-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சீமான் மட்டும் கூட்டணி சேர்ந்திருந்தால் எதிர்க்கட்சியாக வந்திருக்கலாம், ஆளும்கட்சியாக வந்திருக்கலாம், அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருக்கலாம், ஆப்பிரிக்க அதிபர் ஆகியிருக்கலாம், ஐநா தலைவர் ஆகியிருக்கலாம் என்றெல்லாம் தொடர்ந்து அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படுவதை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது.
உண்மையில் சீமான் கூட்டணி சேர்ந்திருந்தால் இந்நேரம் பிரேமலதாவுக்கோ செந்தில் பாலாஜிக்கோ வாக்கு சேகரிக்கும் பேச்சாளர் ஆகியிருப்பார்.
ஒத்தை இடங்கள், இரட்டை இடங்களுக்கு அறிவாலய வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்.
நாம் தமிழர் கட்சி அந்தப் பிழைப்பு பிழைக்க உருவாக்கப்பட்டதல்ல, சீமான் அதற்காக அந்த இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஆகவில்லை.
தமிழ்நாட்டில் அதிமுக – திமுக ஆகிய இரண்டு கட்சிகளைத் தாண்டி எந்த ஒரு கட்சியும் ஆட்சி என்பதைக் கனவில் கூடக் காண முடியாத நிலையை இரண்டு கட்சிகளும் உருவாக்கி வைத்திருக்கின்றன.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் வேறு எவரையும் உள்ளே விட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் முனைப்பாக இருந்தார்கள்.
இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் எதிரிகளாக நிறுத்திக்கொண்டு அடித்துக் கொள்வது போல நடித்தே வேறு எவரையும் மேலெழுந்து விடாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.
கருணாநிதி தன்னைச் சுற்றி ஒரு “ஒளிவட்டம்” உருவாக்கிக்கொண்டார்.
கருணாநிதி திமுகவை தமது குடும்ப சொத்தாக்கிக் கொண்டு கட்சியின் முதுகெலும்பும் மூளையும் தமது குடும்ப உறுப்பினர்கள் கைகளில் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.
திராவிடம், சமூக நீதி, மதச்சார்பற்ற என்கிற பெயரில் கருணாநிதி குடும்பம்தான் திமுகவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
ஆக, அது ஒரு ஜனநாயகமற்ற குடும்ப உரிமை கொண்ட கட்சிக் கம்பெனி.
அந்த வகையில் அதிமுகவை பாராட்டலாம். இதுவரை அக்கட்சியில் தந்தை மகன், பெயரன் என்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுப்பாட்டில் அக்கட்சி இல்லை.
ஜானகி எம்ஜியாரைத் தவிர வேறு யாரும் குடும்ப வாரிசுகள் அல்ல. ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி என்று இரத்த சொந்தங்கள் அல்லாதவர்களால் அக்கட்சி நடத்தப்படுகிறது.
மூன்றாவது கட்சிகளாக உருவான மதிமுக, தேமுதிக, பாமக, விசிக ஆகிய கட்சிகளின் தற்போதய நிலை என்ன ?
அதிமுக – திமுகவுடன் கூட்டணி வைத்துத் தேய்ந்து சிறுத்து உதிரிக் கட்சிகளாக, சாதிக் கட்சிகளாக அப்பா – மகன், கணவன் – மனைவி – மச்சான் என்று சிறு நிறுவனங்களாகி நிற்கின்றன.
ஆக, இந்தக் கட்சிகளால் தமிழ்நாட்டின் மொத்த நலனுக்கு என்ன பங்களிப்பு என்று பார்த்தால் எந்தப் பலனும் இல்லை.
அடுக்குப் பாத்திரத்தில் சொருகு போசிகள் போல வாக்கரசியலுக்கான, தேர்தல் வியாபாரத்திற்கான பொருட்கள் ஆகி நிற்கின்றன.
இவற்றில் எந்தக் கட்சிக்காவது இந்த மாநிலத்தின் மண்ணை, மலையை, ஆற்றைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறதா?
இவற்றில் எந்தக் கட்சிக்காவது ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தைத் தர வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறதா ?
இவற்றில் எந்தக்கட்சிக்காவது போதைப் பழக்கம் அற்ற ஒரு தலைமுறையையாவது உருவாக்கும் எண்ணம் இருக்கிறதா?!
வாக்குகளுக்குப் பணம் கொடுக்காமல் தேர்தல் நேர்மையாக, நியாயமாக நடத்தப்படவேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறதா ?
மாநில உரிமைகள் என்று இவர்கள் இழக்காத ஒரு உரிமையாவது மீதம் உள்ளதா ?
சாதி ஒழிப்பு, மத மறுப்பு என்று இவர்களிடம் ஒரு நடைமுறை இருக்கிறதா ?!
எல்லாவற்றிலும் இரட்டை வேடம், பொய், புரட்டு ஒரு தேர்தலில் ஒரு நிலைப்பாடு, மற்றொரு தேர்தலில் மற்றொரு நிலைப்பாடு. நேர் எதிர் தளத்தில் நின்று வெட்கமே இல்லாமல் அரசியல் செய்கிற கொடுமை.
பணமும், பதவியும் வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் பொய்கள் பேசுவது, அதற்கென கூலி கொடுத்து ஆட்களை நியமித்து நடிப்பது, திருடுவது, கொள்ளை அடிப்பது…என ஆட்சி அதிகாரம், பணம், சொத்து என்பதைத் தவிர இக்கட்சிகளுக்கு என்ன இலக்கு இருக்கிறது?
இக்கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து இவற்றில் எதையாவது திருத்தி, நிமிர்த்தி நிலை நிறுத்தி தமிழ்நாட்டை….தமிழர்களைத் தலை நிமிர வைக்க முடியுமா ?
இவர்களோடு கூட்டு சேருவது தூய பாலைக் கறந்து சாக்கடையில் ஊற்றவது போன்றதல்லவா ?
இதுவா தமிழர் நாகரிகம் , இதுவா தமிழர் அரசியல் ? இதுவா வாழ்க்கை ?
இல்லையே….
பிறகு தமிழர் வாழ்வு, அரசியல், பண்பாடு, நாகரிகத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாத இவர்களோடு கூட்டு சேர்ந்து ஒரு சீட்டு, இரண்டு சீட்டுகளுக்குப் பிச்சை எடுக்கவா தமிழரினம் இத்தனை ஆயிரம் ஆண்டுகாலம் இந்த மண்ணில் பூத்துக் கொண்டேயிருக்கிறது ?!
தமிழருக்கு எதிரான இந்தத் தீமைகள் அனைத்தும் விரைவில் அழியும். அப்போது தமிழர் அரசியல், நாகரிகம், வாழ்க்கை தனித்து நிற்கும்.
அப்போது நாம் தமிழரோடு கொள்கைப்படி நடப்பவர்கள் அக்கட்சியின் கூட்டணிக்கு வரட்டும். அதுவரை நாம் தமிழர் தனித்தே போட்டியிடட்டும்.
இந்தக் கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்கள், கொள்கை வழி நிற்க இயலாதவர்கள் உண்டு, உறங்கி, செத்துப்போய்விடட்டும்.
அடுத்தடுத்து பிறக்கும் உயிர்களில் இன்றைய 50 லட்சம் நாம் தமிழர்களின் மாரபணுக்கள் 5 கோடியென வீரியமாகப் பிறக்கட்டும்.
அதுவரை நாம் தமிழர் தனித்தே போட்டியிடட்டும்.

