– நாராயணமூர்த்தி, தொல்லியல் ஆய்வாளர்
நமது நண்பர் வளர்மெய்யறிவான் நிகழ்வு தள்ளிப் போனதால் இந்த நாளை போன மாதம் மேற்கொண்டு முழுமை அடையாத நவகண்ட ஆய்வுக்குப் பயன்படுத்த முடிவு செய்து ஊடக நண்பர்கள் பாலாஜி, சாதிக் உடன் குதிரை ஆற்றங்கரையில் இருந்த சிதிலமாகி பாழடைந்த கோயிலுக்குப் பயணப்பட்டேன்.
திருப்பூர் மாவட்டம் கொழுமத்துக்கு கிழக்கே குதிரையாற்றின் கரையில் போன மாதம் நாங்கள் பார்த்த இந்தப் பாழடைந்த கோயில் தற்போது திடீரென புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.சுவர்கள் சுண்ணாம்புப் பூச்சை ஏற்றுக் கொண்டிருந்தன.
கீழே மண்ணுக்குள் புதைந்திருந்த இந்த நவகண்டச் சிற்பம் நேராக ஊன்றுப் பட்டிருந்தது.

ஆடைஅணி அலங்காரங்களுடன் உள்ள ஒரு பெண்மணி(திருநங்கை) தன்தலையை தானே அறுத்துக் கொள்வது போன்று இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.இவ்வகைச் சிற்பங்களுக்கு நவகண்டச் சிற்பங்கள் அல்லது தற்பலிச் சிற்பங்கள் என்பது பெயர்.
பொதுவாக கடவுளுக்கு ஆடு கோழி போன்ற உயிரினங்களே பலியிடப்படும்.
ஆனால் உச்ச கட்டமாக மனிதர்களே பலி கொடுக்கப்படுவதும் பண்டைய காலத்தில் வழக்கத்தில் இருந்தது.
இவ்வகையான தற்பலியும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் யாருடைய வற்புறுத்தலும் இன்றி நடை பெறும். அதன் அடையாளமாக பலி கொடுப்பவர் தன் தலையை தானே அறுத்து பலி கொடுப்பார். அவர் இறந்த பின் அவர் நினைவாக ஊர் மக்கள் இது போன்ற சிற்பத்தை வடித்து அவர் தியாகத்தை போற்றி வணங்குவது பண்டைய வழக்கம்.
இவ்வகையான தற்பலிகள் ஏதாவது வேண்டுதல் பொருட்டு கொற்றவை தெய்வத்தின் முன்பு கொடுக்கப்படும்.
தற்பலி கொடுத்தவரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு ஊர்மக்களும் அரசும் நிலங்களை கொடை அளிப்பது அன்றைய வழக்கமாய் இருந்தது. இவ்வாறான பலிகளுக்காக கொடுக்கப்படும் நிலங்கள் ‘உதிரப்பட்டி’ ‘நவகாணி’ ‘நீத்தோர்பட்டி’ ‘உதிரக்காணி’ போன்ற பெயர்களில் அழைக்கப்படுவதை தமிழகத்தின் பல கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.
இங்கு தற்பலி கொடுத்த பெண்மணி (திருநங்கை) அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை அணிகலன்களுடன் காணப்படுகிறார். தலையில் அள்ளிமுடிந்த அழகிய கொண்டை, நெற்றிச் சுட்டி, நெற்றிப் பொட்டுடன் கழுத்தில் கண்டிகை சரப்பளி ஆரம் ஆகிய அணிகலன்களுடன் காட்சி தருகிறார். காலில் அணிகலன்கள் ஏதுமில்லை. வங்கியும் வளையல்களும் கூடிய இரண்டு கைகளும் ஒரு நீண்ட வாளை கழுத்தின் பின்புறம் வைத்து அழுத்திய நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. குறுகிய மார்பகங்களுடன் இடை முதல் தொடை வரை மட்டுமே உள்ள ஆடை அணிந்துள்ளார் இடையின் இரு பகுதிகளிலும் முன் பகுதியிலும் உள்ள கொசுவம் இவர் ஒரு நாட்டிய நங்கை என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே இவர் அருகில் உள்ள கொழுமம் வீர சோழீஸ்வரர் கோயில் தேவரடியாராக இருந்திருப்பார் எனக் கருதலாம்.
சிற்பத்திலோ அருகிலோ கல்வெட்டுகள் ஏதும் இல்லாததால் மேல் விபரங்களை அறிய இயலவில்லை.
சிற்பத்தின் வடிவமைப்பைக் கொண்டு இச்சிற்பம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என உறுதிப்படுத்தலாம். கொழுமம் வீரசோழீஸ்வரர் கோயிலில் உள்ள கொங்கு சோழ அரசர் வீரநாராயணரின் 8 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் “திருவின் நங்கை” எனும் தேவரடியாரைக் குறிப்பிடுவதில் இருந்து நவகண்டம் எனும் தற்பலி செய்த இப்பெண்மணி நாட்டிய நங்கையாக, கோயில் தேவரடியாராக, மூன்றாம் பாலினத்தவராக, ‘திருவின் நங்கை’ எனும் பெயரில் இருந்திருப்பார் எனக்கருதலாம்.
இந்தச் சிற்பத்துக்கு அருகே உள்ள குளமும் தேவரடியார் குளம் என்று அழைக்கப்படுவதால், பலி கொடுத்த இப்பெண்ணின் (திருநங்கையின்) பெயராலேயே இக்குளம் அழைக்கப்படுகிறது என்றும் கருதலாம்.
பொதுவாக நவகண்டம் எனும் தற்பலி கொற்றவை தெய்வத்துக்கு முன்பே கொடுக்கப்படும். கொழுமம் வீரசோழீஸ்வரர் கோயிலில் உள்ள வீரசோழரின் ஆணைக்கிணங்க அவரின் அமைச்சர் பொறித்த ஒரு கல்வெட்டு கரைவழிநாட்டு காளாபிடாரி கோயில் எனும் கொற்றவை கோயிலை குறிப்பிடுவதால் பாழடைந்த இந்தக் கோயில்தான் பிடாரி என்ற கொற்றவை கோயில் என்று கருதலாம்.
இப்பெண்மணி (திருநங்கை) எதற்காக தன்னைத் தானே பலி கொடுத்துக் கொண்டார் எனத் தெரியவில்லை.
மகாபாரதத்தில் அரவான் குருசேத்திர போர் தொடங்கும் முன்பு நவகண்டம் செய்து கொண்டதாக குறிப்பு இருக்கிறது. இவரும் தனது அரசனின் ஏதோ ஒரு போருக்காக தன்னைத் தானே பலி கொடுத்திருக்கலாம். அதை அடிஒற்றி இங்கு நவகண்டம் கொடுக்கப்பட்டதாகக் கருதலாம். காரணம் எதுவாய் இருந்தாலும் அப்பாவியான இவரின் மரணத்தை ஏற்க மனம் மறுக்கிறது.

இது தமிழகத்தில் கண்டறியப்படும் முதல் திருநங்கை நவகண்டச் சிற்பமாகும். ஆய்வு செய்யும் போதும் செய்திப்படுத்தும் போதும் ஏனோ மனம் வலித்துக் கொண்டே இருந்தது. இது நமது மரபல்ல. நவகண்டம் எனும் நரபலி தமிழர் மரபல்ல.
நவகண்டம் எனும் சொல் தமிழ்ச் சொல்லும் அல்ல.இந்தச் செயலைக் கொண்டாடவோ நமது மரபு என்று அடையாளப்படுத்தவோ அதில் ஒன்றுமில்லை.
சதி எனும் உடன்கட்டை போன்றே அப்பாவி தமிழ்ச்சமூகத்தின் மேல் திணிக்கப்பட்ட வடமரபு இது.
இராமாயணத்தில் தசரதனின் இறப்புக்குப் பின் அவருடைய 59997 மனைவிகள் சதி ஏற்றப்பட்டதை அடி ஒற்றி உடன்கட்டை வழக்கமும், மகாபாரதத்தில் குருசேத்திர போர் தொடங்குமுன் அரவான் தன் கழுத்தை தானே அரிந்து தற்பலி செய்து கொண்டதை அடி ஒற்றி நவகண்டம் வழக்கமும் தமிழ்ச்சமூகத்தில் உட்புகுந்தது.
தொடர்ந்து சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கலிங்கத்துப் பரணியும் சோழனின் பூர்வ பட்டயமும் இவ் வழக்கத்தை பதிவு செய்து வைத்துள்ளன.
சுந்தரசோழரின் மனைவியும் ராஜேந்திர சோழரின் மனைவியும் உடன்கட்டை வழக்கத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார்கள்.
தன் உயிர்ப்பலி என்பது வீரமோ தியாகமோ அல்ல.அது அன்றைய மூட நம்பிக்கையின் ஒரு பகுதியே.
குருசேத்திர போர் தொடங்கும் முன் பாண்டவர்கள் வெற்றிபெற களத்தில் அரவான் தன்னை தானே பலி இட்டுக் கொண்டதிலிருந்து இந்த நவகண்ட வரலாறு தொடங்குகிறது.
“மாபாரதம் தமிழ்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று வேள்விக்குடிச் செப்பேடும், கிராமங்கள் தோறும் மகாபாரதத்தை பரப்பிய பல்லவனின் கூரம் செப்பேடுகளும் தமிழகத்தில் நவகண்டத்தை தோற்றுவித்தன.
மகாபாரத கதையின் தாக்கம்தான் சங்க காலம் முதற்கொண்டு நவகண்டம் வழக்கமாக முழு முதற் காரணம்.
கலிங்கத்து பரணியை அடி ஒற்றி சில தொல்லியலாளர்கள் இதற்கு அரிகண்டம் எனும் (பொருத்தமான) சொல்லை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கம்ப வர்ம பல்லவனின் கல்வெட்டில் வரும் ‘படாரிக்கு (பிடாரிக்கு) நவகண்டம் கொடுத்து’ எனும் சொல்தான் நமக்குக் கிடைக்கும் முதல் சொல். உண்மையில் இந்த நவகண்டம் எனும் சொல்லுக்கு மிகப் பொருத்தமான விளக்கத்தை இதுவரை தொல்லியலாளர்கள் யாரும் கொடுக்கவில்லை. அது ஒரு சமஸ்கிருதச் சொல்.. ஏனெனில் இச் செயல் வடக்கின் இறக்குமதி.
அப்பாவித்தமிழ் சமூகம் ஏற்று நடத்திய அறியாமையும் மூடத்தனமும் கலந்த கொடூர வழக்கம்.சதி @ உடன்கட்டைக்கு இச் செயல் சற்றும் குறைந்ததல்ல.
இது நமது சொந்த மரபும் அல்ல. நம்மீது 2000 ஆண்டுகளுக்கு முன்பே திணிக்கப்பட்ட வடமரபு.
நவகண்டம் கொடுக்கப்படும் இடத்தில் நாம் வேடிக்கை பார்க்க நிற்பதாக கற்பனை செய்துபாருங்கள். அந்தக் கொடூரமும் வலியும் வேதனையும் வாள்முழுதும் வாட்டி வதைக்கும்.
சங்கப்பாடல்களில் சில கொடூர மூட வழக்கங்களை கடிந்து திருத்திய புலவர் பெருமக்களைப் பார்க்கிறோம். புறம் 46 ல் கோவூர்கிழார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை கடிந்து அவன் கொடுஞ்செயலை திருத்தி உள்ளார்.
பகை அரசன் திருமுடிக்காரியின் குழந்தைகளை யானைக் காலில் இட்டு கொல்ல முயன்ற சோழனின் வன்செயலை கண்டித்து அது அறமல்ல என தடுத்திருக்கிறார்.
தற்கால திருவிளையாடல் திரைப்படப் பாடல் கூட முருகன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வெளியேறியதை கடவுளின் செயலையே “உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு” என்று கண்டித்து ஆற்றுப் படுத்தியதைப் பார்க்கிறோம்.
இவை எல்லாம் தனி நிகழ்வுகள். புலவர்களையும் தமிழையும் மதித்த மன்னர்கள்/கடவுளர் அவர்களின் அறிவுரையை ஏற்றனர். சதியும் நவகண்டமும் நிறுவனமாகக் கட்டமைக்கப்பட்டு விட்டிருந்ததால் யாராலும் எதுவும் செய்து இவ்வழக்கத்தை நிறுத்த முடியாமல் போய் இருக்கலாம்..நாம் நமது உண்மையான தொல்மரபுகளை அறிவோம்.போலியான அயல் மரபுகளை இனம் காண்போம்.
ஏனெனில் தவறுகள் கூட நம்முடைய தவறுகளாய் இருக்க வேண்டும். அயலார் தவறுகள் நமக்கு வேண்டாத சுமைகள். அவற்றைச் சுமப்பது, நமது மரபுகளைத் தகர்த்து நமது வளர்ச்சியைக் கெடுத்துவிடும்.

