-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்
முன் குறிப்பு : இலங்கை வடக்கில் சம உரிமை கேட்டுப் போராடிய தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய போரில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தின் பக்கம் நின்ற நாடுதான் ஈரான். இலங்கைக்கு ஆயுதங்களை விற்ற நாடுதான் ஈரான். அதுகுறித்து அடுத்த கட்டுரை விரிவாக வெளிவரும். ஆனால், இந்தக் கட்டுரையின் சாரம் அதுவல்ல. ஈரான் போன்ற எண்ணெய் வள மத்திய கிழக்கு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னை அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை வடிக்கப்பட்டுள்ளது.
-ஆசிரியர்
மேற்குலக வெள்ளைக்கார நாடுகளால் ஈரான் குறிவைக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம், உலகில் அதிக அளவு கச்சா எண்ணெய் வளம் உள்ள மூன்றாவது நாடு ஈரான். (கச்சா எண்ணெயில் இருந்துதான் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவை பிரித்து எடுக்கப்படுகின்றன).
மேலும், எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் எண்ணெய்க் கப்பல்கள் ஈரான் வசமுள்ள “Hormuz” -“ஹோர்முஸ்” எனும் கடல் கால்வாய் வழியாகத்தான் இந்தியப் பெருங்கடலுக்குள் வந்து உலக நாடுகளுக்கு செல்ல முடியும். உலக அளவில் 20 விழுக்காடு எண்ணெயைச் சுமந்து செல்லும் கப்பல்கள் இந்தக் கால்வாய் வழியாகத்தான் ஈரான் நாட்டைக் கடந்து செல்கின்றன.

வெனிசுவேலா, சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு அடுத்து மூன்றாவது அதிக அளவு எண்ணெய் வளம் கொண்ட நாடு ஈரான்.
உலகின் அதிக அளவு எண்ணெய் வளம் கொண்ட முதல் நாடான வெனிசுவேலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவை “போதை-பயங்கரவாதத்திற்குத்” துணை போனார் என்று குற்றம் சாட்டி அவரது நாட்டுக்குள் புகுந்து அமெரிக்க இராணுவம் அவரையும் அவரது மனைவியையும் கைது செய்து அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றது.
இதேபோல, கடந்த 2003 ம் ஆண்டு வாக்கில் ஈராக்குக்குள் புகுந்து சதாம் ஹுசேனை தூக்கில் போடும் வரை அமெரிக்கா அங்கு தொடர்ந்து “வேலை” செய்தது.
இப்போது ஈரானுக்குள் தமது மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா.
ஈராக், வெனிசுவேலா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளுமே எண்ணெய் வளம் மிக்க நாடுகளே.
அந்தந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் தங்களிடமுள்ள கச்சா எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்கள் குறித்த பன்னாட்டு மதிப்பை அறிந்திராத நிலையில் அவற்றை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வெள்ளைக்காரர்கள் தாராளமாக எடுத்துச் சுரண்டி பல லட்சம் கோடிகள் பணம் ஈட்டி வந்தனர்.
குறிப்பாக சுமார் 250 ஆண்டுகள் உலகின் பெரும்பான்மை நாடுகளைத் தங்களது “காலனி” ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருந்த பிரிட்டிஷார் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் வளத்தை அப்படி சுரண்டியே விற்று வந்தனர்.

குறிப்பாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தை தமது சொத்து போலச் சுரண்டி உலகெங்கிலும் விற்று, தான் பணமாக்கிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த மண்ணின் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
எண்ணெய் வளம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் உள்ள நாடுகளில் வாழும் மண்ணின் பூர்வகுடி மக்கள் அழிக்கப்பட்டு அந்த வளம் கொண்ட நாட்டைத் தம்முடையது ஆக்கிக்கொள்ளும் ‘ஆதிக்க வெறி” கொண்டவர்களாகவே வெள்ளைக்காரர்கள் இருந்து வருகின்றனர்.
அந்த வெறியை வெளிப்படையாகவே காண்பித்து வரும் ஒரு நாடாக இன்றைய அமெரிக்கா உள்ளது.
ஈரானின் எண்ணெய் வளத்தை பிரிட்டிஷ் பெட்ரோலியம் எனும் வெள்ளைக்கார நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுதும் கடை விரித்து விற்றுப் பல லட்சம் கோடிகளில் பணம் ஈட்டி வந்தது. அடுத்து அமெரிக்கா இந்த வேலையைச் செய்தது.

இதனால் ஈரான் மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படவில்லை. மாறாக ஈரானுக்கே உண்டான பெர்சிய மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் ஆகியவற்றை சீரழித்து அவர்களை மேற்கத்தியப் பண்பாடற்ற பண்பாட்டுக்கு மாற்றும் செயல் தொடர்ந்து நடைபெற்றது. இதன்மூலம் ஈரான் தங்கள் சொந்த மண்ணல்ல என்கிற ஒரு எண்ணத்தை ஈரானிய மண்ணின் மைந்தர்களின் மனதில் அமெரிக்கர்கள் விதைத்தனர். மண்ணின் உரிமை காக்கும் போராட்ட குணத்தை மழுங்கடித்தனர்.
கடந்த 1979 ம் ஆண்டுவரை ஈரானை ஆட்சி செய்த பஹ்லவி வம்சம், ஈரானில் நாம் மேலே பார்த்த “வெள்ளைப் புரட்சி” செய்வதற்குத் துணை போனது.
ஈரானிய மக்கள் வெகு வேகமாக தங்களின் பூர்வகுடித் தொன்மையை மறக்கத் தொடங்கி முழுவதுமாக வெள்ளைக்கார பண்பாடற்ற பண்பாட்டுக்கு மாறத் தொடங்கினார்கள்.
இதன் காரணமாகவே 1979 ம் ஆண்டு “இஸ்லாமியப் புரட்சி” வெடித்தது. பஹ்லவி வம்சத்தின் கடைசி அதிபரும் அமெரிக்காவின் பொம்மை அதிபருமான ஷாவின் ஆட்சி தூக்கி வீசப்பட்டு அயத்துல்லா கொமேனி தலைமையில் மண்ணின் மைந்தர்களின் புதிய ஆட்சி நிறுவப்பட்டது.

இனி ஒருபோதும் ஈரானுக்கு இத்தகைய நிலை ஏற்படக்கூடாது, இயற்கை வளத்தை சுரண்டி பணம் பார்க்கும் அமெரிக்காவின் கைப்பாவை நாடக ஈரான் இருக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் சிறப்பு இஸ்லாம் பாதுகாப்புப் படை, மக்கள் படை என சுமார் 5 லட்சம் போர்வீரர்கள் கொண்ட தனிப்படை அணிகளை உருவாக்கியது ஈரான்.
ஆயத்துல்லா காமெனெய் அரசு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட கோபம், ஆத்திரத்திற்கு இதுவே அடிப்படைக் காரணம்.
எண்ணெய் வளம் மட்டுமல்ல இயற்கை வளம் உள்ள எந்த நாட்டிலும் தங்களது கைப்பாவை ஆட்சியாளர்களே இருக்க வேண்டும் என்பதே வெள்ளைக்கார மேற்கத்திய நாடுகளின் அடிப்படை அரசியல்.
இந்த மேலாதிக்க அடிமைக் கோட்பாட்டுக்கு உடன்படாத எந்த நாடானாலும் அந்த நாடு “மதவாத, பயங்கரவாத, அணு ஆயுதம் வைத்திருக்கும், போதை மருந்து கடத்தும் நாடு” என்ற முத்திரையை இஸ்ரேலும், அமெரிக்காவும் குத்தும்.
அதன் பிறகு “பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம், அணு ஆயுதத்தைக் கண்டு பிடித்து அழிக்கிறோம்” என்று கூறி அந்நாட்டில் உள்ள மண்ணின் மைந்தர் ஆட்சியை அகற்றி தங்களுக்கு சாதகமான பொம்மை ஆட்சியை நிறுவிக்கொள்ளும். அதன் பிறகு அந்த இயற்கை வளத்தைத் தாம் எடுத்து உலகெங்கிலும் விற்பனை செய்து கொள்ளை இலாபம் பார்க்கும். அந்தக் கொள்ளை இலாபத்தில் ஆயுதங்களை உற்பத்தி செய்து அதனை விற்கப் போர்களை உருவாக்கும்.
இதுதான்….அமெரிக்கா செய்யும் “விவசாயம்”.
இப்படித்தான் ஈரான் மீதும் பாய்ந்து பிராண்டி வருகிறது அமெரிக்கா.
அமெரிக்காவில் உள்நாட்டில் பொருளாதாரப் பெரும் நெருக்கடிகள் உள்ள நிலையில் எதற்காக பல லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவு செய்து ஈரான் மீது போர் தொடுக்க வேண்டும் அமெரிக்கா ?! அப்படி என்ன அதில் இலாபம் ?! என்றால் இதுதான் காரணம்.

தங்களுக்குக் கைப்பாவையாக இல்லாத வெனிசுவவலெவின் அதிபர் மதுரோவை பிடித்து அங்கு தங்களுக்கு ஆதரவான ஆட்சி அமைத்து வெனிசுவலெவின் கச்சா எண்ணையை எடுத்து விற்க ஆரம்பித்தாயிற்று அமெரிக்கா.
ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியாவுக்கே கடுமையான வரி விதித்து அழுத்தம் கொடுத்து ரஷ்ய எண்ணையை நிறுத்திவிட்டு தங்கள் மூலம் வெனிசுவவலெவின் எண்ணையை வாங்க வைத்தாயிற்று அமெரிக்கா.
அடுத்து ஈரான் எண்ணைக் கிணறுகளையும் கைப்பற்றி விட்டால் அமெரிக்கா உலகின் கடனற்ற நாடாக மாறும் அளவுக்குப் பணம் ஈட்டி தமது நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்துக் கொள்ளும்.
அதாவது கொள்ளையடித்து குடும்பத்தைக் காப்பாற்றும் நல்ல வல்லரசு அமெரிக்கா என்று சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால், ஈரானினின் பெர்சிய மக்கள் அதாவது பார்சி மொழி பேசும் மக்கள் அப்படியல்ல, அவர்கள் மண்ணின் மைந்தர்கள், பூர்வகுடி மக்கள். ரோம அரசையே அடித்து விரட்டியடித்த வீரம் செறிந்த பெர்சியர்கள், போர்க்குணம் இரத்தத்திலேயே ஊறித் திளைப்பவர்கள். பல்லாயிரமாண்டுகளாகத் தங்கள் மண்ணைப் பாதுகாத்து வாழ்ந்து வரும் வீரம் செறிந்தவர்கள்.
அங்கே வந்து மதத்தின் பெயரால் தங்களை அழித்து எண்ணெய் வணிகத்தைக் கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்கா குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஈரான் சரியான பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பாடம் கற்க டொனால்ட் ட்ரம்ப்பும் அமெரிக்காவும் மிகப் பெரிய விலை கொடுக்கிறார்கள் !
ஈரான் மீது அமெரிக்க நடத்திவரும் தாக்குதல்களுக்கு முதல் நாளில் மட்டும் அமெரிக்க செலவளித்த தொகை, ஒட்டுமொத்த அமெரிக்க இராணுவ நிதி ஒதுக்கீட்டில் ஒரு விழுக்காடு ! அதாவது 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 7,300 கோடி ரூபாய்.
எனினும் பழங்கதைகளில் ஈரான் வீரம் செறிந்த பெர்சிய வரலாறு இணைந்திருந்தாலும், கடந்த பல பத்தாண்டுகளாக ஈரானுக்குள் நிலவும் மனித உரிமை மீறலும், பயங்கரவாத ஆயுதக் குழுக்களுக்கு அந்நாடு உதவுவதும், ஊக்கம் தருவதும் ஈரான் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை அற்றுப் போனதற்கான அடிப்படைக் காரணம்,

