-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
நடந்து முடிந்த 2026 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் புதிய வரலாறு படைத்திருக்கிறது. மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் எனபதை உரக்கச் சொல்லியிருக்கிறது.
பொதுவாகவே ஆளும் அரசுக்கு எதிரான கடும் அதிருப்தி இருந்தால் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்பது தேர்தல் நடைமுறை.
கடந்த 1949 ம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக 1967 ம் ஆண்டுதான் முதன் முதலாக ஆட்சியைப் பிடித்தது. அதற்காக சுமார் 17 ஆண்டுகாலம் அந்தக் கட்சி போராடிக்கொண்டிருந்தது.
எனினும், அந்தக் கட்சி 1972 ம் ஆண்டு இரண்டாகப் பிளந்தது. அறிஞர் அண்ணாவால் அக்கட்சிக்குக் கொண்டுவரப்பட்ட எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். வெளியே வந்த அவர் “அண்ணா திராவிட முன்னேற்றக கழகம்” என்று தொடங்கினார். இதுதான் அண்ணா உருவாக்கிய உண்மையான திராவிட முன்னேற்றக் கழகம் என்று அறிவித்தார்.
கருணாநிதி திமுக
எம்.ஜி.ஆர் வெளியேறிய பிறகு கருணாநிதி தலைமையிலான திமுக “கருணாநிதி திமுகவாகவே மாறியது”. இன்றுவரை அது கருணாநிதி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அக்கட்சியின் தலைவராக கருணாநிதி குடும்பத்தினரைத் தவிர வேறு எவரும் வர இயலாது எனும் நிலை.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின். அவருக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின், அவருக்கு அடுத்து இன்பநிதி ஸ்டாலின் என்று இப்போதே கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வரிசை கட்டியாகிவிட்டது.
அந்தப் பரம்பரை வகையில் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். 2026 ல் இரண்டாவது முறையாக அவர் போட்டியிட்டார்.
அதிகரித்த வாக்குப்பதிவு
கடந்த 2021 தேர்தலை ஒப்பிடும்போது இந்த 2026 தேர்தலில் சுமார் 20 லட்சம் வாக்குகள் அதிகரித்துள்ளன.
அதேவேளை, கடந்த 2024 நாடாளுன்றத் தேர்தலை ஒப்பிடும்போது சுமார் 50 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.
SIR எனும் சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு அடுத்து நடந்த இந்தத் தேர்தலில் வாக்கு விழுக்காடும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் வாக்குப் பதிவு விழுக்காடு 90 ஐத் தாண்டியுள்ளன.
கடந்த 2021 தேர்தலில் 76.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் இந்த 2026 தேர்தலில் 84.73 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆளும் அரசு மீது அதிருப்தி !
இது விஜய் கட்சியின் வாக்குகளைத் தவிர ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையையும் பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இந்தத் தேர்தலில் விஜயின் வருகை அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன.
எனினும், கிறித்தவ, பட்டியல் மற்றும் பெண்கள் வாக்குகளை அதிகம் விஜயின் தவெக பெற்றுள்ளதால் அதிமுகவை விட திமுகவின் வாக்கு வாங்கியையே விஜயின் தவெக பெருமளவில் சிதைத்துள்ளது.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இயல்பாகவே அக்கூட்டணிக்கு கிறித்தவ, இஸ்லாமிய மற்றும் பட்டியல் வாக்குகள் செல்லாது என்பது இயல்பு.
விஜய்க்கு அதிக வாக்குகள்
நடிகர் விஜயின் தவெகாவுக்கு குறைந்தது 15 விழுக்காடு வாக்குகள் உறுதியாக விழுந்துள்ளன என்பதற்கான அறிகுறி, “வாக்குப்பதிவு அன்று காலை 11 மணி சுமாருக்கு 37 விழுக்காடு வாக்குகள் பதிவானதே”.
வழக்கமாக வாக்குப்பதிவு அன்று காலை 11 மணி சுமாருக்கு 18 முதல் 20 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாவது வழக்கம்.
ஆனால், இந்த முறை தமது கட்சிக்காரர்களை, வாக்குப் பதிவு அன்று காலையே வாக்களித்துவிடுமாறு விஜய் கூறியிருந்தார்.
அந்த அடிப்படையில் காலை 11 மணிக்கு முன்னதாகவே தவெகவினர் வாக்குச்சாவடிகளில் குவிந்தனர்.
எனவே, 37 விழுக்காடு விழுந்த வாக்குகளில் சுமார் 15 முதல் 17 விழுக்காடு வாக்குகள் விஜய் ரசிகர்கள் கட்சியினரின் வாக்குகளே.
மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலை விடவும், நாடாளுமன்றத் தேர்தலை விடவும் அதிகமாக பதிவான சுமார் 50 லட்சம் வாக்குகளில் விஜயின் தவெக வாக்குக்களும் அடக்கம்.
அதிலும் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் வாக்குப் பதிவு விழுக்காடு 90 ஐத் தாண்டியுள்ளது.
எனவே விஜய் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார் என்பது உறுதியாகிறது.
அதிகரிக்கும் சீமானின் நாம் தமிழர் வாக்குகள்
அதேபோல சீமானின் நாம் தமிழர் கட்சி வாக்குகளும் கணிசமாக அதிகரித்துள்ளன என்பதும் தெளிவாகிறது.
ஏற்கனவே 8.2 விழுக்காடு வாக்குகள் கொண்ட சீமானின் நாம் தமிழர் இந்தத் தேர்தலில் 12 முதல் 15 விழுக்காடு வாக்குகள் அதாவது 50 லட்சம் முதல் 70 லட்சம் வாக்குகள் வரை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன.
சீமான் மற்றும் விஜய் ஆகியோர் சுமார் 1.5 கோடி வாக்குகளைப் பெற்றிருப்பதால் தமிழ்நாட்டின் அரசியலை இந்த இருவரது வாக்குகள் புரட்டிப் போடும் என்பது மட்டும் உறுதி.
தமிழ் ஊடகம் நடத்திய தேர்தல் கள நிலவர ஆய்வில், திமுக மீதான குடும்ப அரசியல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மின்கட்டண உயர்வு, அரசு ஊழியர் அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால் அதிமுகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற மக்களின் கருத்தை வெளியிட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

