தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 குறித்த பல கருத்துக்கணிப்புகள் ஒருபக்கச் சார்பாகவும், பெரும்பாலும் ஆளும் திமுகவுக்கே ஆதரவாகவும் ஒருபக்கச் சார்பாகவும் இருப்பதும், விஜயின் தவெக குறித்து மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளும், விளம்பரங்களும் வெளிவந்த நிலையிலும், படிப்படியாக ஒரு விழுக்காட்டில் இருந்து 8.2 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ள நாம் தமிழர் கட்சி 3 விழுக்காட்டுக்குக் குறையும் என்கிற கதைகள் Narratives அதிகரித்த நிலையில் உண்மை நிலவரம் அறிய தமிழ் ஊடகம் களமிறங்கியது. அதன் முடிவுகள்தான் கீழே தரப்பட்டுள்ள தரவுகள்.
முக்கிய அறிவிப்பு :
இவை தமிழ் ஊடகம் சந்தித்த சுமார் 35 ஆயிரம் பேர் கூறிய பதில்கள், கருத்துகள் மற்றும் வல்லுனர்களின் கருத்துக்கள், ஆய்வுகள் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டவையே தவிர தமிழ் ஊடகம் குழுவினரின் தனிப்பட்ட எந்த ஒரு முடிவும் அல்ல !
தமிழ் ஊடகம் வழங்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கள நிலவரம் 2026 ஆய்வு முடிவுகள்
அனைவருக்கும் வணக்கம்,
எங்களது TNTV இன்டர்நேஷனல் நியூஸ் நெட்ஒர்க் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாகப் பல்வேறு பத்திரிகை ஊடக நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு தேர்தல் குறித்தும் கள நிலவரத் தரவுகளை ஒரு செய்தி முகமையாக Agency யாக எடுத்துக் கொடுப்பதும் அது தவிர தனிப்பட்ட முறையில் சமூக ஊடகங்களில் அதனை வெளியிட்டும் வந்திருக்கிறோம்.
இலங்கையில் நடைபெற்ற தேர்தல் ஒன்றிலும் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டோம்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து தமிழ் ஊடகம் பல்வேறு தனி நபர்கள், அமைப்புகள் உதவியுடன் தமிழ்நாட்டில் நடத்திய பலதரப்பட்ட ஆய்வுகளை அலசி ஆய்ந்து இந்த ஆய்வை வெளியிடுகிறோம்.
இது வெறும் கருத்துக் கணிப்பு மட்டுமே அல்ல. இந்த ஆய்வில் மக்களிடம் கருத்துக் கேட்பது, சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்துக் கேட்பது, பொதுமக்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூக செயற்பட்டாளர்கள், மாணவ மாணவிகள், பெண்கள், ஆண்கள், மூன்றாம் பாலினத்தோர், விவசாயிகள், சிறுவணிகர்கள், சிறு குறு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் உரையாடிப் பெறுவது, பத்திரிகை – ஊடகங்களின் செய்திகள் வெளியீடு, அரசியல் கட்சிகளின் கொள்கை, செயல்பாடு, நடைமுறைகள், அந்தக் கட்சிகள் குறித்த மக்களின் எண்ணம் மற்றும் மதிப்பீடு என பல்முனைத் தரவுகளை ஆய்வு செய்து அதன் முடிவை வெளியிடுகிறோம்.
கள ஆய்வு
களத்தில் மக்களிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெறப்பட்ட தகவல்கள், இந்தாண்டு ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் மார்ச் 1 ம் தேதி முதல் ஏப்ரல் 5 ம் தேதி வரை எடுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் பெறப்பட்ட வெவ்வேறு மூன்று காலத் தரவுகளை அலசி ஆய்ந்து அதன் மூலம் கிடைக்கப்பெற்ற முடிவுகள் இவை.
எமது நேரடிக் கள ஆய்வில் வெவ்வேறு மூன்று கால கட்டங்களில் தமிழ்நாடு முழுதும் 234 தொகுதிகளிலும் 35,100 பேரிடம் எடுக்கப்பட்ட தரவுகள் எமது இந்த ஆய்வுக்கு அடிப்படையாக உள்ளன.
ஆளும் அரசு திமுகவின் கடந்த ஐந்தாண்டு செயல்பாடுகள்
மு.க.ஸ்டாலினுக்குப் பெருகிய மக்கள் செல்வாக்கு
01. மறைந்த முதலைமைச்சர் மு. கருணாநிதிக்குப் பிறகு அந்தக் கட்சியை வழிநடத்தி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து 5 ஆண்டுகாலம் நிறைவு செய்கிற மு.க.ஸ்டாலின் அவர்கள் மீதான மக்களின் பொதுவான மதிப்பீடு அதிகரித்துள்ளது. அரசியல் ரீதியான விமர்சனங்கள் சில இருந்தாலும்கூட, ஓய்வின்றி உழைக்கும் அவரது செயல்பாடுகள் மக்களுக்கு வியப்பை அளித்துள்ளது. பாராட்டவும் செய்கிறார்கள்.
வெற்றி பெற்ற திட்டங்கள்
02. காலை சிற்றுண்டித் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மாணவ உதவித் தொகை, கட்டணமில்லாப் பேருந்து ஆகிய திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை பெரும்பாலான மக்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.
வாக்குறுதிகளும் நிறைவேற்றங்களும்
03. கடந்த 2021 தேர்தலின்போது திமுகவால் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கும், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளதை மக்களே கூறுகின்றனர். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படவில்லை என்ற மக்களின் அதிருப்தி ஆழமாகவே பதிந்துள்ளன.
அரசு ஊழியர்கள் அதிருப்தி
04. செவிலியர்கள், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனும் குறை அவர்கள் மத்தியில் வலுவாகவே ஒலிக்கிறது.
வரி மற்றும் டாஸ்மாக் மது
05. சொத்துவரி அதிகரிப்பும் விலைவாசி அதிகரிப்பும் மக்களை நேரடியாகவே பாதித்திருக்கின்றன. டாஸ்மாக் மதுபான விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது தனிமனிதனின் வாழ்வில், குடும்ப அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்கிறார்கள் நாம் கருத்துக் கேட்ட பெரும்பாலானவர்கள்.
பெருகிவரும் பல்வேறு புதிய போதைப் பழக்கங்கள்
06. மாநிலத்தில் மதுப்பழக்கம் தவிர பல்வேறு போதை மருந்துகள் பழக்கம் புதிதாக அதிகரித்திருப்பதும் மக்களுக்குப் பெரும் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
டாஸ்மாக் முறைகேட்டினால் அரசுக்கு இழப்பு
07. டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கும் அதிகமாக வசூலிக்கப்படும் தொகை ஐந்தாண்டில் 24 ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மையெனில் இந்தத் தொகை அரசுக்கு வராமல் தனிமனிதர்களுக்குச் செல்கிறது என்று பொருள். 24 ஆயிரம் கோடி ரூபாய் என்பது அரசுக்கு ஏற்படும் பெரும் இழப்பு. அந்தப் பணத்தை முதலீடாக இட்டால் அதன் மூலமும் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் அது அரசுக்கு வராமல் வெளியே போகிறது என்று பொருள் என்கின்றனர் நாம் சந்தித்துக் கருத்துக் கேட்ட பொருளாதார வல்லுனர்கள்.
கடனும் வட்டியும்
08. கடந்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தமிழ்நாடு அரசு கடன் வாங்கியுள்ளது. மார்ச் 2026 ல் 9.30 லட்சம் கோடி ரூபாய் இருந்த கடன் தொகை மார்ச் 2027 ல் 10.71 லட்சம் கோடி ரூபாய் என இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 189 கோடி ரூபாய் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால் வாங்கப்பட்ட இந்தக் கடன் தொகையிலிருந்து எந்த அளவுக்கு முதலீடு இடப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. அவ்வாறு வருவாய் ஈட்டும் முதலீடாக இப்பணம் பயன்படுத்தப்படவில்லையெனில், இதே நிலை நீடித்தால் விரைவில் ஊதியம் கூட கொடுக்க இயலாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
அதிகரித்த மின்கட்டணம்
09. மின்சாரக் கட்டண அதிகரிப்பு கடும் அதிருப்தியை உருவாக்கியிருப்பதை பொதுமக்கள் மட்டுமின்றி சிறு மற்றும் குறு தொழில் செய்வோர்களிடம் அதிக அளவில் கேட்க முடிந்தது. எடுத்துக்காட்டாக கோயமுத்தூர் திருப்பூர் மாவட்டங்களில் மின்சார கட்டண உயர்வு ஆயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் இழுத்து மூடப்படுவதற்குக் காரணமாகிவிட்டன என்கிற குற்றச்சாட்டுகள் அதிகமாகவே கேட்கின்றன.
நிர்வாகத்தில் கவனக்குறைவு
10. பல்வேறு தரப்புத் தரவுகளை ஆராயும்போது கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் மாநிலத்தின் இரண்டு முக்கிய அடிப்படைத் துறைகளான வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் நிர்வாகத்தில் இன்னும் ஈடுபாடும், கட்டுப்பாடும், உறுதியான நிர்வாகத்தையும் செலுத்தியிருக்க வேண்டும் என்ற கருத்துகள் வலுவாகவே முன்வைக்கப்படுகின்றன. வருவாய்த் துறையில் தலைவிரித்தாடும் கட்டுப்பாடற்ற கையூட்டு மற்றும் முறைகேடு புகார்கள் அந்தத் துறையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. காவல்துறையில் அதிகாரிகளுக்கு அவர்களுக்கே உரித்தான அதிகாரம் அளிக்கப்படாமல், சுதந்திரமாக செயல்பட இயலாமல் அரசியல் தலையீடும், அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமான அதிகாரிகளின் சிலரின் போக்கும் திமுக அரசுக்கு மக்களிடம் எதிர் மறையான பெயரை ஈட்டித் தந்துள்ளன. வருவாய்த்துறை மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்த அதிருப்தி நாம் கருத்து கேட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்தது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சம் மற்றும் அதிருப்தியை நாம் சந்தித்த பெரும்பாலானவர்கள் ஒரே குரலில் சொல்வதைக் கேட்க முடிந்தது.
இவை வெறுமனே குறை சொல்வதற்கல்ல, நமது ஆய்வின்படி நாம் இங்கு சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டுகள் அனைத்துமே அரசால் சரி செய்யப்படக்கூடியவையே என்பதை நாம் தெளிவு படுத்துகிறோம்.
இனி மக்கள் கருத்துகள்
திமுக ஆட்சி மீண்டும் வர விருப்பமா ?
இந்த நிறை – குறைகள் இருந்த போதும் மீண்டும் திமுக அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களா என்று அறிய முற்பட்டோம்.
நாம் கருத்துக் கேட்டவர்களில் 43 விழுக்காடு பேர் திமுக மீண்டும் வரலாம் தவறில்லை என்கின்றனர். ஆட்சியில் தவறுகள் இருந்தாலும் திமுக அதை சரி செய்து கொள்ளும் என்று நம்புவதாகக் கூறுகின்றனர்.
52 விழுக்காடு பேர் ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை என்கின்றனர்.
ஆட்சி மாற்றத்தில் அதிமுக ஆட்சிக்கு வருவதை விரும்புகிறீர்களா என்று கேட்டோம்.
50 விழுக்காடு மக்கள் ஆம் என்கின்றனர்
நாம் தமிழர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று கேட்டோம்.
25 விழுக்காடு மக்கள் ஆம் என்கின்றனர்.
தவெக ஆட்சிக்கு வர விரும்புகிறீர்களா என்று கேட்டபோது
18 விழுக்காடு மக்கள் ஆம் என்கின்றனர்
அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதற்காக விரும்புகிறீர்கள் என்று கேட்டோம்
57 விழுக்காடு மக்கள் ஐந்தாண்டுகள் திமுக இருந்தது, அடுத்த 5 ஆண்டுகள் அதிமுக இருக்கட்டும் என்று பொதுவாகவும் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தில் உறுதியும் கட்டுப்பாடும் இருக்கும் என்று நம்புவதாகவும் கூறுகின்றனர்.
நாம் தமிழர் ஏன் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கேட்டோம்.
அதே 25 விழுக்காடு மக்கள் – தமிழ், தமிழர் நல வாழ்வு, இயற்கை வளப் பாதுகாப்பு, வாக்குகளுக்குப் பணம் கொடுக்காத மாற்றத்திற்கான அரசியல் தேவை என்கிறார்கள்.
தவெக ஏன் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கேட்டோம்.
அதே 18 விழுக்காடு பேர் விஜய் சினிமாவில் மக்களுக்காகப் பேசுகிறார், ஆட்சியை அவரிடமும் கொடுத்துப் பார்ப்போமே என்கின்றனர். விஜய் வந்தால் நல்லது செய்வர் என்கிறார்கள்.
தலைவர்களின் தனிப்பட்ட வெற்றி வாய்ப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அவரவர் தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்பது அறிந்த ஒன்று.
இந்தமுறை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்கிறது நிலவரம்.
இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியிருக்கலாம் என்று தெரிகிறது. திருச்சி கிழக்கில் அவர் வெற்றி பெறுவது கடினம் என்கிறது கள நிலவரம்.
விஜய் யாருடைய வாக்குகளுக்கு எதிர்ப்பாக இருப்பார் ?
விஜய் தேர்தல் நிலவரம் குறித்த விதவிதமான கலந்துபட்ட தகவல்களே வெளிவருகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் கள நிலவரத்தைப் பிரதிபலிப்பதில்லை.
விஜயின் தேர்தல் அரசியல் குறித்த நடைமுறைக்கு ஒவ்வாத திரைப்படம் ஊடக பாணியிலான மிகைப்படுத்தல்கள், ரசிகர்களின் வைரல், ட்ரெண்டிங் காணொலிகளைத் தவிர்த்துவிட்டு களத்தை உற்றுக் கவனித்தால் சராசரியாக ஒரு தொகுதிக்கு அவருக்கு இருக்கும் வாக்குகள் 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்கிறது எமது ஆய்வுகள். அதுவும் 234 தொகுதிகளிலும் அதே எண்ணிக்கையில் இல்லை. பல தொகுதிகளில் மிகவும் குறைவாகவே அவருக்கான வாக்குகள் உள்ளன என்பது கள நிலவரமாக உள்ளது.
ஒரு குடும்பத்துக்கு ஒரு வாக்கு விஜய்க்கு உள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை.
தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சத்து 13,040 குடும்ப அட்டைகள் உள்ளன. அப்படியென்றால் ஒரு வீட்டுக்கு ஒருவர் என்றால் அவருக்கு 2 கோடி வாக்குகள் உள்ளன என்று எடுத்துக்கொள்ள முடியுமா ?
18 வயதுக்கு மேற்பட்ட வாக்களிக்கும் தகுதி வாய்ந்தவர்களில் விஜய் ரசிகர்கள் என்று பார்த்தாலும்கூட 2 கோடிப் பேரில் சுமார் 10 விழுக்காடு மட்டுமே விஜய் ரசிக வாக்காளர்களாக உள்ளனர்.
ஒரு திரைப்பட நடிகருக்கான ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு.
சினிமா நடிகராக ரசிக்கும் எல்லோரும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது களத்தில் தெளிவாகிறது.
மேலும் விஜய் வருகைக்குத் தொடக்கத்தில் இருந்த ஆர்ப்பரிப்பு, ஆதரவு இப்போது பெருமளவில் குறைந்து விட்டது என்பதும் நேரடியாக நமக்குக் கிடைக்கப்பெற்ற தரவுகள்.
நடிகர் விஜயைப் பார்க்கவரும் கூட்டமும் வாக்காளர் கூட்டமும் ஒன்று என்று எண்ணுவது நடைக்குமுறைக்கு ஒத்துவரவில்லை.
மிகுந்த ஆர்வம் கொண்ட விஜயின் ரசிக வாக்காளர்கள் திமுக எதிர்ப்பு வாக்குகளைத் தங்கள் வசமாக்கிக் கொள்வார்கள் அதனால் அதிமுக தோற்கும் என்கிற பொதுவான கருத்து சரியானது அல்ல என்று எமது ஆய்வில் தெரிய வருகிறது.
விஜய் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் வாக்குகள் திமுகவையும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதே உண்மை நிலவரம்.
விஜய் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் அவருக்கு நேர் எதிராக நிற்கும் வேட்பாளர்கள் திமுக வேட்பாளர்கள்.
விஜய் தமது ரசிகர்களின் வாக்குகளை மட்டுமே நம்பி அவர் போட்டியிடவில்லை. வெள்ளாளர், கிறித்துவ, இஸ்லாமிய மற்றும் பட்டியல் பெருங்குடி மக்களையும் குறிவைத்துக் களமிறங்குவதிலிருந்தும், இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதிலிருந்தும் தவெக கூறுவது போல அவர்களுக்குப் பெருமளவில் வாக்கு வங்கியெல்லாம் இல்லை என்பதை எளிதில் கணக்கிட்டுக் கொள்ள முடிகிறது.
விஜய் 7 விழுக்காடு வாங்கினாலும் அதிகபட்சமாக 15 விழுக்காடு வாங்கினாலும்கூட
நமது ஆய்வில் விஜய் கட்சியின் மொத்த வாக்குகள் திமுகவுக்கு 70 விழுக்காடு பாதிப்பையும் 30 விழுக்காடு அதிமுகவுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதே கிடைக்கப்பெறும் முடிவாக இருக்கிறது.
விஜயால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விழுக்காட்டுக்கு எந்த சேதாரமும் ஏற்படாது என்பதே ஆய்வின் முடிவாக இருக்கிறது. விஜயால் நாம் தமிழர் வாக்குகள் குறையும் என்பது தவறான தகவல் என்பதே நாங்கள் கேட்ட கருத்தின் ஆய்வின் அடிப்படையில், எடுத்த தரவுகளின் அடிப்படையில் தெரியவருகிறது. தற்போதுள்ள 8.2 விழுக்காடு நாம் தமிழரின் வாக்குகள் 12 விழுக்காடுகளைத் தாண்டும் என்பதும் எமது ஆய்வின் முடிவாக உள்ளது.
அதிமுக + திமுகவின் வாக்கு விழுக்காடு
நாம் தமிழரும் தவெகவும் இணைந்து சுமார் 20 முதல் 25 விழுக்காடு வரை எடுத்துவிட்டால் மீதமுள்ள 70 முதல் 75 விழுக்காட்டுக்குள்தான் அதிமுக – திமுக கூட்டணிகள் மோதும்.
அதிமுக திமுக ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி. தமிழ்த் தேசியம் திராவிடம் எனும் அடிப்படையில் நாம் தமிழரும் திமுகவுக்கு ஒரு போட்டிக் கட்சிதான். ஆனால் , விஜய் திமுகவுக்குப் போட்டி என்பதைக் கள நிலவரங்கள் பிரதிபலிக்கவில்லை.
திமுக போட்டியிடும் தொகுதியில் தவெக போட்டியிடுவதை மட்டுமே போட்டி என்று எடுத்துக்கொள்ள முடியாது.
யாருடைய பரப்புரை ஈர்ப்புடையதாக இருக்கிறது ? எனும் கேள்விக்கு
எடப்பாடி பழனிசாமி முதலிடத்திலும்
முக. ஸ்டாலின் இரண்டாம் இடத்திலும்
சீமான் மூன்றாம் இடத்திலும்
விஜய் நான்காவது இடத்திலும் உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுகவுக்கு சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் யார் எனும் கேள்விக்கு
எடப்பாடி பழனிச்சாமி முதலிடத்திலும்
சீமான் இரண்டாம் இடத்திலும்
விஜய் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் ஈர்ப்புடையதாக யாருடையது உள்ளது என்கிற கேள்விக்கும்
அதிமுக முதலிடத்திலும்
திமுக இரண்டாம் இடத்திலும்
நாம் தமிழர் மூன்றாம் இடத்திலும்
தவெக நான்காம் இடத்திலும் உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021 ம் ஆண்டு திமுக அளித்த தேர்தல் அறிக்கையை செயல்படுத்தியதில் திருப்தியா என்கிற கேள்விக்கு
15 விழுக்காடு பேர் மட்டுமே திருப்தி என்று கூறுகின்றனர்.
85 விழுக்காடு பேர் அதிருப்தி என்றே கூறுகின்றனர்
அரசு நிர்வாகத்திற்கு சிறந்தவர் யார் என்கிற கேள்விக்கு
எடப்பாடி பழனிசாமி முதலிடத்திலும்
மு.க. ஸ்டாலின் இரண்டாம் இடத்திலும்
சீமான் மூன்றாம் இடத்திலும்
உதயநிதி நான்காம் இடத்திலும்
விஜய் ஐந்தாம் இடத்திலும் உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவர்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆற்றல் படைத்தவர் யார் என்கிற கேள்விக்கு…
எடப்பாடி பழனிச்சாமி முதலாம் இடத்திலும்,
மு.க. ஸ்டாலின் இரண்டாம் இடத்திலும் உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல திமுகவை வெற்றி கொள்ளும் ஆற்றல் படைத்த கட்சி எது என்கிற கேள்விக்கு
அதிமுகதான் என்று நாம் சந்தித்த 75 விழுக்காடு மக்கள் பதில் அளிக்கின்றனர்.
எந்தத் தலைவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும் என்கிற கேள்விக்கு
எடப்பாடி பழனிச்சாமி என்று 40 விழுக்காடு பேரும்
மு.க..ஸ்டாலின் என்று 34 விழுக்காடு மக்களும்
சீமான் என்று 21 விழுக்காடு மக்களும்
விஜய் என்று 5 விழுக்காடு மக்களும் கூறுகின்றனர்.
எந்தத்தலைவர் மீது மக்களுக்கு எதிர்மறையான கருத்து அதிகமாக உள்ளது
85 விழுக்காடு மு.க.ஸ்டாலின் மீதும்
3 விழுக்காடு எடப்பாடி பழனிச்சாமி மீதும்
7 விழுக்காடு விஜய் மீதும் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
அதிமுக திமுக அறிவித்த 8000 ரூபாய் கூப்பன் மற்றும் 10000 ரூ உதவித்தொகை. எது பிடித்திருக்கிறது என்கிற கேள்விக்கு
89 விழுக்காடு பேர் 10 ஆயிரம் பணம் என்றே கூறுகின்றனர்
திமுக அதிமுக இடையேயான போட்டி
திமுக கூட்டணி கடந்த தேர்தல்களின் அடிப்படையில் 45 விழுக்காடு உள்ள நிலையில் எதிர்மறை அலை மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே உள்ள பூசல்கள், அரசு ஊழியர் அதிருப்தி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிகரித்த போதைப் பழக்கம் காரணமாக இந்த முறை அக்கட்சி பெறும் வாக்குகள் 2 முதல் 5 விழுக்காடு வரை குறைய வாய்ப்புள்ளது.
அதேவேளை அதிமுக + பாஜக கூட்டணி பெறவிருக்கும் வாக்குகள் 39 லிருந்து 43 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளது.
திமுக கூட்டணி 80 முதல் 95 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது
அதிமுக கூட்டணி 135 முதல் 150 இடங்கள் வரை வெற்றி பெறவாய்ப்புள்ளது.
நாம் தமிழர் கட்சி காரைக்குடியிலும், கன்னியாகுமரியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
தவெக 3 முதல் 5 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக நமது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கோயமுத்தூர், திருப்பூர், நெல்லை, தென்காசி மற்றும் நெல்லை உள்ளிட்ட சுமார் 30 தொகுதிகளில் திமுக மூன்றாம் இடத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
கடந்த 2021 தேர்தல் போல இரு கட்சிகளுக்கு இடையே இடங்களில் பெரிய இடைவெளி இருக்க வாய்ப்பில்லை.
குறிப்பு : மாநிலம் முழுவதும் பொதுவாகத் திமுகவுக்குப் பின்னைடைவு ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் கடுமையான அதிருப்தி பெரும் பங்கு வகிக்கிறது.
நன்றி

