– தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் எச்சரிக்கை
இதுகுறித்த வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதோடு எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வன் பிரதீபன் அவர்களுடைய ஐந்து புத்தகங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு கலைஞர் தனது இன மக்களின் வரலாற்று அனுபவங்கள், உணர்வுகள் மற்றும் நினைவுகளைப் பாடல்களின் வழியாகவும், படைப்புகளின் வழியாகவும் வெளிப்படுத்தியதற்காகக் கைது செய்யப்படுவது கருத்துரிமை மற்றும் கலைச் சுதந்திரம் தொடர்பாக கடுமையானக் கேள்விகளை எழுப்புகிறது.
இலங்கை அரசு தொடர்ச்சியாக ஈழத் தமிழர்களை அடக்கியாளக் கையாளும் நடைமுறைகளில் ஒன்றாகவே இது விளங்குகிறது. செம்மணி மனிதப் புதைகுடிகளில் தற்போது வரை 296 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கிடைத்துள்ள நிலையில், இவ்வாறான கருத்து சுதந்திரத்திற்கும், கலை படைப்புகளுக்கும் எதிரான கைது விவகாரங்கள், ஈழத் தமிழர்களிடையே மேலும் அச்சத்தையே உருவாக்கி இருக்கிறது.
இனப்படுகொலை, சித்திரவதை, கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட கொடுமைகளால் ஆழமாகக் காயமடைந்து, அதன் வேதனைகளிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் மீது, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகளைக் கடந்தகால அடக்குமுறைகளின் நீட்சியாகவே பார்க்கிறோம்.
சனநாயக நாடென்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் இலங்கை அரசாங்கம், கருத்து வேறுபாடுகள் அல்லது கலைப் படைப்புகளைச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் அணுகுவது மக்களிடையே அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக தங்களை முன்னேற்றவாத, சனநாயக மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இடதுசாரி அரசாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆட்சியின் காலத்தில் இத்தகைய நடவடிக்கை இடம்பெற்றிருப்பது ஏமாற்றமளிக்கிறது.
கலைஞர் சங்கீத்சன் மீதான நடவடிக்கையை, இலங்கை அரசு மறுபரிசீலனை செய்து, கருத்துச் சுதந்திரம் மற்றும் உரிமைகளின் அடிப்படையில், அவரது விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும். அதோடு எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வன் பிரதீபன் அவர்களுடைய பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து புத்தகங்களையும் திரும்ப அளிக்க வேண்டும்.
இலங்கை சனாதிபதி அனுரகுமார திசநாயக்காவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையீடு செய்து, இந்த விவகாரத்தில் சரியானத் தீர்வை வழங்க வேண்டும். விரைவான விடுதலை தவறும் பட்சத்தில், தமிழ்நாட்டின் இளையோரையும் மக்களையும் ஒன்று திரட்டி, இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் எச்சரிக்கிறேன்.”
இவ்வாறு வேல்முருகன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

