– பெ. மணியரசன், தலைவர் : தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் – 2026 முடிவுகள் தமிழ்த்தேசியர்கட்கு ஒரு பக்கம் பேரதிர்வை உண்டாக்கியுள்ளன. நாம் தமிழர்கட்சி 2024-இல் வாங்கிய வாக்கு எண்ணிக்கையில் சரிபாதி இப்போது குறைந்து விட்டது. அக்கட்சியின் ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை.
அதே வேளை தமிழ்த்தேசியர்கட்கு மற்றொரு பக்கம் வாசல் அகலமாகத் திறக்கப்பட்டுளது. “எங்களை ஆட்ட முடியாது, அசைக்க முடியாது” என்று ஆணவத்தோடு, 50 ஆண்டுகளாக தமிழின மறைப்பு – போலி திராவிட இனத்திணிப்பு – இலஞ்சக் கொள்ளை முதலியவற்றை அரங்கேற்றிக் கொண்டு, இந்திய ஏகாதிபத்தியச் சேவையும் செய்து வந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரு சேர வீழ்த்தப்பட்டுள்ளன. இவ்விரண்டில் ஒன்றைத் தோற்கடித்து மற்றொன்றை அரங்கேற்றும் திராவிட ஆட்டம் படுதோல்வி கண்டுள்ளது. திராவிட இரட்டையர் வீழ்த்தப்பட்டுள்ளனர். அதேபோல், பாரத்தீயக் காலனி ஆதிக்க இரட்டையர்களான பா.ச.க.வும், காங்கிரசும் வீழ்த்தப்பட்டுள்ளன.
இலங்கை, வங்காள தேசம் போன்ற நாடுகளில் – திடீர் மக்கள் எழுச்சி கிளம்பி சர்வாதிகார – ஊழல் மயமான ஆட்சியாளர்களை வீழ்த்தி, புதிய இளையோரை ஆட்சியில் அமர்த்தினர்.
வடநாட்டிலே – புதுதில்லியிலே – கரப்பான் பூச்சி இயக்கம் என்ற பெயரில் இளையோர் அமைப்பு உருவாகி – பெருந்திரள் போராட்டங்களை நடத்துகிறது.
உலகின் பல பகுதிகளில் நிரந்தர அரசியல் பூதங்கள் நடத்திவந்த எதேச்சாதிகாரம் – ஊழல் கொள்ளை – மேட்டுக்குடி அரசியல் அனைத்திற்கும் எதிராக – இளந்தலைமுறைகள் வீதிக்கு வந்து – ஆட்சியாளர்களின் அரண்மனைகளைக் கைப்பற்றி புரட்சி செய்தனர். தமிழ்நாட்டில், வாக்கு அரசியலில் இப்போது இளையோரும் மக்களும் நிரந்தர அரசியல் பூதங்களை நீக்கியுள்ளனர்.
கவர்ச்சியும் உண்டு, கவர்ச்சி மட்டுமே அல்ல !
இந்த மாற்றத்தில், நடிகர் விஜயை மாற்றாகத் தேர்ந்தெடுத்ததில், கவர்ச்சி அரசியலும் இருக்கிறது. ஆனால் அது முழுக்கமுழுக்க கவர்ச்சி அரசியலால் மட்டுமே நடந்த மாற்றம் என்று கணிப்பது தவறான கணக்கு! தி.மு.க., அ.தி.மு.க., பா.ச.க., காங்கிரசுக் கட்சிகள் மீது தமிழ் மக்கள் கொண்ட எதிர்ப்பு இத் தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சொந்தக் கட்சிக்காரர்களின் உட்கட்சி எதிர்ப்பு, இவற்றின் நாட்டாண்மையால் காயமுற்ற கூட்டணிக் கட்சிகளின் குமுறல் எனப் பல காரணங்கள் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் தோல்வியில் இருக்கின்றன. இவற்றுள் “பழைய பூதங்களை மாற்றியாக வேண்டும்” என்ற அனைத்துப் பிரிவு மக்களின் எழுச்சி முகாமையானது!
மேற்படி பழம் பூத இரு முகாம்களுக்கு மாற்றாக – வெற்றி பெறும் வாய்ப்பு விஜய்க்கு இருக்கிறதென்பதை அறிந்து, நடுநிலையாளர்கள், மாற்றம் விரும்புவோர் எனப் பல தரப்பினரும் விஜய் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்கள் புது வேட்பாளர்கள் – பெரும்பாலோர் அரசியல் ஊழலில் சிக்காத புதியவர்கள் – இளையோர்!
தேர்தல் அரசியலில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்தது சரி! ஆனால் ஓர் உண்மையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்; கணக்கில் கொள்ள வேண்டும்!
தமிழ்நாடு சட்டப்பேரவை அதிகாரம் என்ன ?
தமிழ்நாடு – தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநிலம் அல்ல! தமிழ்நாடு சட்டப் பேரவையே, புதுதில்லியால் அமர்த்தப்படும் ஆளுநருக்குக் கீழ்ப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களும் ஆதரித்து ஒரு சட்ட முன்வடிவை (மசோதாவை) நிறைவேற்றினாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத – புதுதில்லி அமர்த்திய அதிகாரியான – ஆளுநர் அதை ஏற்றுக் கையொப்பமிட்டால்தான் அது சட்டமாகும். இல்லையேல், மசோதா சோதாவாகத் தூக்கி எறியப்படும்.
ஆங்கிலேயக் காலனி ஆட்சியில் மாநிலங்களுக்கு இருந்த அதிகாரங்கள் கூட இந்திக்காரர்களின் இந்திய ஆட்சியில் மாநிலங்களுக்கு இல்லை. விற்பனை வரி விதித்து வசூலித்துக் கொள்ளும் அதிகாரம் ஆங்கிலேய ஆட்சியில் மாநிலங்களுக்கு இருந்தது. இந்திய ஆட்சி அந்த மாநில உரிமையைப் பறித்துக்கொண்டது. சரக்கு சேவை வரி என்ற தனது ஆதிக்க வரிவசூலுக்குள் அதை இணைத்துக் கொண்டது.
கல்வி, பொது நலம், வேளாண்மை எல்லாவற்றிலும் மேலாதிக்க அதிகாரம் இந்திய அரசுக்கே உள்ளது! இந்தியாவை ஆளும் இனமாக உள்ள ஆரிய பிராமண – ஆரிய வைசிய – இந்திக்காரர்களின் மொழியான இந்தியும் சமற்கிருதமும்தான் உண்மையான இந்திய ஆட்சி மொழிகள். சமற்கிருத மயமாக்கப்பட்ட இந்தியைத்தான் இந்திய ஆட்சி மொழியாக வைத்துள்ளார்கள். எல்லாத் திட்டங்களுக்கும் இந்தியில்தான் பெயர் வைப்பார்கள். எடுத்துக்காட்டு: இந்திய நீராற்றல் துறை – “ஜல்சக்தி விபாக்!”. நீரைப் “பானி” என்றால் இந்தி; “ஜல்” என்றால் சமற்கிருதம். துறையை “விபாகா” என்றால் சமற்கிருதம்.
இதுபோலவே, இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் சட்டம், சாட்சியச் சட்டம் என அனைத்தின் பெயர்களும் சமற்கிருத மயமாக்கப்பட்ட இந்திக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஆங்கிலத்தில் இருந்த சட்டப் பிரிவு எண்கள் இந்தியில் வேறாக மாற்றப்பட்டுவிட்டன. கொலைக்குற்றம் என்றால் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் பிரிவு 302 என்பது ஊரறிந்த ஒன்று. இப்போது அது இந்திச் சட்டத்தில் 101 ஆக மாற்றப்பட்டுள்ளது. எங்கும் எதிலும் இந்திக்காரர் ஆதிக்கம் – இந்தி மொழி ஆதிக்கம்! தமிழர்கள் இந்தி மயமாகத் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்; இந்திக்காரர்கள் ஆளுவோர்; தமிழர் போன்ற பிற மொழி பேசுவோர் அவர்களால் ஆளப்படுவோர் என்ற பேராதிக்க எண்ணம் இந்திய ஆட்சியாளர்களுக்கு உள்ளது.
இப்படி இன்னும் எத்தனையோ இந்திய ஆதிக்க ஏற்பாடுகள்! இந்தியாவின் உண்மையான ஆளும் ஆற்றல்கள் ஆரிய-பிராமண, ஆரிய-வைசிய – இந்திய ஏகாதிபத்தியவாதிகளே! அவர்களுக்குக் கீழ்தான் தமிழர்கள், மராத்தியர், வங்காளிகள் முதலிய மற்ற இனங்கள். இதில் ஒரு வேறுபாடு மராத்தி, வங்காளி, குசராத்தி போன்ற இனங்கள் பேசும் மொழிகள் சமற்கிருத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால், தமிழ் தனித்தன்மையானது!
கூட்டாட்சியில் பொதுப்பட்டியல் உண்டா ?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்திய அரசு அதிகாரப் பட்டியல் – மாநில அரசு அதிகாரப்பட்டியல் – பொது அதிகாரப் பட்டியல் (concurrent list) என்று மூன்று வகை உள்ளன.
பழம்பெரும் கூட்டாட்சி நாடுகளான வட மெரிக்கா (U.S.A.), சுவிட்சர்லாந்து, கனடா, செர்மனி போன்ற நாடுகளில் பொதுப்பட்டியல் (concurrent list) என்ற ஒரு தனிப்பட்டியல் கிடையாது. இங்குள்ள பொதுப்பட்டியல் அதிகாரங்கள் இந்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான அதிகாரப்பட்டியல்; மாநில அரசோ, இந்திய அரசோ இதில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது போல் தோற்றம் தருகிறது, “பொதுப் பட்டியல்” அல்லது “ஒத்திசைவுப் பட்டியல்” என்ற சொல்! ஆனால் இந்தப் பொதுப்பட்டியல் என்பது மற்றுமொரு இந்திய அரசுப் பட்டியலே! இது சாரத்தில் இந்திய அரசின் மாறுவேடப் பட்டியல்! இப்பட்டியலில் உள்ள எந்தப் பிரிவுக்கும் தமிழ்நாடு அரசு மசோதா நிறைவேற்றலாம். ஆனால், அதற்கு புதுதில்லி குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தால்தான் அது சட்டமாகும்! குடியரசுத் தலைவர் – இந்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு நிறைவேற்றிய பொதுப் பட்டியல் மசோதாவில் கையொப்பமிட மாட்டார்.
தமிழ்நாட்டு பிரிட்டன், பிரான்சு நாடுகளின் மக்கள்தொகையை விட கூடுதல் மக்கள் தொகை கொண்டது. ஆனால், இந்தியாவில் அது ஒரு தன்னதிகாரம் இல்லாத “பிராந்தியம்”!
இங்கு கவனியுங்கள்; மாநில அதிகாரப் பட்டியலில் உள்ளவற்றில் தமிழ்நாடு சட்டப்பேரவை மசோதா நிறைவேற்றலாம். அது இந்திய அரசின் நியமன அதிகாகரியான ஆளுநர் கையெழுத்துப் போட்டால்தான் அது சட்டமாகும். இல்லையேல், அது சட்டம் ஆகாது. அதுபோல், பொதுப்பட்டியலில் உள்ள பொருளில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்குப் புதுதில்லி குடியரசுத் தலைவர் கையெழுத்துப் போட்டல்தான் அது சட்டமாகும் இல்லையேல் அது சட்டமாகாது!
இந்திய அரசின் கையடக்கப் பதவிதான் “முதலமைச்சர்” !
இந்நிலையில், இந்திய அரசின் – ஏகாதிபத்திய அரசின் கையடக்கப் பதவிதான் மாநில முதலமைச்சர் பதவி! எனினும், இந்த முதலமைச்சர் பதவியும் தேர்தல் வழியில் தேர்வாகட்டும். தமிழ்நாட்டு உரிமை மீட்போர் பதவி வகிக்கட்டும் என்பதே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு!
ஆனால், இந்த முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிட்டால், “வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவேன்” என்பது போல் கட்சித் தலைவர்கள் வாணவேடிக்கைகள் காட்டுவதைத் தமிழத்தேசியப் பேரியக்கம் ஏற்கவில்லை!
அடுத்து, நாடாளுமன்ற மக்களவை! இருப்பதிலேயே மிகக் கொடிய ஒடுக்கு முறை அமைப்பு இந்திய நாடாளுமன்ற மக்களவைதான்! இதன் மொத்த உறுப்பனர்கள் 543. அதில் இந்தி-மாநிலங்களும் குசராத்தும் சற்றொப்ப 250 உறுப்பனர்களைக் கொண்டுள்ளன. தமிழ்நாடு 39 உறுப்பினர்கள்; புதுச்சேரி 1.
இந்த மக்களவையில் அல்லது மாநிலங்களைவையில் தமிழ்நாடு பெரும்பான்மை பெற்று, தமிழ்நாட்டிற்குரிய தனித்துவமானவற்றில் சட்டம் இயற்ற முடியுமா?
ஏன் இந்த அவலம்? இந்தியா என்பது தமிழ்த்தேசம் என்பதுபோல், அல்லது பிரான்சு, இத்தாலி என்பன போல் ஒரு தேசிய இனத் தாயகம் அல்ல! பல இனங்களின் பட்டி! வெள்ளைக்கார வணிக வேட்டையாடிகள் தங்கள் கொள்ளைக்காக உருவாக்கிக் கொண்ட ஒற்றை நிர்வாகக் கட்டமைப்பு!
இந்த இந்தியா, இந்திக்காரர்கள் – பிராமணர்கள் – குசராத்திகளை ஆளும் இனங்களாகக் கொண்ட நாடு. இதை இறையாண்மையுள்ள தேசிய இனங்களின் சமத்துவக் கூட்டரசாக மாற்று என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராடி வருகிறது. தி.மு.க. போன்ற கட்சிகள் தனிநாடு கேட்டுவிட்டு, ஊரை ஏய்க்க அவ்வப்போது “மாநில சுயாட்சி” வேண்டும் என உச்சரித்துக் கொள்வார்கள்.இது போன்ற அதிகார முடக்கங்களையும் – அதிகாரப் பறிப்புகளையும் சந்திக்கும் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கூட வெளியே பெரிய அளவில் அதைச் சொல்ல மாட்டார்கள். ஏன்? தற்சார்பான அதிகாரமில்லாதது முதலமைச்சர் பதவி என்ற உண்மை அப்பட்டமாக வெளியானால், அவர் தன்னைச் சுற்றிக் கட்டியுள்ள மாபெரும் தலைவர்; வீரத்தளபதி, வெற்றி வேந்தர் என்பன போன்ற போலி பிம்பங்கள் உடைந்து போகும் அல்லவா? மாநில மக்களை வசப்படுத்திக் கொள்வதற்காக, மாநில உரிமை மீட்பு – மாநில சுயாட்சி என்று அவ்வப்போது சிறிது பேசிவிட்டு, பின்னர் புரட்சித் தளபதி, தானைத் தலைவர், தமிழ்நாட்டு சோழப் பேரரசர் போன்ற போலிப் பட்டங்களைச் சுமந்து திரிவார்கள்! மாநகராட்சி மேயருக்குக் கூட சில அதிகாரங்கள் இருக்கின்றன. அதைப் போன்ற சில அதிகாரங்கள் முதலமைச்சருக்கும் உண்டு.
இந்திய ஏகாதிபத்தியம் தமிழின உரிமைகளைப் பறித்து வைத்துள்ளதை முழுமையாக அம்பலப்படுத்திப் பேசாத இந்த இரட்டை வேடதாரிகளின் நடிப்பு, இந்திய ஏகாதிபத்தியம் மேலும் மாநில உரிமைகளைப் பறிக்க ஊக்கமளிக்கும்! எனவே, இவர்களின் தற்புகழ்ச்சிப் பட்டங்கள் புதுதில்லிக்கு மகிழ்ச்சியே அளிக்கும்!
புதுதில்லிக்கான – மாநில மந்தை மேய்ப்பர்களாகவே, முதலமைச்சர்களைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய ஆட்சியாளர்கள் விரும்புவார்கள்!
விழிப்புற்ற இளையோரே வழிகாட்ட வாருங்கள்
விழிப்புற்ற தமிழர்களே, தமிழ்நாட்டில் உள்ள திராவிட – பாரத்தீய பிம்பங்கள் வீழ்த்தப்பட்டுள்ள இந்தச் சூழலில், உண்மையான தமிழின உரிமை மீட்பு அரசியலை மக்களிடம் பேசுங்கள்! வாக்குக் கேட்பது மட்டும்தான் அரசியல் என்று கருதாதீர்கள்! இந்தி ஏகாதிபத்தியம் தமிழர்களை அடிமையாக வைத்திருக்கிறது; இனத் தன்னரசாக – தமிழ்நாட்டை மாற்ற – இந்தியாவை இறையாண்மையுள்ள இனங்களின் கூட்டரசாக மாற்ற – தமிழர்கள் உண்மையான உரிமை மீட்புத் தமிழ்த்தேசியத்தை ஏந்திப் போராட வேண்டும். இந்த விழிப்புணர்வை மக்களிடம் உண்டாக்குங்கள்! இந்திய ஏகாதிபத்தியம் தமிழர்களை அடிமைகளாக வைத்துள்ளது என்ற உண்மையை உடைத்துப் பேசுங்கள். மீண்டும்மீண்டும் வாக்கரசியல் வக்கணை மட்டுமே பேசி, தமிழர்களின் அடிமைத் தனத்தைப் புதுப்பித்துக் கொள்ளாதீர்கள்! இன உரிமை மீட்பு பேச இதுவே தக்க நேரம்!

