இசைஞானி இளையராஜா அவர்களின் ஆஸ்திரேலிய இசை நிகழ்ச்சியின் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என உலகத் தமிழர்களின் உணர்வுகளை முன்வைத்து வேண்டுகோள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2026 செப்டம்பர் 26 அன்று இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாள் தமிழீ*ழப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுவதால், நிகழ்ச்சியின் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபன், தமிழர் அரசியல் உரிமைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்.
அவருடைய நினைவு நாள் உலகம் முழுவதும் வாழும் பல தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்படுவதாக அந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் வரலாற்று நினைவுகளையும் சமூக உணர்வுகளையும் மதிக்கும் வகையில், செப்டம்பர் 26 அன்று நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியின் தேதியை மாற்றி அமைப்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கோரிக்கை இசைஞானி இளையராஜா அவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கோரிக்கை விடுத்துள்ள தரப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

