–நாச்சி.செல்வராஜ், பத்திரிகை ஊடகவியலாளர்
அரசியலில் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம் என்ற நிலை மாறி இன்று வாழும் காலத்திலேயே அரசியல் அநாதைகளான கதைக் களத்தை இந்தக் கட்டுரை விளக்குகிறது..
சின்னம்மா என்று அதிமுகவினரால் ஒரு காலத்தில் அன்போடு அழைக்கப்பட்ட திருமதி. சசிகலா, மற்றும் தென் தமிழகத்தின் அரசியல் அடையாளம் டாக்டர் கிருஷ்ணசாமி. இவர்களின் அரசியல் வாழ்க்கை குறித்துதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
முதலில் சசிகலா…
போயஸ்கார்டன் வேதா இல்லம்தான் திருமதி சசிகலாவுக்கு 30 ஆண்டுகாலம் அரசியல் முகவரி. சசிகலா என்றால் ஜெயலலிதா, ஜெயலலிதா என்றால் சசிகலாதான். சசிகலாவின் கண் அசைந்தால் பதவி, புன்னகைத்தால் முக்கியப் பொறுப்பு அல்லது பதவி. திருமதி. சசிகலாவின் கடைக்கண் பார்வை கிடைத்தாலே போதும் என்று காத்துக்கிடந்த அதிமுக நிர்வாகிகள் ஏராளம்.
செல்வி. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை சின்னம்மா, ராஜமாதா, நாச்சியார் என்றெல்லாம் சசிகலாவைப் புகழ்ந்து அதிமுகவினரில் பலர் கூளைக் கும்பிடு போட்டனர்.
ஆனால் அதே நபர்களின் வாய்கள் ஜெயலலிதா இறந்தவுடன் ஆயாம்மா, வேலைக்காரி, என்று திருமதி.சசிகலாவை வசைமாரி பொழிந்தன.
“அரசியல் சிம்மாசனத்தில் அமர்வதற்கான நேரம் சரியில்லை என்றால் அது சிறைக்கும் அனுப்பும்” என்ற வாசகம் சசிகலாவிற்கு மிகப் பொருத்தமாக உள்ளது.
அரண்மனைத் தலைவியாக இருந்த அவர் 4 ஆண்டுகள் சிறை, 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைக்கு சொத்துக்குவிப்பு வழக்கு ஆளாக்கியது.
செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான காலகட்டத் தொடக்கத்திலிருந்தே திருமதி. சசிகலாவுக்கு அரசியல் சரிவரப் பிடிபடவில்லை அல்லது அமையவில்லை.
இறுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு புதிய கட்சி ஒன்றைத் தொடங்கி 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார்.
யாரை ஆதரித்து இவர் தேர்தல் களம் காண்கிறார் ? அல்லது யாரை எதிர்த்து இவர் களம் காண்கிறார்? இது யாருக்கான சவால் ?
தமிழ்நாடு மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றிருந்த செல்வி ஜெயலலிதா போல உலகளாவிய பரவல் சசிகலாவிடம் இல்லை என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.
முழுக்க, முழுக்க தன் சமூகத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் சசிகலா எதை நோக்கி இந்த அரசியல் பயணம் செய்கிறார் ?
சாதி வாக்குகள் என்கிற ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிக்கொண்ட சசிகலா யாரையாவது ஆதரிக்கிறாரோ அல்லது எதிர்க்கிறாரோ இல்லையோ ஆனால், இவரது இந்தச் செயல்பாடு திமுகவுக்கு சாதகமாகும் வகையில்தான் அமைகிறது.
மொத்தத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கிய, தான் வாழ்ந்து அனுபவித்த அதிமுக என்ற அடையாளத்தை முற்றாக அழிக்க நினைக்கிறார் சசிகலா என்பது மட்டும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
தனது சகோதரி் மகன் டிடிவி தினகரனை எந்தக் காலத்திலும் நம்பாத சசிகலா இப்போது அவருக்கு எதிராகக் களமாடுவதைக் காமெடியாகத்தான் அந்தச் சமூகம் பார்க்கிறது.
ஒட்டுமொத்த அதிமுகவினரால் ஓரங்கட்டப்பட்ட சசிகலா, இன்று அரசியல் அநாதையாக காரில் பவனி வருவது நகைப்பாகவே உள்ளது.
அவரது பேச்சும் நடை உடை பாவனையும் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது போலவே உள்ளது.
இன்னும் என்னென்ன கொடுமைகளை எல்லாம் தமிழக மக்கள் பார்க்க போகிறார்களோ கடவுளுக்கே வெளிச்சம்.
அடுத்து டாக்டர் கிருஷ்ணசாமி…
தேவேந்திர குல வேளாளர்களை வைத்து அரசியல் செய்யும் இவர் முதலில் அந்தச் சமூகத்தைச் சார்ந்தவரே அல்ல. இவர் அருந்தியர் வகுப்பைச் சார்ந்தவர் என்று ஜனதா கட்சி்த் தலைவர் டாக்டர் சுப்பரமணிய சுவாமி நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அரசு சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி அருந்ததியினர் சமூகத்தைச் சார்ந்தவர்தான் என்பதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தனிக்கதை.
சுமார் 40 ஆண்டுகாலமாக புதிய தமிழகம் என்ற அரசியல் கட்சி் நடத்தும் டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டாம் கட்டத் தலைவர்களை அடையாளப்படுத்தாமல் அரசியல் நடத்தி வருவது ஒருவித நெருடல்.
செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும்போதுகூட இவரும், இவரது மகன் சியாம்கிருஷ்ணசாமி மட்டுமே அமரவேண்டும்… பின்னால் எவரும் நிற்கக்கூடக் கூடாது என்பது எவ்வளவு வன்மமான மனநிலை ?!
தொலைக்காட்சியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் யாரும் தெரியக்கூடாது என்பது கிருஷ்ணசாமியின் நோக்கம்.
தேவேந்திர குல வேளாளர் என இந்த சமூகப் பெயரை அழைக்க வேண்டும் என 2015 ம் ஆண்டுவரை வரை புதிய தமிழக கட்சி மாநாட்டிலோ அல்லது பொதுக்கூடத்திலோ எந்தத் தீர்மானமும் நிறைவேற்றாதவர் கிருஷ்ணசாமி. 2017 ம் ஆண்டுதான் அந்தப் பெயரை முதன் முதலாக உச்சரித்தார்.
தேவேந்திர குல வேளாளர் மக்களுக்காகக் குரல் கொடுத்து வருவதாகத் தொடர்ந்து பேசி வரும் டாக்டர் கிருஷ்ணசாமி அந்த சமூகத்தில் பிறந்து பிரபலமான திரைப்பட இயக்குனர் மாரி.செல்வராஜை பாராட்ட மாட்டாராம்.
ஏனென்றால் அந்தச் சமூகத்தில் இவர்மட்டுமே பிரபலமாக இருக்க வேண்டுமாம்.
அந்த சமூகத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களைப் போராட்டம் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் இறக்க, 17 பேர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதற்கு டாக்டர் கிருஷ்ணசாமியின் தவறான அணுகுமுறையே காரணம் என்று அச்சமூக தலைவர்கள் இவர் மீது குற்றம்சாட்டினார்கள்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிமுக திமுக என மாறி மாறிக் கூட்டணி அமைத்து ஓரிரு சீட் வாங்கும் புதிய தமிழகம் டாக்டர். கிருஷ்ணசாமி, தேவேந்திர குலவேளாளர் மக்களை அடகு வைத்தே “சூட்கேஸ்” வாங்குவதாகவும் பரவலான தகவலும் கசிந்தது.
உண்மையில் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மோடி அரசுக்கு பரிந்துரை செய்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, அதை அமல் படுத்தியது பாஜக.
ஆனால் அதற்கு நன்றிக் கடன் கூடத் தேவையிலை. ஆனால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக புதியதமிழகம் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி என்ன அரசியல் செய்ய போகிறார் டாக்டர். கிருஷ்ணசாமி ?
இதுதான் அந்த மக்களுக்கு இவர் செய்யும் நன்மையா?
இப்படித் தேவேந்திர குல வேளாள மக்களுக்கு துரோகம் செய்யும் கிருஷ்ணசாமியை வரலாறு மன்னிக்குமா ?
மே 4 ம் தேதி் வெளிவரவிருக்கும் தேர்தல் முடிவுகள் டாக்டர். கிருஷணசாமி்யின் முரண்பாடான அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது.
39 எம்பிக்களும் வெளிநடப்பு
இதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது தமிழ்நாட்டின் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட 39 எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.
அந்த மசோதாவையே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வைத்துதான் வாசித்தார்கள்.
பாஜக எதிர்ப்பு என்கிற கண்மூடித்தனமான எதிர்ப்பில், தேவேந்திர குல வேளாளர் மக்களின் நியாயமான கோரிக்கையை தமிழ்நாட்டின் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் புறக்கணித்தனர் என்பதே உண்மை.
டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமல்ல திமுக கூட்டணிக்கு கட்சிக்கும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் இந்த 2026 தேர்தலில் பாடம் புகட்டத் திட்டமிட்டுள்ளனர்.

