈரான் கப்பலை இந்தியா கண்டுகொள்ளாமல் விட்டதா என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இந்த சூடான விவாதங்களில் எப்ஸ்டீன் கோப்புகளும் முக்கிய இடம் பிடித்துள்ளன.
தமது நாட்டுக்கு அழைக்கப்பட்ட விருந்தினராக வந்த ஈரானின் போர்க்கப்பல் அமெரிக்கக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டது, ஈரான் அதிபர் அயத்துல்லா காமனெய் கொல்லப்பட்டதற்கு நான்கு நாட்கள் கழித்து வெளியுறவுச் செயலாளர் ஒருவர் இரங்கல் தெரிவித்தது ஆகியவை இந்திய வெளியுறவில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

