இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் “ராப் வடிவப்” பாடல்களால் பிரபலம் அடைந்தவர்.
கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார்.
அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik Tok) பக்கத்தில் அவர் அந்தத் திருவிழாவில் பாடிய நான்கு பாடல்களை சிறு சிறு துண்டுகளாகக் கத்தரித்துத் தடை செய்யப்பட விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவு தருவது போலவும் புகழ்வதுபோலவும் பதிவிட்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரானதாகவும் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சங்கீத்சன் நீதிமன்றத்தில் நேர் நிற்க வைக்கப்பட்டு வரும் 17 ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இளம் பாடகர் ஒருவர் அதிலும் TikTok சமூக ஊடகத்தில் பாடல்களைப் பதிவு செய்ததற்குப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ச்சப்பட்டிருப்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

