-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்
கடந்த 2003 ம் ஆண்டு ஈராக் நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்க இராணுவம் 2011 ம் ஆண்டுவரை அந்நாட்டுக்குள் இருந்துகொண்டு அந்த நாட்டைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
ஈராக்குக்கு எதிரான போர் என்கிற பெயரில் அமெரிக்காவின் 4,000 இராணுவத்தினரைப் பலி கொடுத்திருந்தார் அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ். இந்த அமெரிக்க – ஈராக் போரில் சுமார் 2,00,000 பேருக்கும் அதிகமான அப்பாவிகள் உயிரிழந்தனர்.

முன்னதாக, 2001 ம் ஆண்டு அமெரிக்காவின் செப்டெம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாதம் எங்கிருந்தாலும் ஒழிப்பதே தமது இலக்கு என்று அமெரிக்கா புறப்பட்டிருந்தது.
ஈராக் நாட்டில் சதாம் ஹுசேன் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாகவும், அவர் “பேரளவு மனிதப் படுகொ*லை செய்யும்” அணுகுண்டு, நுண்ணுயிரி, நரம்புகளை செயலிழக்க வைப்பது உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், செப்டம்பர் 11 தாக்குதலுக்குக் காரணமான அல் காய்தா அமைப்புக்கு சதாம் ஹுசேன் ஆதரவு கொடுத்ததாகவும் தொடர் பரப்புரைகளை மேற்கொண்டார் ஜார்ஜ் டபிள்யூ புஷ்.
செப்டம்பர் 11 தாக்குதலால் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்த அமெரிக்க மக்களுக்கு அதிபரே இவ்வாறு சொல்வதால் ஈராக் மீது போர் தொடுப்பதே சரி என்று பட்டது. எனவே, ஈராக் மீது போர் தொடுக்க அமெரிக்காவின் பெரும்பான்மை மக்கள் ஆதரித்து வாக்களித்தனர்.
ஆனால், 2003 ம் ஆண்டு தொடங்கி 2011 ம் ஆண்டுவரை ஈராக்கில் சல்லடை போட்டுத் தேடியும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னது போல ஈராக்கில் எந்தவிதப் “பேரளவு மனிதப் படுகொ*லைகள்” செய்யும் ஆயுதங்களோ அல்லது அவற்றைத் தயாரிக்கும் மூலப் பொருட்களோ ஒன்றும் கிடைக்கவில்லை.
ஆக, 2003 லிருந்து 2011 ம் ஆண்டுவரை இத்தனை ஆண்டுகளில் அமெரிக்க இராணுவம் அங்கு செய்தது ஒன்றே ஒன்றுதான் சதாம் ஹுசேனைப் பதவியில் இருந்து இறக்கி அவரைத் தலைமறைவாக ஓடவிட்டுப் பிறகு அவரைப் பிடித்து தூக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது மட்டுமே.

ஈராக்கின் மீது அமெரிக்கா போர் புரிந்து சுமார் 23 ஆண்டுகள் ஈராக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, எந்தவித உலகம் போற்றும் சனநாயகத்தையும் அமெரிக்கா அங்கு நிலை நாட்டியிருக்கவில்லை.
அன்று ஈராக் மீது ஜார்ஜ் புஷ் போர் தொடுக்க முதலில் ஆதரவு தெரிவித்த அமெரிக்க மக்கள் பிறகு அங்கு அமெரிக்க இராணுவம் எந்த ஆயுதங்களையும் அல்லது ஆயுதங்கள் தயாரிக்கும் மூலப் பொருட்களையும் கண்டுபிடிக்கவில்லை, மாறாக பல லட்சம் கோடி அமெரிக்க டாலர் பணம் இழப்பு, 4,000 அமெரிக்க இராணுவப் படையினர் இழப்பு, 2,00,000 அப்பாவி மக்கள் இழப்பு என்பது மட்டுமல்லாது உலக நாடுகளிடம் இருந்து அமெரிக்கா தனிமையைப் படுத்தப்பட்டது மட்டுமே நிகழ்ந்ததை உணர்ந்தனர்.
நீண்டகாலம் கழித்து இரண்டாம் முறை பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தற்போது ஜார்ஜ் புஷ் போலவே மத்திய கிழக்கு நாட்டின் மீது குறி வைத்திருக்கிறார்.

அதே பல்லவி, “ஈரான் மக்கள் கொடுங்கோன்மை ஆட்சியில் சிக்கித் தவிக்கின்றனர், அவர்கள் தங்களை மீட்க அமெரிக்காவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். எந்த அதிபரும் கண்டுகொள்ளாத நிலையில் அவர்களுக்கு தான் மட்டுமே முன்வந்து உதவுவதாகவும் ஈரான் மக்கள் இந்த அமெரிக்காவின் போர்த் தாக்குதலைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும், இஸ்லாம் அடிப்படைவாத அரசை நீக்கிவிட்டு சனநாயக அரசை அமைக்க வேண்டும்” என்றும் டொனால்ட் ட்ரம்ப் அறைகூவல் விடுத்துக் கொண்டே ஈரான் மீது போர் தொடுத்துள்ளார்.
மேலும் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் பெரும் அச்சுறுத்தல் என்பதே டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் பரப்புரை.
அதனடிப்படையில், ஈரானிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருந்த நிலையிலும் மறுபுறம் இந்தத் தாக்குதலை டொனால்ட் ட்ரம்ப் தொடங்கியிருந்தார்.
ஆனால் இதில் டொனால்ட் ட்ரம்ப் அவசரப் பட்டுவிட்டார் என்று பெரும்பான்மை போரியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முக்கியமாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகம் பென்டகன், ஈரான் ஒரு அச்சுறுத்தல் என்று எங்கும் இதுவரை கூறவில்லை.
ஈரானும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்துதல் எங்கும் விடவில்லை.
அமெரிக்க மக்கள் மத்தியில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஒரு ஆன்லைன் வாக்கெடுப்பில் 25 விழுக்காடு மக்கள் மட்டுமே ஈரான் மீதான போருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருளை ஏற்றிக்கொண்டு இந்தியப் பெருங்கடலுக்குள் ஈரான் வசமுள்ள “ஹொர்முஸ் நீரிணை” மூலமாகவே உலக நாடுகளுக்குச் செல்லும் 20 விழுக்காடு எரிபொருள் கப்பல்கள் செல்கின்றன.
அந்த நீரிணையை ஈரான் அடைத்துவிட்டால் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அனைத்து எரிபொருள் விளையும் வானுயரத்திற்கு அதிகரிக்கும்.
இதனால் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
மேலும், ஏற்கனவே அமெரிக்கா பெரும் கடனில் தத்தளிக்கிறது. விலைவாசி உயர்வு, வரி உயர்வு, காப்பீட்டுத்திட்ட தவணை உயர்வு என மக்கள் பொருளாதார சிக்கல்களில் தவித்து வருகின்றனர்.
தேவையற்ற போர் செய்யமாட்டேன், அமெரிக்க மக்களின் நலனுக்காகவே பாடுபடுவேன் என்றெல்லாம் வசனம் பேசிவிட்டு இன்று தலைகீழாக நடந்து கொன்டு தன்னிச்சையாக டொனால்ட் ட்ரம்ப் நடந்து கொள்வதை அமெரிக்க மக்கள் இரசிக்கவில்லை.
சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளை மறைக்கவும், மடை மாற்றவுமே டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான போர் நாடகம் ஆடுவதாகவும், அமெரிக்காவின் தனித்தன்மையை இழந்து இஸ்ரேலின் நலனுக்காகவே டொனால்ட் ட்ரம்ப் பாடுபடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவின் தூதரகத்தை டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு மாற்றிவிட்டாரா என்ன என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

எல்லாவற்றையும் விட “ஆயத்துல்லா காமனெய்க்கு வயது 86. அவர் ஒருவரைக் கொ*ன்று விட்டால் ஒட்டுமொத்த ஈரானையும் அழித்துவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தவறான கணக்குப் போட்டுவிட்டார் என்பதும் மற்றுமொரு பார்வையாக உள்ளது. காரணம், ஆயத்துல்லா காமனெய் ஈரானில் உருவாக்கி வைத்திருப்பது ஒற்றைத் தலைமை அரசு அல்ல, அது 1,90,000 சிறப்புப் படை வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவ அமைப்பு, சுமார் 2,00,000 தன்னார்வப் படையினர் கொண்ட தனிப் பெரும் ஆயுதப் படையணியையும் அந்நாடு வைத்திருக்கிறது.
எல்லாவற்றையும்விட ஆயத்துல்லா காமனெய் கொ*ல்லப்பட்டால் அதை ஒட்டுமொத்த ஈரான் மக்களும் கொண்டாடி, ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்வார்கள், அந்த நேரத்தில் அமெரிக்க இராணுவம் உள்ளே புகுந்து ஆட்சி மாற்றம் செய்யலாம் என்று டொனால்ட் ட்ரம்ப் போட்ட கணக்கும் தாறுமாறாகத் தவறிவிட்டது. ஆயத்துல்லா காமனெய் இறப்பை ஒட்டுமொத்த ஈரானும் துக்கமாக அனுட்டிக்கிறது, அவரை ஒரு பெரும் தியாகியாக, கடவுளின் தூதுவராக உயர்த்திப் பிடிக்கிறது.
சரியோ தவறோ…ஈரான் ஒரு அடிப்படைக் கொள்கை, செயல்திட்டத்தோடு செயல்படும் நாடு, தலைவர்களை மட்டுமே நம்பி இருக்கும் நாடல்ல என்பதையும் டொனால்ட் ட்ரம்ப் கணிக்கத் தவறிவிட்டார் என்றே போரியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இப்போது அமெரிக்காவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் இறங்கியுள்ளன. ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, வடகொரிய நாடுகள் ஆயத்தமாக உள்ளன.
பேச்சுவார்த்தையில் முடிக்கவேண்டிய ஈரானின் பிரச்னையை உலகப் போர் அளவுக்கு இழுத்துவிட்டது டொனால்ட் ட்ரம்ப்தான்.

