பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார்.
ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார்.
பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த பின்பற்றாளர்கள் உருவானார்கள்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடப் பெயர் கொண்ட கட்சிகளின் கூட்டணி இல்லாது தனித்து தமெக்கென்று ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.
பாமக, தமாகா, அமமுக மற்றும் சிறிய சில கட்சிகளை மட்டும் கூட்டணி சேர்த்து 23 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 11.1 விழுக்காடு வாக்குகள் பெற்றது.
தாமரை சின்னத்தில் 19 தொகுதிகளிலும், நான்கு தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு என்றும் ஒதுக்கப்பட்ட சின்னங்களிலும் போட்டியிட்டது பாஜக கூட்டணி.
அண்ணாமலைக்கென்று சேர்ந்த இளையோர் கூட்டம், ஆதரவாளர்கள் செல்வாக்கால் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி இரண்டு இலக்க வாக்கு விழுக்காடு பெற்றது.
அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினூடாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அழுத்தங்கள் காரணமாகவும் அண்ணாமலையின் தலைவர் பொறுப்பு மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் அளிக்கப்பட்டது.
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்கு விழுக்காடு 2.97.
நாடாளுமன்றத் தேர்தலை விட 8.13 விழுக்காடு வாக்குகள் பாஜகவுக்குக் குறைந்தன.
சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை இல்லாத பாஜக பெற்ற குறைவான வாக்குகள், பாஜக தமிழ்நாடு மாநில அரசில் செய்த பிழைகள் ஆகியவை குறித்த அறிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை அமித்ஷாவிடம் கொடுத்த அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகியிருக்கிறார்.
இத்தகைய நிலையில் அண்ணாமலைக்கு என்று மட்டும் குறைந்தது 5-8 விழுக்காடு வாக்குகள் உள்ளன என்கிற நிலையில் தனியே கட்சி தொடங்க அவர் களமிறங்கியிருக்கிறார்.
முன்னதாக அரசியல் கல்வி ஒன்றைக் கற்க ஆறுமாத காலம் லண்டன் சென்றிருந்தார் அண்ணாமலை.
இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அண்ணாமலையின் புதிய அரசியல் கட்சியின் கொள்கை, நிலைப்பாடு ஆகியவை குறித்த அவரது அடுத்த அறிவிப்பில் தெரியவரும்.
அதிமுக, திமுக, மதிமுக, விசிக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் தேய்மானங்களுக்கு இடையே அண்ணாமலை களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

