— தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர் குழு
S.மார்ட்டின் என்கிற சந்தியாகோ மார்ட்டின் இந்திய லாட்டரி வணிக உலகின் முடிசூடா மன்னன்.
லாட்டரி என்பது உலக அளவில் அரசு அனுமதிக்கின்ற ஒரு பரிசுத்திட்டமே.
உலக அளவில் லாட்டரி வணிகத்தின் விற்பனை மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 38 லட்சம் கோடி ரூபாய். இந்த விற்பனை மதிப்பும் வரும் 2033 ம் ஆண்டுவாக்கில் 56 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறது வணிகக் கணக்குகள்.
இந்திய அளவில் 13 மாநிலங்களில் லாட்டரி வணிகம் அரசு அனுமதியுடன் நடத்தப்படுகிறது.
இதன் மொத்த விற்பனை மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய். அதாவது உலக லாட்டரி வணிகத்தின் சுமார் 10 விழுக்காடு பங்களிப்பை இந்தியா தருகிறது.
அசாம், கோவா, கேரளா, மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்ரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் லாட்டரி விற்பனையை அந்தந்த மாநில அரசுகள் அனுமதித்துள்ளன.
இப்படிப்பட்ட லட்சம் கோடி பணம் புரளுகிற லாட்டரி வணிகத்தில் 1990 களில் K and Co (குரானா அண்ட் கம்பெனி) போன்ற ஒருசில நிறுவனங்களே வட மாநிலங்களில் கோலோச்சிக் கொண்டிருந்தன.
அந்தக் காலகட்டங்களில் தமிழ்நாட்டின் கோயமுத்தூரிலிருந்து தனியார் லாட்டரி வணிகத்தைத் தொடங்கிய S.மார்ட்டின் படிப்படியாக லாட்டரி வணிகத்தில் முன்னேறி இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.
கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசே நடத்துகிற லாட்டரி ஒருபுறம் இருக்க அரசு அனுமதியுடன் மார்ட்டின் போன்ற தனியார் நடத்துகிற லாட்டரிகள் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 1990 ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2026 ம் ஆண்டு கடந்தும் சுமார் 36 ஆண்டுகள் லாட்டரி வணிகத்தில் உள்ள மார்ட்டின் தற்போது GST வரியாக மட்டுமே சுமார் 6,000 கோடி ரூபாய் செலுத்துகிறார்.
இதுதவிர இந்த வணிகத்தில் இந்திய அளவில் பல ஆயிரம் பேருக்கு மார்ட்டின் குழுமம் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இதையெல்லாம் கடந்து மார்ட்டின் லாட்டரி நிறுவனமும் மார்ட்டினும் சில குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியும், வணிக வரி, அமலாக்கப் பிரிவு சோதனை எனப் பல சோதனைகளைக் கடந்துவந்து கொண்டிருந்தாலும் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய லாட்டரி வணிகத்தில் முதலிடத்தில் நிற்கிறது மார்ட்டின் குழுமம்.
சந்தியாகோ மார்ட்டின் இந்த வெற்றியை ஒரே நாளில் எட்டிப்பிடித்து விடவில்லை.
1990 களின் தொடக்கத்தில் கோயமுத்தூர் கிராஸ் கட் ரோடு மாரியம்மன் கோயில் அருகே நடைபாதையில் மரத் தட்டி வைத்து ஒரு சிறு லாட்டரிக் கடையை நடத்தி வந்தார்.
விற்பனையாகாத எஞ்சிய டிக்கெட்டுகளுக்கு விழுந்த சில சிறிய சிறிய பரிசுகள் அவருக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தர படிப்படியாக அரசு அனுமதி பெற்று லாட்டரிகளை அச்சடித்து விற்பனை செய்யும் பணியைத் தொடங்கினார்.
லாட்டரி உலகின் நெளிவு சுழிவுகளைக் கரைத்துக் குடித்த மார்ட்டின் இன்று இந்தியாவின் நம்பர் 1 லாட்டரி வணிக அதிபர்.
இந்த வணிகம் மட்டுமல்ல ஆயுர்வேதக் கல்லூரி, ஸ்டார் ஹோட்டல்கள், ரியல் எஸ்டேட் வணிகம் என பல துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார் மார்ட்டின்.
இவருக்கு சார்ல்ஸ், டைசன் என இரண்டு மகன்கள், டெய்சி எனும் ஒரு மகள்.
மார்ட்டின் மகள் டெய்சியைத்தான் (தற்போது) தவெகவில் உள்ள ஆதவ் அர்ஜுனா காதல் திருமணம் செய்தார்.
இதில் ஜான் என்பவர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் அவர்களின் உடன் பிறந்த அண்ணன்.
மார்ட்டின் அவர்களின் வாழ்க்கையில் லீமா ரோஸ் வந்த பிறகே அவரது வெற்றிகளின் வேகம் பலமடங்கு அதிகரித்தது.
லீமா ரோஸின் அண்ணன் ஜான் அவர்களும் கோயமுத்தூருக்கே வந்து குடியேறி மைத்துனர் மார்ட்டின் அவர்களிடம் டிக்கெட்டுகள் எடுத்து ஜான் அண்ட் கோ எனும் பெயரில் லாட்டரி விநியோகத்தராகவும், சில்லறை விற்பனைக் கடைகளையும் நடத்தி வந்தார்.
எனவே மார்ட்டின் குடும்பத்தினருக்கோ, லீமா ரோசின் அண்ணன் ஜான் அவர்களுக்கோ போதை மருந்து போன்ற கடத்தலில் ஈடுபட்டுப் பணம் ஈட்ட வேண்டும் என்கிற அவசியம் ஒருபோதும் இருந்ததில்லை.
மார்ட்டின் லாட்டரிகளை வாங்கி விற்பனை செய்த மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் என இத் தொழிலில் லட்சாதிபதிகள் ஆனவர்கள் ஏராளம்.
லீமா ரோஸ் அவர்களின் அண்ணன் ஜான் அவர்கள் தரப்பிலும் நமது குழு விசாரித்தபோது ஜான் அவர்கள் ED யின் போதைக் கடத்தல் வழக்கில் கூறப்படும் பெயர் தம்முடையது அல்ல என்றும் அப்படிப்பட்ட சட்ட விரோத செயல்களை ஒருபோதும் தாம் ஆதரிப்பது இல்லை” என்றும் கூறியுள்ளார்.
லாட்டரிப் பணத்தில் அரசியல் என்று திமுக முன்வைத்த விமர்சனம் ஒன்றுக்கு, “எங்களிடம் 500 கோடி நன்கொடை வாங்கும்போது திமுகவுக்கு அது தெரியவில்லையா?” என்று சார்ல்ஸ் கேட்டிருந்த நிலையில் அதற்குப் பழி வாங்கும் விதமாகவும், ஆதவ் அர்ஜுனாவுக்கு அரசியல் ரீதியாக அவப்பெயர் உண்டாக்கவுமே இந்த வதந்தி பரப்பப் படுகிறது என்றும் தெரிய வருகிறது
கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் ஒன்றில் மார்ட்டின் மனைவி, மகள், மருமகன் ஆதவ் உள்ளிட்ட பெயர்கள் உள்ளதாகப் பரப்பப்படும் வழக்குக்கும் ED யின் போதை மருந்து கடத்தல் வழக்குக்கும் எந்த வித தொடர்பும் இல்லை, அது வேறு ஒரு தொடர்பில்லாத வழக்கு என்பதும் நமது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
– புலனாய்வுச் சிறப்பு செய்தியாளர் குழுவினர்.

