HomeIndia135 இடங்களில் அதிமுக,...

135 இடங்களில் அதிமுக, 80 இடங்களில் திமுக, 10 இடங்களில் நாதக வெற்றி ! தமிழ்நாடு தேர்தல் 2026 – தமிழ் ஊடகம் இறுதிக் கட்ட களநிலவரம்

இந்தத் தேர்தலில் இளைய தலைமுறையினர் பெருமளவில் அரசியல் பாதையை நோக்கி திரும்பியிருக்கிறார்கள் என்பது பொதுவான மகிழ்ச்சியான ஒரு தகவல்.

மேலும் இந்தத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்குகள் பெருமளவில் குறையும் என்பது இரண்டாவது முக்கியமான தகவல்.

தமிழ் ஊடகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றும் இந்தாண்டு ஜனவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடத்திய கள ஆய்வு மற்றும் தேர்தல் ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற முடிவுகளைக் கடந்த 14 ம் தேதியன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டோம்.

அதில் பல்வேறு சாதக பாதக காரணங்களை முன்வைத்து தேர்தல் முடிவுகள் இப்படி இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்தோம்.

அதன்படி,

திமுக கூட்டணி 80 முதல் 95 இடங்களிலும், அதிமுக கூட்டணி 135 முதல் 150 இடங்கள் வரையிலும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கள ஆய்வில் நாம் சந்தித்த வாக்காளர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வு முடிவாக கடந்த 14 ம் தேதியன்று தெரிவித்திருந்தோம்.

மேலும், நாம் தமிழர் ஒரு இடத்திலும் தவெக மூன்று முதல் ஐந்து இடங்களிலும் வெல்ல வாய்ப்பு உள்ளது என்றும் அன்று குறிப்பிட்டிருந்தோம்.

இதில் சுமார் 30 தொகுதிகளில் திமுக மூன்றாம் இடத்திற்குச் செல்லவும் வாய்ப்புள்ளது என்றும் அன்று குறிப்பிட்டிருந்தோம்.

அந்த முடிவுகள் இந்த மாதம் 5 ம் தேதி வரையிலான நமது கள ஆய்வில் கிடைக்கப்பெற்ற தரவுகள் அடிப்படையில் கிடைத்த முடிவுகள்.

அதன்பிறகு அதே 5 ம் தேதியிலிருந்து நேற்று 20 ம் தேதி வரையிலான புதிய தரவுகளை எடுத்தோம். தலா 50 மாதிரிகளை எடுத்து நாம் ஆய்ந்து பார்த்ததில் களம் மாற்றம் கண்டிருப்பது தெரிய வருகிறது..

குறிப்பாக திமுக – அதிமுக இடையே போட்டிகள் ஒருபுறம் இருக்க வாக்காளர்களின் தேர்வில் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிப்பது குறித்து வெளிப்படையாகவே பேசுவதைக் காண முடிந்தது.

அதிமுக – திமுக என்கிற இரண்டு தேர்வுகள் தவிர கூடுதலாக மூன்று நான்கு என மொத்தம் நான்கு தேர்வுகள் மக்கள் மத்தியில் உள்ளது என்பதால் மக்கள் இந்த முறை நோட்டாவுக்கு அளிக்கவிருக்கும் வாக்குகள் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.

இந்த இறுதிக்கட்ட ஆய்வில் புதிய ஒரு தரவாக நாம் தமிழர் கட்சியின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதை அறிய முடிந்தது.

மேலும், சுமார் 30 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி இரண்டாம் இடம் பெறவும் வாய்ப்புகள் உள்ளன என்பதும் இந்த ஆய்வில் தெரிய வருகிறது.

இந்த இறுதி நேர மாற்றத்திற்கான கரணம் தவெக.

தவெகவின் மீது மக்களுக்கு இருந்த பொத்தாம் பொதுவான நம்பிக்கை குறைந்து தற்போது அது மிகவும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிவிட்டது.

எனினும், விஜயின் தவெக, “அதிமுக வாக்குகள் சுமார் 30 விழுக்காட்டையும் திமுக வாக்குகள் சுமார் 70 விழுக்காட்டையும் பிரித்து எடுத்துக்கொள்வதால்” அதிமுக, திமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே பிரியும் வாக்குகள் காரணமாக நாம் தமிழருக்கு விழும் சிந்தாத சிதறாத வாக்குகள் அக்கட்சிக்கு பெரும் பலத்தை இந்தத் தேர்தலில் அளிக்கின்றன.

நாம் தமிழர் கட்சிக்கான புதிய வாக்காளர்கள் இயல்பாகவே அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தேர்தலில் உருவாகியிருக்கும் புதிய மாற்றம் நாம் தமிழருக்குத் தேவையான குளிரூட்டும் மழையைத் தருகிறது.

எனினும், ஒருவேளை விஜயின் தவெக இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால் நாம் தமிழர் மிக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பும், எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும் வாய்ப்பும் உறுதியாக இருந்திருக்கும் என்பதும் கள ஆய்வில் தெரிய வருகிறது.

அதேவேளை, விஜயின் தவெக காரணமாகவே மக்களுக்கு நாம் தமிழர் கட்சி குறித்து அதிகம் அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இரண்டு கட்சிகளையும் மக்கள் ஒப்பிட்டு சீர் தூக்கிப் பார்க்கிறார்கள். இந்த ஒப்பீடு, கடந்த 15 ஆண்டுகளாக சளைக்காது உழைக்கும் நாம் தமிழர் கட்சி அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேருவதற்கு ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

விஜயின் தேர்தல் மீதான உறுதிப்பாடு இல்லாத, பொறுப்பற்ற, துணிச்சலற்ற நடைமுறைகளும், பரப்புரைப் பயணத்தைக் கூட ரத்து செய்யும் செயல்பாடுகளும் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

விஜய் ஒரு அரசியல் தலைவராக மக்கள் பிரச்சனை எதைப்பற்றியும் பேசாமல் “ரோட் ஷோ” நடத்துவதிலும், ரீல்ஸ், ஷார்ட்ஸ் ஆகியவற்றில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன என்பது மக்களிடம் நாம் முன்வைத்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களிலிருந்து தெரியவந்துள்ளது.

மக்கள் மனதில் ஒரு அரசியல் தலைவராக இடம் பெறாமல் புகழும், செல்வாக்கும் வசதியும் படைத்த சினிமா கதாநாயகன் போன்ற உணர்வு மட்டுமே விஜய் மீது பதிந்துள்ளதால் அவரது சினிமா புகழுக்கான வாக்குகள் மட்டுமே அவருக்கு விழ வாய்ப்புள்ளதே தவிர பொறுப்புடன் சிந்திக்கும் மக்களின் வாக்குகள் விஜயின் தவெகாவுக்கு இந்தத் தேர்தலில் விழ வாய்ப்புகள் இல்லை என்பது நாம் கருத்து கேட்ட மக்களின் மூலம் தெளிவாகிறது.

மேலும் விஜய்க்கு அளிக்கும் வாக்குகளால் இந்தத் தேர்தலில் மக்களுக்கு எந்தவிதப் பலனும் ஏற்படாது என்றே பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.

அதே வேளை பொறுப்புள்ள ஒரு அரசியல் இயக்கம் என்று மக்களிடம் பெயர் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் 10 இடங்களில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன என்கின்றன நமது இறுதிக்கட்ட கள நிலவரம்.

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி, அக்கட்சியின் வேட்பாளர்கள் கார்த்திகேயன் போட்டியிடும் பல்லாவரம், ஹிம்லர் போட்டியிடும் கிள்ளியூர், திருமுருகன் போட்டியிடும் ஒரத்தநாடு, நத்தம் சிவசங்கரன் போட்டியிடும் அம்பாசமுத்திரம், கார்த்திகா போட்டியிடும் கீழ் வேளூர், மரிய ஜெனிபர் போட்டியிடும் கன்னியாகுமரி, தாரிக்கா சல்மான் போட்டியிடும் ராணிப்பேட்டை, முதுகுளத்தூர் சந்திரபிரபா, தூத்துக்குடி ஜேகப் தேவதாஸ் அபிஷேக் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் வெற்றி பெற அதிக அளவு வாய்ப்புகள் உள்ளன என்கிறது கள நிலவரம்.

இதில் ஐந்து தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் தங்களை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளனர்.

இவை தவிர சுமார் 30 தொகுதிகளில் நாம் தமிழர் இரண்டாம் இடம் பிடிக்கிறது என்பதும் இந்த இறுதிக் கட்ட கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிமுக, திமுக ஆகிய வாக்குகளை பிரித்தும், தமது இரசிகர்களின் வாக்குகளை மட்டுமே விஜயின் தவெக பெறவிருப்பதால் வெற்றி பெறுவதற்கான இடங்கள் குறைவாகவே உள்ளன. தவெக, விஜய் போட்டியிடும் பெரம்பூர், செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிபாளையம், சத்தியபாமா போட்டியிடும் திருப்பூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் உள்ளன. அதாவது 234 தொகுதிகளிலும் தவெக 8 முதல் 15 விழுக்காடு வாக்குகளைப் பெற வாய்ப்புகள் உள்ளபோதும் அந்த அளவுக்கு இடங்களை வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்கிறது இறுதிக்கட்ட கள நிலவரம்.

பல தொகுதிகளில் இழுபறி ஏற்பட தவெக காரணமாக இருக்கிறது.

ஆக இறுதி நிலவரமாக

அதிமுக 135 தொகுதிகள்

திமுக 80 தொகுதிகள்

நாம் தமிழர் 10 தொகுதிகள்

தவெக 5 தொகுதிகள் மற்றும் பிற வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதே தமிழ் ஊடகம் நடத்திய இறுதிக்கட்ட கள ஆய்வு முடிவாக இருக்கிறது.

குறிப்பு : இது தமிழ் ஊடகம் சந்தித்து கருத்துக் கேட்ட சுமார் 35 ஆயிரம் பேரின் கருத்துகள் அடிப்படையிலானது. 5.73 கோடி வாக்காளர்களின் ஒப்புதல் வாக்குமூலம் அல்ல. இந்த ஆய்வு முடிவுகள், தேர்தல் வாக்களிப்பில் அப்படியே பிரதிபலிக்கிறதா அல்லது மாற்றம் பெறுகிறதா என்பது மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று தெரியவரும்.

வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம் 21/4/26

spot_img

Continue reading

பங்களா வீட்டு பூனைக்குட்டிகளும் திமுக...

"விடுதலை இயக்கத்தினரை வைத்து என்னைக் கொ*லை செய்ய வைகோ சதி செய்தார்" என்று குற்றம் சாட்டி திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அவருக்காக சுமார் ஒன்பது பேர் தீக்குளித்து உயிரை மாய்த்தனர். மு.க.ஸ்டாலினுக்கு பட்டம் சூட்ட வசதியாக தம்மை கருணாநிதி வெளியேற்றியதாக கர்ச்சனை செய்தார் வைகோ. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குடும்பத்தை மோளம் அடிப்பவர்கள் என்று பொது...

ஈ*ழத் தமிழர்களை கொன்ற*ழித்த காங்கிரசைத் தமிழ்நாட்டில் காலூன்ற வைக்கும் நடிகர் விஜய் ! ராகுலின் வருகைக்குப் பிறகு விஜயின் பேச்சில் மாற்றம் !

நடிகர் விஜய் முகமூடியில் தமிழ் நாட்டில் ஊடுருவும் காங்கிரஸ் : பின்னணியில் ராகுல் காந்தி ! மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்த்த ராகுல் காந்தி ராகுலின் வருகைக்குப் பிறகு விஜயின் பேச்சில் மாற்றம் ! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் நடிகர் விஜய் "கமல்ஹாசன் 2.0" என்று நாம் நமது தமிழ் ஊடகத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். காரணம் இன்றைய விஜய் போலவே கமல்ஹாசன் அன்று தனித்து...

“கூட்டணி சேருங்க சீமான் !” : கிட்னி எடுக்க விடுக்கப்படும் அழைப்புகள் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் சீமான் மட்டும் கூட்டணி சேர்ந்திருந்தால் எதிர்க்கட்சியாக வந்திருக்கலாம், ஆளும்கட்சியாக வந்திருக்கலாம், அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருக்கலாம், ஆப்பிரிக்க அதிபர் ஆகியிருக்கலாம், ஐநா தலைவர் ஆகியிருக்கலாம் என்றெல்லாம் தொடர்ந்து அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படுவதை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது. உண்மையில் சீமான் கூட்டணி சேர்ந்திருந்தால் இந்நேரம் பிரேமலதாவுக்கோ செந்தில் பாலாஜிக்கோ வாக்கு சேகரிக்கும்...