ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடுத்திருக்கும் போர் குறித்து இரண்டுவித வேறுபட்ட கருத்துக்கள் அமெரிக்காவில் நிலவுகின்றன.
குடியரசுக் கட்சி (Republican) ஆதரவு செனட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈரானுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் நடத்தும் போருக்கு ஆதரவாகவும், எதிர்கட்சிகளான ஜனநாயகக் கட்சி (Democratic) பிரதிநிதிகள் போருக்கு எதிராகவும் பிரிந்து நிற்கின்றனர்.
ஈராக், ஆப்கானிஸ்தான், வெனிசுவலே உள்ளிட்ட பல நாடுகளின் மீது போர் என்கிற அடிப்படையில், பொய்களைப் பேசி அமெரிக்கா இழந்த இழப்புகள் ஏராளம் என்றும், போர் அறிவிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை, காங்கிரசுக்குத்தான் அதிகாரம் என்றும் கூறியும் எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும், ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக எந்த அச்சுறுத்தலும் விடுவிக்கவில்லையென்றும், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லையெனும் நிலையில் இந்தப் போர் தேவையற்றதும், காங்கிரசின் அனுமதி இல்லாமல் நடத்தப்படுவதால் இந்தப் போர் சட்ட விரோதமானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதையடுத்து செனட் மற்றும் மக்கள் பிரதிநிதி அவைகளில் இது தொடர்பாக வாக்கெடுப்புகள் புதன் மற்றும் வியாழனன்று நடைபெற்றன.
அதில், செனட்-ல் 54 க்கு 47 வாக்குகள் என்கிற ரீதியில் டிரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது. அதேபோல மக்கள் பிரதிநிதிகள் அவையில், 219 க்கு 212 என்கிற அடிப்படையில் டிரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது. இரு அவைகளிலும் ட்ரம்புக்கு ஆதரவாக குடியரசுக் கட்சி (Republican) உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
ஈரான் மீது ட்ரம்ப் தொடுத்துள்ள போருக்குக் கடிவாளம் போடும் இரண்டு தீர்மானங்களும் தோல்வியடைந்துள்ளன.
எனினும், கடும் எதிர்ப்புகளை மீறித் தொடர்ந்து போரை நடத்துவதால், எந்தப் புள்ளியில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது ? என்கிற பெரும்பாலான அமெரிக்க மக்களின் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டிய நிலையில் அதிபர் ட்ரம்ப் உள்ளார்.
இதற்கிடையில் 7 வது நாளாக இஸ்ரேல் – ஈரான், அமெரிக்கா இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

