-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
தமிழ்த் தேசியம் என்பது ஏதோ இலங்கைத் தீவின் வடக்கில் தமிழர்களின் பூர்வகுடி நிலத்தில் வாழும் 20 – 30 லட்சம் தமிழர்களுக்கான தேசிய முழக்கம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களுக்கான முழக்கம் மட்டுமல்ல. அது உலகெங்கிலும் வாழும் 15 கோடித் தமிழர்களுக்கான, இனி வரும்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கான தேசிய உணர்வு கொண்ட முழக்கம், இலக்கு.
தமிழர் கடந்த சுமார் 700 ஆண்டுகளாகக் குறிப்பாக களப்பிரர் எனும் கன்னடர்கள் ஆட்சிக்காலம் தொடங்கி, தெலுங்கர் ஆட்சிக்காலத்தில் தீவிரமாக்கப்பட்டுத் தமிழர் என்ற உணர்வற்று மழுங்கடிக்கப்பட்டு வருகிறான்.
இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதிகளால், தமிழ்நாட்டில் திராவிட முகமூடி அணிந்த தெலுங்கர், கன்னடர்களால் இன்னமும் தமிழன் அடிமைபோல நடத்தப்படுகிறான்.
தமிழரின் மொழி, வரலாறு, தொன்மம், பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல், நிலம் என அனைத்தும், வட வேத ஆரியம் ஒருபக்கமும், திராவிட முகமூடிகள் இன்னொரு பக்கமும் என இருபக்கமும் இழுக்கப்பட்டுத் தன் சுய அடையாளங்களை இழக்க வைக்கப்பட்டுள்ளான்.
அவனிடம் சென்று “நீ தமிழன்” என்று கூறினால் அப்படியா என்று வியப்புடன் கேட்டுக் குழம்புகிறான்.
இது விஜயநகரத் தெலுங்கு அரசர்கள் காலத்திலிருந்து தமிழர்களுக்கு செய்யப்பட்டு வரும் மூளைச் சலவையின் விளைவு.
இந்த இவர்களின் நாடகம் எல்லாம் 2009 முள்ளிவாய்க்காலில் வெட்ட வெளிச்சமானது.
அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி புத்துயிர் பெற்றது. சி.பா. ஆதித்தனார் 1950 களில் தொடங்கி நடத்திய கட்சி அது.
2009 – 10 களில் நாம் தமிழர் என்பது ஒரு இயக்கமாக முதலில் தொடங்கப்பட்ட நிலையில் சீமானை மையமாக வைத்து அக்கட்சி மீண்டும் உருவானது, புத்துயிர் பெற்றது.
சுமார் 60 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி செயல்பாட்டில் இல்லை. தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஒரு கட்சியை வெறும் பதிவு செய்துவிட்டால் மட்டும் போதாது. தேர்தலில் போட்டியிட வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குப் போட்டியிடாமல், ஆண்டறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தால் தேர்தல் ஆணையம் அந்தக் கட்சியின் பதிவை இரத்து செய்துவிடும்.
சி.பா.ஆதித்தனார் குடும்பத்தினர் எவரும் அப்படி நாம் தமிழர் கட்சியின் பெயரில் 1950 களிலிருந்து 2010 வரை போட்டியிட்டதாகத் தெரியவில்லை.
எனவே அந்தப் பெயரை சீமான் வைத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஒருவேளை நாம் தமிழர் கட்சி எனும் பெயரை Trade Mark செய்திருந்தாலும் கூட புதுப்பிக்காமல் இருந்தால் அது 10 அல்லது 20 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.
ஆக, இந்தப் பெயரைத் தமது கட்சிக்கு வைக்க சீமான் குருமூர்த்தி தயவை நாடினார், குருமூர்த்திதான் வாங்கிக் கொடுத்தார் என்கிற சப்பையான பொய்களைத் திராவிட முகமூடி மோசடிக் கூட்டம் தொடங்கி இன்றய சிங்கள பவுத்தப் பேரினவாதக் கைக்கூலிகள் வரை அதையே பரப்பிக்கொண்டு திரிகிறார்கள்.
மேலும், சி.பா.ஆதித்தனார் அவர்கள் தமிழ்வாணன் அவர்களுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் “நாம் தமிழரை நான் நடத்தவில்லை. அதை ஆதரிக்கிறேன்” என்றே கூறியிருந்தார்
(சான்று : தமிழ்ப்பேரரசு நூல்).
ஆக, நாம் தமிழர் கட்சி எனும் பெயர் ஒன்றும் சி.பா. ஆதித்தனார் குடும்பப் பரம்பரை சொத்து அல்ல. அதற்காக குருமூர்த்தி போன்றவர்களிடம் சிபாரிசு பெற்றுதான் அதைப் பெறவேண்டும் என்பதில்லை.
இது ஒரு பத்திரிகை ஊடகவியலாளனாக என்னுடைய தேர்தல் ஆணைய விதிமுறைகள் அடிப்படையிலான பார்வை.
எனினும் அந்தப் பெயரில் கட்சி பதிவு செய்ய ஒரு ஒப்புதல் அதுவும் ஒரு நாகரீகத்திற்காக சிவந்தி ஆதித்தனார் அவர்களிடம் கேட்டிருக்கலாம். அதற்கு குருமூர்த்தி எதற்கு ? சீமானே அவர்களின் குடும்பத்தினரிடம் பேசி ஒரு வார்த்தை சொல்லியிருக்க முடியும். அப்புறம் நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது மே மாதம் 18 ம் தேதி 2010 ஆண்டு. அப்போ குருமூர்த்தி எங்கே இருந்தார் ?!
பொய் பேசுவது என்று ஆகிவிட்டது அடித்து விடவேண்டியதுதானே.

