HomeTamil Naduலஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய...

லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குநராக அருண் நியமனம் ! எழுந்துள்ள விமர்சனங்களும் – அறம் சார்ந்த கேள்விகளும் !

தமிழ் ஊடகம் சிறப்புச் செய்தியாளர்கள் குழு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குனராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் சமூக ஊடகங்கள் மட்டுமல்லாது பத்திரிகை ஊடகத்துறையினர் மத்தியிலும் பெரும் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

காரணம், அருண் ஐபிஎஸ் அடிப்படையிலேயே மிக வீரியமாக, சுதந்திரமாக திமுக ஆட்சியில் செயல்பட்டவர். திமுக ஆதரவாளர் என்று கூறப்படுபவர். அதற்கேற்ப, சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் அதனைக் கையாண்ட விதத்தில் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டபோதும் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று அந்த நடவடிக்கைக்குத் தடை வாங்குமளவுக்கு இவருக்கு திமுக அரசின் ஆதரவு இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில், இவர் சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்தால் தேர்தல் முறையாக நடக்காது என்று கூறி தற்போதய முதலமைச்சர் விஜய் அவர்களே தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து கடந்த மார்ச் மாதம் புகார் கொடுத்தவர்.

அதனடிப்படையில் தேர்தல் ஆணையத்தால் அருண் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டாயக் காத்திருப்பில் அமரவைக்கப்பட்டவர். அதிலும் தேர்தல் பணிகள் எதிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு ஆணையர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக உத்திரவிடப்பட்டவர்.

அவரது ஒன்றரை ஆண்டு ஆணையர் பதவிக்காலத்தில் 100 க்கும் மேற்பட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது என்கிற விமர்சனம் அருண் ஐபிஎஸ்க்கு எதிரான மிக முக்கிய விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது.

குண்டர் சட்டம் எனும் தடுப்புக் காவல் சிறப்பு சட்டத்தில் ஒருவரைக் கைது செய்தால் ஒரு ஆண்டுக்கு பிணை (ஜாமீன்) கிடைக்காது.

இந்த சட்டம் எதற்காகக் கொண்டு வரப்பட்டது என்றால், “தொடர்ந்து திரும்பத் திரும்ப கடும் குற்றங்கள் செய்து வருபவர்கள்” குறிப்பாக…

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகள்.
வன்முறையாளர்கள் மற்றும் அடிதடியில் ஈடுபடுவோர்.
பாலியல் குற்றவாளிகள் (மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்கள்).
நில அபகரிப்பாளர்கள் மற்றும் மணல் திருட்டில் ஈடுபடுவோர்.
வழிப்பறிக் கொள்ளையர்கள் மற்றும் திருட்டு வீடியோ/சிடி விற்பனையாளர்கள்.

இவர்களைக் கட்டுப்படுத்தவும், தண்டிக்கவுமே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், அருண் ஐபிஎஸ் சென்னை மாநகர ஆணையராக இருந்த ஒன்றரை ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்டோர் மீது இச்சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதில் “சிவில்” வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீதெல்லாம் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது என்பதை சென்னை உயர் நீதிமன்றமே உறுதிப்படுத்தியுள்ளது. தம் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டது செல்லாது என்று கூறி ஷர்மா என்பவர் தொடுத்த வழக்கில் நேரில் வந்து நிற்குமாறு அருண் ஐபிஎஸ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

அவர் நேரில் வந்து நின்றபோது, அவருக்கு அனுப்பப்பட்ட நீதிமன்ற அழைப்பாணையைப் பெறாமல் இரண்டு மணி நேரம் உயர்நீதிமன்றப் பணியாளரை அருண் காக்கவைத்திருந்ததாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதேபோல அருண் நீதிமன்றத்தில் காத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பிறகு அழைத்த நீதிபதிகள், “ஷர்மா மீது நீங்கள் போட்ட குண்டர் சட்டம் பொருத்தமற்றது என்று கூறவே உங்களை அழைத்தோம்” என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

அருண் ஐபிஎஸ் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவிப்பது இது முதல் முறை அல்ல.

ஆக, குண்டர் தடுப்புச் சட்டத்திற்குப் பொருத்தமில்லாதவர்கள் மீதெல்லாம் அருண் அச்சட்டத்தைப் பாய்ச்சி இருப்பது சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளின் இந்த உத்தரவு மூலம் உறுதியாகிறது.

இப்படிப்பட்ட நிலையில், எந்த அருணை எதிர்த்து விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் எல்லாம் போர்க்கொடி தூக்கினார்களோ, அவர் இருந்தால் தேர்தல் திமுகவுக்கு ஆதரவாக நடக்கும், நியாயமாக நடக்காது என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தார்களோ அந்த அருண் அவர்களை கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக அமர்த்தியிருப்பதுதான் கடுமையான விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.

மேலும், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஒருவேளை நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால் திமுகவின் ஆதரவாளர் என்று கூறப்படுகிற அருண் ஐபிஎஸ் இந்தத் துறையின் இயக்குனராக அமர வைக்கப்பட்டால் அந்த நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்கிற கேள்விகயையும் அரசியல் பார்வையாளர்கள், விமர்சகர்கள், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் ஏற்கனவே திமுகவினர் மீதுள்ள பழைய வழக்குகளையும் நீர்த்துப்போகச் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

திமுகவினரிடம் நெருக்கமான தொடர்பில் உள்ள ஒரு அதிகாரி ஒருவர், அவர்களில் எவர் மீதும் வழக்குத் தொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதுகுறித்து அவர்களுக்குத் தகவல் தரமாட்டாரா என்கிற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள். வழக்கு ஆவணங்களின் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனாலும், அப்படியெல்லாம் இல்லை அருண் ஐபிஎஸ் நேர்மையான அதிகாரி, அவரை எந்தப் பொறுப்பில் அமரவைத்தாலும் சரியாகவே செயல்படுவார் என்கிறார்கள் அருண் ஐபிஎஸ்சின் ஆதரவாளர்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...