–வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்,
மொத்தமுள்ள 7.50 கோடி மக்களில் தனித் தமிழ் பேசும் 6 கோடி மக்களும், இரண்டு மூன்று மொழிகள் அறிந்த தமிழர்கள் 50 லட்சம் பேர் என ஒரு ஆறரைக் கோடிப் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழக்கூடிய தமிழ்நாட்டில் “தமிழ், தமிழர், தமிழ்த் தேசியம்” என்று கூறினால் எகத்தாளமாக சிரிக்கும், கேலி பேசும், அவமதிக்கும் நிலை கடந்த 2010 ம் ஆண்டு வரை இருந்தது.
தமிழர் என்றால் அவர்களே வெளியிடத்தில் இருந்து இங்கே பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போல தமிழ்நாட்டிலேயே நடத்தப்படும் அவல நிலை இருந்தது.
இதெற்கெல்லாம் காரணம் “திராவிட முகமூடிகள்”, திராவிடம் எனும் முகமூடிக்குள் ஒளிந்துகொண்டு, “சாதி ஒழிப்பு, மதச் சார்பற்ற, பகுத்தறிவு” என்றெல்லாம் வீர வசனம் பேசிக்கொண்டு அதற்கு நேர் எதிரே நடந்து திரியும் ஒரு சிறு கூட்டம்.
முதலில் திராவிடம் எனும் சொல்லே இவர்களுடையது அல்ல. அது ஒரு சமஸ்கிருதச் சொல். அதுவும் “தமிழர்களை” குறிக்கும் சமஸ்கிருதச் சொல். தமிழ் என்கிறதில் “ழ’ வாயில் நுழையாத வடவர்கள் – சம்ஸ்கிருதவாதிகள் வைத்த பெயர் திராவிட என்பது.
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்த பிரமணர்களைக் குறிக்கும் சொல் என்றாலும் “தமிழ்நாடு, தமிழர் நாட்டுக்கு” வந்த பிரமணர்களைக் குறிக்கும் சொல்லாகவே அது அடிப்படையில் பொருள் தருகிறது.
இராபர்ட் கால்டுவெல்லும் “தென்னிந்தியா” எனும் பொருளிலேயே “திராவிட” எனும் சொல்லை தாம் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். அதேவேளை, “ஆந்திரா” என்ற பெயர் பல நூறு ஆண்டுகாலமாகப் பயன்படுத்தப்படுவதால் திராவிட எனும் சொல் தெலுங்குக்குப் பொருந்தாது அது பெரும்பாலும் தமிழைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் மொழியியல் மற்றும் தொல்லியல் ஆய்வறிஞர் நாரயணமூர்த்தி.
திராவிட முகமூடிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி
சாதி இரண்டொழிய சாற்றுங்கால், சாதியும் மதமும் சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி, சாதிகள் இல்லையடி பாப்பா …என்று தமிழ்ச் சமூகத்தில் அவ்வப்போது பிறமொழி, பிறநாட்டினர் தூண்டுதலின்பேரில் பிரிவினை ஏற்படுத்திய சாதியத் தவறுகள் குறித்து ஒவ்வொரு காலகட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளனர் தமிழ்ச் சான்றோர்கள்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் எப்படி மத ரீதியாக, சாதி ரீதியாகப் “பிரித்தாளும் சூழ்ச்சிகளைக்” கையாண்டார்களோ அதுபோல தமிழ்ச் சமூகத்திலும் சாதிய ரீதியாகப் பிரித்தாளும் சூழ்ச்சிகளைக் கையாண்டார்கள் இந்த “திராவிட முகமூடி” அணிந்தவர்கள்.
ஆனால், இவர்கள் வெளியே பேசுவது மட்டும் “சாதி ஒழிப்பு, மதச்சார்பற்ற தன்மை, பகுத்தறிவு, சனாதன எதிர்ப்பு” என்பது.
இவர்களின் இத்தனை ஆண்டுகால செயல்பாட்டின் முடிவில் பார்த்தால், தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்களே “திராவிடம்” எனும் முகமூடி அணிந்த இத்தகைய இயக்கங்கள், கட்சிகளுக்குத் தலைமைப் பொறுப்பில் அமர்ந்துள்ளனர்.
இவர்கள், தமிழர்கள் எவரையும் தலைமைப் பொறுப்புக்கு விடுவதில்லை. ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தாலும் அதிலும் தெலுங்கு பேசும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். தேர்தலில் போட்டியிடவும் தெலுங்கர்களுக்கே முதன்மை இடம் தருகின்றனர்.
சுமார் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில், 6.5 கோடித் தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் அதிகபட்சம் 50 லட்சம் மட்டுமே உள்ள தெலுங்கர்களுக்கு “திராவிடம்” எனும் பெயரில் மிக அதிகமான பிரதிநிதித்துவம் அளிக்கிறார்கள்.
மொத்தம் 32 அமைச்சர்கள் இருந்தால் அதில் 9 அமைச்சர்கள் தெலுங்கர்கள். 234 எம் எல் ஏக்கள் என்றால் அதில் சுமார் 50 பேர் தெலுங்கர்கள்.
இப்படி “திராவிடம்” எனும் பெயரில் தெலுங்கர்கள் தமிழ்நாட்டை ஆள்வதும், மேலாதிக்கம் செய்வதும், இதனை சுட்டிக்காட்டுவோருக்கு எல்லாம் “பார்ப்பன, பிராமணிய” பட்டம் கட்டுவதும் என்று தொடர்ந்து ஒரு பார்ப்பன பூச்சாண்டி காட்டிக்கொண்டே தமிழர்களை ஏய்த்து வந்தனர் இந்த திராவிட முகமூடிகள்.
இத்தனை நிகழும் வரையிலும் கூட தமிழர்கள் கண்டு கொள்ளாமல் கடந்தே சென்று கொண்டிருந்தனர்.
ஆனால், 2009 ம் ஆண்டு ஈழ*த்தில் சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை கொத்துக்குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள் வீசி அழிக்கப்பட்டபோது இங்கே உண்ணாவிரத நாடகம் ஆடியபோதுதான் இந்தத் திராவிட “முகமூடிகளின்” உண்மையான முகம் வெளியே வந்தது.
அதன்பிறகு உற்று நோக்கினால் “திராவிடம்” எனும் பெயரில் தமிழகர்களை முற்றாக அழித்து ஒழிக்கும் பணியில் பல காலம் இவர்கள் திட்டமிட்டுத் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.
இதன்பிறகே பூர்வகுடிகள் – தமிழர்கள் தங்களின் தமிழ்த் தேசியத்தை விட்டு விலகி நின்றது எவ்வளவு தவறு என்று உணரத் தொடங்கினார்கள்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் உள்ளிட்ட இயக்கங்கள் முழு வீச்சில் தமிழ்த் தேசியப் பணிகளை கைகளில் எடுத்தன.
ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ, கேரளாவிலோ ‘திராவிடம்” எனும் சொல்லையே அவர்கள் அங்கீகரிக்காத நிலையில் தமிழ்நாட்டில் பிறமொழியாளர்கள் தாங்கள் சுகமாக, சொகுசாக, ஆதிக்கம் செய்து வாழ “திராவிடம்” எனும் முகமூடியைப் பயன்படுத்திக்கொண்டது தெளிவாகப் புரியத் தொடங்கியது.
இவர்கள் வீசும் பணம், பட்டம், விருது, பரிசு, சிபாரிசு ஆகியவற்றுக்கு அடிமையாகிப் போன சில தமிழர்கள் இவர்களுக்கு ஒத்து ஊதுவதும் தமிழர்களுக்குத் தெரிய வந்தது.
தமிழ்த் தேசியர்களின் தொடர் விழிப்புணர்வு உரைகள், பேச்சுக்கள், காணொலிகள், விவாதங்கள் காரணமாக “திராவிடம்” என்ற பெயரில் ஏமாற்றிக் கொண்டு, இளையோருக்கு திரைக்கவர்ச்சி, போதைப் பழக்கம், பெண்களுக்கு இலவசம், அழுகையைத் தூண்டும் தொலைக்காட்சித் தொடர்கள் எனத் திட்டமிட்டு அழித்தவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது.
ஆரியம், பிராமணியம், பார்ப்பனியம் எனும் பெயரில் பூச்சாண்டி காட்டிக்கொண்டு “திராவிடம்” ஏய்த்துப் பிழைப்பதும் தெளிவாக உணரப்பட்டுவருகிறது.
தமிழும், தமிழர்களும் ஆரிய – திராவிட மாய்மாலங்களைக் கடந்தும் உறுதியாக நிற்பதற்குக் காரணம் தமிழ், தமிழர்களின் பல்லாயிரமாண்டு மரபணுத் தொடர்ச்சி, தனித்துவம்.
கடந்த 1944 ல் தொடங்கி 2026 ல் முடிவடைந்துவிட்டது “திராவிட முகமூடிகளின்” ஏமாற்று அரசியல்.
இன்று தமிழ், தமிழர் இல்லாது தமிழ்நாட்டில் ஒரு அரசியல்வாதியும் சிந்திக்கவே முடியாத நிலைக்கு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
“திராவிடம்” எனும் பெயரில் புரட்டுத் தனம் செய்துகொண்டிருந்த தமிழ்நாட்டு அரசியலைப் புரட்டிப்போட்டிருக்கிறது தமிழ்த் தேசியம், தமிழர்களின் தேசியம் !
–வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், தமிழ் ஊடகம் குழுமத்தின் ஆசிரியர் மற்றும் தமிழியல் நடுவம் நிறுவனர். மின்னஞ்சல் : [email protected] , [email protected]

