+ உமர் கயாம் உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற கவிஞர்களைப் படைத்த நாடு ஈரான்
+ திரைப்படக் கலையில் அகாடமி, ஆஸ்கர் உள்ளிட்ட உலக அளவில் 300 விருதைகளைப் பெற்ற நாடு ஈரான் !
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்
ஈரான் ஒரு அரேபிய இஸ்லாமிய நாடு, அது ஒரு வளைகுடா நாடு, சக இஸ்லாமிய நாடுகளுடன்கூட நட்பு கொள்ளாத நாடு, சர்வாதிகார நாடு, ஆயுதக் குழுக்களுக்கு உதவும் நாடு என்கிற சுமார் 50 ஆண்டுகால பிற்கால அரசியல் பன்னாட்டு முத்திரைகளால் தற்போதய ஈரான் அடையாளம் காணப்பட்டாலும்கூட, அந்த மண்ணின் மைந்தர்கள் அரேபியர்கள் அல்லர். அதாவது அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்லர் அவர்கள். அவர்கள் பெர்சிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
இன்று ஈரான் என்று அழைக்கப்பட்டாலும்கூட அந்த நாட்டின் பூர்வ குடிப் பெயர் பெர்சியா.
பெர்சியர்களே “சிந்து” நதிக்குத் தெற்கில் வாழ்ந்த இந்தியர்களை “சிந்துக்கள்” என்று அழைத்தனர். “சி” எனும் சொல்லை அவர்கள் “ஹி” என்று உச்சரிப்பதால் சிந்தியர்கள் இந்தியர்கள் ஆகி, ஆகி சிந்துக்கள் என்பது “ஹிந்து”க்கள் ஆகி அவையே நிலைத்துவிட்டன.
இன்றைய ஹிந்து மதம், ஹிந்துத்வம் என்கிற சொற்கள் எல்லாம், “சிந்து” எனும் நதியின் பெயரை அடிப்படையாகக் கொண்ட ஈரானின் பெர்சியர்கள் வைத்த பெயர்தான். ஆனால் அவர்கள் மதப் பெயராக இதைச் சூட்டவில்லை. சிந்து நதிக்குத் தெற்கே வாழும் அனைவரையும் குறிக்க ஒரு இடப்பெயராகத்தான் குறிப்பிட்டார்கள்.
பாரசீகக் கவிதைகள்
பெர்சியாதான் “பாரசீகம்” என்று தமிழில் வழங்கப்படுகிறது. பாரசீக நாடும் தமிழ்நாடும் பல நூறாண்டுகள் பண்பாட்டுத் தொடர்புடையவை. பாரசீகக் கவிதைகள் (Persian Poetry) சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையான, உணர்ச்சிப்பூர்வமான மரபைக் கொண்டவை. இவை காதல், தத்துவம், சூஃபித்துவம் (ஞானம்) மற்றும் நீதிநெறிகளை மையமாகக் கொண்டவை. ஒமர் கயாம், ரூமி, ஹாபிஸ், சாதி, பிர்தௌசி போன்ற உலகப்புகழ் பெற்ற பாரசீகக் கவிஞர்களை இந்த உலகிற்கு அளித்த மண் பெர்சியா / ஈரான்.

ஈரானிய பெர்சியர்களின் ஜொராஸ்ட்ரியம், சூஃபித்துவம் சிறந்த ஞான நெறிகள்.
ஒமர் கயாமின் கவிதைகளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானிய / பெர்சியக் கம்பளங்கள்
பெர்சிய ஈரானிய கலை வேலைப்பாடுடன் கூடிய கைவினைக் கம்பளங்கள் உலகப் புகழ் பெற்றவை. கண்களுக்கும் கருத்துக்கும் இன்பம் சேர்க்கும் கலைநயம் கொண்ட வண்ணக் கம்பளங்கள் ஈரானின் தனிச்சிறப்பான படைப்புகள்.

Khatam-kari (Marquetry)
கதம்-கரி எனும் உலோக, மரவேலைப்பாடுகளில் கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் செய்வதிலும் பெர்சியர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள், தனித்த திறன் வாய்ந்தவர்கள்.

Ghalam-zani (Metal Engraving)
கலாம் ஜானி என்றழைக்கப்படும் உலோகங்களில் கலைநயம் படைக்கும் தனித்திறனும் பாரசீகத்தின் தனித்திறன்களின் ஒன்று.

Mina-kari (Enamel Working):
கலை வேலைப்பாடு கொண்ட பொருட்களில் ஓவியங்கள் வரைவதிலும் ஈரானியர்களுக்கு / பெர்சியர்களுக்கு ஈடு இணை கிடையாது.

கட்டுமானக் கலை
பெர்சியர்களின் / ஈரானியர்கள் கட்டுமானக் கலை அழகு மிக்கது. கலையம்சம் கொண்ட இவர்களின் கட்டுமானக் கலை உலகப் புகழ் பெற்றது.
கோடை வெப்ப காலங்களுக்கு ஏற்ப குளிர்சாதன பெட்டிகள் போல இவர்கள் கட்டும் கட்டுமானங்கள் இவர்களின் பொறியியல் அறிவைப் பறை சாற்றுகின்றன. கணிதம், மருத்துவம், இலக்கியம், கட்டுமானம், கலை, கைவினைப் பொருட்களை உருவாக்குதல், அறிவியல், விஞானம் ஆகியவை ஈரானியப் பெர்சியர்களின் தனிச்சிறப்புகள்.

இசை
ஈரானிய / பெர்சிய இசை தனிச்சிறப்பு வாய்ந்தது. அதில் ஒருவர் முழு நிபுணத்துவம் பெற 100 ஆண்டுகள் தேவைப்படும் என்று கூறுமளவுக்கு ஆழமானது, தனிச்சிறப்பு வாய்ந்தது.

பெர்சியர்களின் விருந்தோம்பல் மிகச்சிறந்தது, உயர் மரியாதை அளிக்கக்கூடியவை.
எல்லாவற்றையும்விட பெர்சியர்களின் “மீள் தன்மை” அவர்களை எத்தனையோ படையெடுப்புகள், ஒடுக்கு முறைகள், அடக்கு முறைகள் கடந்தும் நிலைபெற வைத்திருக்கிறது. அதற்குக் காரணம் அவர்களின் பல ஆயிரமாண்டுகாலத் தொன்மை, பண்பாட்டுத் தொடர்பு, ஆழமான அவர்களின் மரபணு வலிமை.
பெர்சியர்களின் உணவு முறைகள் மிகவும் சுவையானவை, ஆரோக்கியமானவை.

அதேபோல, ஈரானியத் திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை. உலக திரைப்பட விழாக்களில் ஆஸ்கர், அகாடமி உள்ளிட்ட சுமார் 300 விருதுகள் பெற்றவை ஈரானியத் திரைப்படங்கள்.
ஆனாலும், 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு கடுமையான தணிக்கைக்கு (Censorship) ஆளாகியது ஈரானியத் திரைப்படத்துறை. இஸ்லாமிய ஒழுக்க விதிகளுக்கு மீறி எந்தக் காட்சியும் வைக்க முடியாது. உடல் சார்ந்த “தொடுதல்” கூட இருக்கக் கூடாது, ஆடைகள் அரைகுறையாக இருத்தல் கூடாது என பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இதையும் மீறி ஈரானியத் திரைப்படங்கள் உலக அரங்கில் இரசிக்கப் படுவதற்குக் காரணம் அந்தப் படங்களில் கையாளப்படும் “கதை சொல்லும் விதம்” மற்றும் படமாக்கப்படும் விதம். திரைப்படங்களே பாரசீகக் கவிதைகள் போல மிளிரும்.
Asghar Panahi, Majid Majidi, Mohsen Makhmalbaf, Dariush Mehrjui ஆகியோர் உலகப் புகழ் பெற்ற ஈரானியத் திரைப்பட இயக்குனர்கள்.
அந்தத் திரைப்படங்களில் எல்லாம், ஈரானியர்கள் நிலை குறித்த சங்கேதமான குறியீட்டுச் செய்திகள் கட்டாயம் இருக்கும். வறுமை, ஏழ்மை குறித்த பதிவுகள் மனதை நெகிழவைக்கும். Children of Heaven போன்ற திரைப்படங்கள் பார்ப்போரை நெகிழவைக்கும் ஈரானியத் திரைப்படங்களில் மிகவும் சிறந்தவை.
ஈரானியர்கள் விளையாட்டுத் துறைகளில் குறிப்பாக மல்யுத்தத்தம், குதிரைப் பந்தயம், உடற்கட்டமைப்பு, கைப்பந்து, எடை தூக்குதல், மலையேற்றம், கபடி ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள். பிற்காலத்தில் கால்பந்தில் சிறந்த அணிகளை உருவாக்கிய நாடு ஈரான். ஒலிம்பிக்கில் இடம்பெறுகிறது.
ஆனாலும், எல்லாத் துறைகளிலும், பெண்களுக்கான முழு விடுதலை, திரைப்படப் படைப்பாளிகளுக்கான முழுக் கருத்து சுதந்திரம், விளையாட்டுத் துறையினருக்கான சுதந்திரம் என்பதெல்லாம் அரசாங்கத்தின் ஷியா இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் ஈரானியர்கள் என்று இன்று அழைக்கப்படும் பெர்சியர்கள் தங்களின் பூர்வகுடி அறிவை இழக்காமல் சுமந்து சுமந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துகின்றனர். அதற்கு அடிப்படையாக அவர்கள் தங்களின் தாய் மொழியான பார்சி (பெர்சிய) மொழியை அழியாமல் காக்கிறார்கள், மொழியால் உருவான கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியலைத் தவறவிடாது பாதுகாக்கிறார்கள்.

