HomeTamil NaduCool Down முதலமைச்சர்...

Cool Down முதலமைச்சர் விஜய் அவர்களே !கவனம்….முளைவிடுகிறது “சர்வாதிகாரச்” சிந்தனை !!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

நடிகர் விஜய் தமது இலக்கான முதலமைச்சர் பதவியை அடைந்து விட்டார். அதற்குப் பாராட்டுகள்.

எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதைப் போல விஜயும் அவரது ரசிகர்களும் அரசியல் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அதிகாரத்தையும் பெற்றிருக்கிறீர்கள்…மகிழ்ச்சி.

ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரையில் அது கண்ணாடி வீட்டுக்கு வெளியே நிற்பது. அதில் சற்று வரம்புக்கு மீறி கூட சிந்திக்கலாம், பேசலாம். ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டால் அது உலகமே எளிதில் பார்க்கக்கூடிய கண்ணாடிக் கூண்டுக்குள் நிற்பது. நீங்கள் வீசும் ஒரு கல் கூட 100 கற்களாகத் திரும்ப வரும். அவை உங்கள் கண்ணாடி வீட்டை ஒரே நொடியில் சுக்கு நூறாக உடைத்துவிட வாய்ப்பு உண்டு.

திமுக எதிர்ப்பு

1967 க்குப் பிறகு அதிமுக எனும் கட்சி தொடங்கியதற்குப் பிறகு தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு திமுக எப்போதும் இரண்டாவது வாய்ப்புதான் (Second option). எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகும், ஜெயலலிதா மீதான ஊழல் மற்றும் வளர்ப்பு மகன் திருமணம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்த 91 – 96 காலகட்டம், அதன்பிறகு அதிமுக தலைமைக்கு எழுந்த EPS மற்றும் OPS ஆகியோருக்கு இடையே நடந்த போட்டி ஆகிய இந்தக் காலகட்டங்களில்தான் அதாவது அதிமுகவின் தலைமை சரியாக இல்லாத, அதிமுக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்ட காலங்களில்தான் மக்கள் திமுகவிடம் ஆட்சியைத் தந்திருக்கிறார்கள். அப்படித்தான் 2021 சட்டமன்றத் தேர்தலும் திமுகவிடம் ஆட்சி அதிகாரம் தரப்பட்டது.

இந்த வழக்கத்தை உடைக்க, 2021 தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுக ஐந்தாண்டுகள் செய்த அபத்தமான, அதீதமான முயற்சிகள், ஆபத்தான சனநாயக விரோத நடவடிக்கைள் அனைத்தும் அக்கட்சிக்கு சவப்பெட்டிகளாக ஆகிப்போயின.

மு.க.ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் என்பதைப்போல செய்யப்பட “பில்ட் அப்புகள்” , Make over, சமூக ஊடக, பத்திரிகை ஊடகப் பரப்புரைகள் ஒருபுறமும், அவற்றுக்கு நேர் எதிரான களச் செயல்பாடுகளும், திமுக மீது மக்களுக்கு இருக்கும் இயல்பான வெறுப்பும் எல்லாம் சேர்ந்து பெரும் கோபமாக மாறியது.

என்ன செய்தாலும் திமுக தமது கொண்டையை மறைக்க முடியாமல் போனதே மக்களின் இந்தத் தீர்ப்புக்குக் காரணம்.

மக்கள் தீர்ப்பு

அந்தக் கோபம் வழக்கமாக அதிமுக எனும் முதல் வாய்ப்பை (First option) நோக்கியே மாறும் என்பது கடந்த கால வரலாறு. காரணம் மக்கள் எதிர்பார்க்கும் விஜயகாந்த் அல்லது விஜய் போல மூன்றாம் போட்டியாளர் உருவாகியிருக்கவில்லை.

நாம் தமிழரை மக்கள் ஒரு மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட வைப்பாக (Safety Deposit) கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி நகர்த்திக் கொண்டு வருகிறார்கள், முழுவதுமாக நிராகரித்து விடவில்லை.

ஆக 2026 ல் மக்கள் ஒரு பெருத்த முடிவு எடுத்திருக்கிறார்கள், ஆனால் மிக மிக நுட்பமாக.

அது திமுக அதிமுக இரண்டும் வேண்டாம். அவர்களை அகற்றி விஜய் எனும் ஒரு புதியவருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும், ஆனாலும் தனிப் பெரும்பான்மை அரசாக இருக்கக் கூடாது என்று.

ஒரு பத்திரிகை ஊடகவியலாளனான எனக்கு எப்போதுமே இந்தியாவின் மக்கள் அதிலும் தமிழ்நாட்டு மக்கள் வாக்குகள் மூலம் அளிக்கும் ஒவ்வொரு தீர்ப்பையும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு அசாதாரணமான…மிகப் பெரிய அளவிலான…. கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரையிலான நெற்றி பொட்டில் அடித்தது போல “ஒரே தீர்ப்பு.”

பாஜகவுக்கு மக்கள் கற்பித்த பாடம்

இந்திய அளவில் ஒரே நாடு ஒரே கட்சி, எதிர்க்கட்சியே இல்லாத நாடாளுமன்றம் என்றெல்லாம் “சர்வாதிகாரச் சிந்தனை” எழுந்தவுடன் பாஜகவின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கடிவாளம் போட்டார்கள் மக்கள். 2024 ல் தனிப்பெரும்பான்மை இல்லாத அரசாக அதற்கு வாய்ப்புக் கொடுத்தார்கள்.

காங்கிரஸ் சரியில்லை, வேறு வழியுமில்லை எனவே இப்படி ஒரு தனிப் பெரும்பான்மை இல்லாத அரசை, பாஜக கைகளில் கொடுத்து நிதீஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கைகளில் கட்டுப்பாட்டுக் கயிறைக் கொடுத்து இருக்கிறார்கள்.

திமுக எப்போதும் ஒரு மாற்றுச் சக்கரம்தான். அதற்கும் மாற்றுச் சக்கரமாக இருக்க வேண்டிய அதிமுகவும் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் மூன்றாம் வாய்ப்பாக விஜய் வந்து நின்றதால் மக்கள் விஜய்க்கு வாய்ப்பு அளித்துள்ளார்கள்.

அதற்காக, அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை அழித்துவிடுங்கள் என்று மக்கள் விஜய்க்கு இட்ட கட்டளை அல்ல இந்தத் தேர்தல் முடிவு.

விஜய்க்கு மக்கள் தனிப்பெரும்பான்மை தரவில்லை

2026 தேர்தலில் விஜய்க்கு மக்கள் தனிப் பெரும்பான்மை தரவில்லை என்பதுடன் மேலே சொன்ன பாஜக எடுத்துக்காட்டையும் நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

இனி நீங்கள் என்னதான் மாயா ஜால வேலைகள் செய்து, மாற்றுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவியில் இருந்து இறங்கச் சொல்லி அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவைத்து அதில் தவெகவினரை வெற்றி பெற வைத்து அந்த எம்எல்ஏக்களை வைத்து முழுப் பெரும்பான்மை பெற்று அதற்குப் பிறகுதான் “மக்கள் விரும்பும்” ஆட்சியைத் தருவேன் என்று எண்ணுவது “கொக்கு தலையில் வெண்ணை வைத்து அது உருகி அதன் கண்களை மறைத்த பிறகு அந்தக் கொக்கைப் பிடிப்பேன்” என்று எண்ணுவதற்கு ஒப்பானது.

கொடுத்த ஆட்சியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையையே மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள், கவனம்.

“மற்றும் பலர் அல்லு சில்லு”

மக்கள் ஒரு தனிப்பெரும்பான்மை தராத போதே எதிர்கட்சிகளை “மற்றும் பலர் அல்லு சில்லு” என்றெல்லாம் சிறுபிள்ளைகள் போல விமர்சிப்பது நீங்கள் கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு 100 கற்களை வீசுவதற்குச் சமம். இதை உங்கள் முன்னே நிற்கும் உங்களின் ரசிகர்கள் இரசிக்கலாம் ஆனால் மக்கள் ஒருபோதும் இரசிக்க மாட்டார்கள். நீங்கள் தனிப்பெரும்பான்மை பெற்று விட்டால் “மற்றும் பலர் அல்லு சில்லுகளை” முற்றும் இல்லாமல் ஆகிவிடுவீர்கள் போலவே. இதுதான் சனநாயகமா விஜய் அவர்களே !?

எதிர்க் கட்சியே இல்லாத தவெக

திருச்சி கிழக்கில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ் முன்வைத்த ஒரு கருத்து மிகவும் ஆபத்தானது, அருவருப்பானது. “எதிர்க் கட்சியே இல்லாத சட்டமன்றத்தை விஜய் உருவாக்குவார்” என்று கூறிய கருத்து.

சனநாயகக் குடியரசின் மக்கள் மன்றமே சட்டமன்றம், அதுவும் சட்டங்களை உருவாக்கும் மன்றம். அதில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி என்பதுதான் சனநாயகம், அமைப்பு. அதை உடைத்து “ஒரே நாடு ஒரே ஆட்சி, எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி என்று பாஜக சொன்னதைப்போல அமைச்சர் ரமேஷ் பொசுக்கென்று “விஜய் கட்சியின் சர்வாதிகாரக் கனவை” போட்டு உடைத்துவிட்டார். அதைப் பெருமளவில் இரசித்தார்கள் விஜயின் ரசிகர்கள். ஆனால் மக்கள் இதனை ஒருபோதும் இரசிக்க மாட்டார்கள் விஜய் அவர்களே.

தமக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமானால் சென்னைக்குள் இருக்கும் பெரம்பூர் தொகுதிக்கே விஜய் முதலில் சென்று இருக்க வேண்டும். மாறாக தாம் MLA பொறுப்பை விட்டுவிட்டு காலியாக உள்ள திருச்சி கிழக்குக்கு சென்றது “இடைத்தேர்தல் பரப்புரைக்காகவே’ என்பதை விஜயே தமது உரையில் வெளிப்படுத்திவிட்டார்.

விஜய் தமக்குக் கிடைத்த இந்த 108 இடங்களில் வெற்றி என்பதற்கான மக்கள் அளித்த மிக நுட்பமான தீர்ப்பை சரியான பார்வையில் இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை, புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

பொறுப்பு ஏற்ற தருணத்திலிருந்து ஆட்சியில் கவனம் செலுத்துவதை விடுத்து ஆட்சியைத் தக்கவைக்கும் செயலில்தான் விஜய் ஈடுபடுகிறார். எப்படியாவது 5 முதல் 15 எம்எல்ஏக்கள் வரை தவெகவினரை வெற்றி பெற வைத்து முழுப் பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தைப் பெறும் “ஆட்சி அதிகார வெறி” மட்டுமே விஜயின் பேச்சில் செயலில் எதிரொலிக்கிறது.

அதனால்தான் தேர்தலுக்கு முன்னதாகத் தாம் வைத்த “திமுக மட்டுமே தமது எதிரி” என்ற அவரது முழக்கத்தை, அடுத்துவரும் இடைத்தேர்தல்களுக்கும் எடுத்து முன்வைக்கிறார் விஜய்.

விஜய் திமுகவை எதிர்ப்பதாகக் கூறுவது கொஞ்சம் நஞ்சம் மீதமிருக்கும் திமுக எதிர்ப்பையும் வருகிற இடைத்தேர்தல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளவே.

வெற்றி கண்களை மறைத்துவிடக்கூடாது முதலமைச்சரே.

2026 தேர்தலில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட மதிப்பெண் 234 க்கிற்கு 108 தான்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மக்களின் ஒவ்வொரு அமில சோதனைக்கும் நீங்கள் ஆட்பட்டுதான் ஆகவேண்டும். அதற்கு எரிச்சல் அடையக்கூடாது. தேர்தல் பரப்புரைக் களத்தில் வீசுவதைப் போல முதலமைச்சர் ஆன பிறகும் அதே வீச்சில் சொற்களை வீசுவது பக்குவமற்றது.

மு.க.ஸ்டாலின் 2021 இல் முதலமைச்சராக ஆனபிறகு உங்களைவிடத் திறமையான அதிகாரிகளைப் பொறுப்பில் அமர்த்தினார், உலகப் புகழ் பெற்ற பொருளாதார வல்லுநர்களை நியமித்தார், தமிழ்நாட்டின் மிக மூத்த, முன்னணிப் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்று உலகமே வியக்கும் வகையில் திறமையானவர்களை எல்லாம் எல்லாப் பொறுப்புகளையும்தான் நியமித்தார் …

ஆனால் என்ன பயன் அதனால் ?! அவர்கள் சொல்வதை எதையும் காதுகொடுத்துக் கேட்காமல் குட்டிச்சுவர் ஆனதுதான் மிச்சம்.

நிதானமாக, முதலமைச்சர் என்கிற பொறுப்புணர்வோடு ஒவ்வொரு எழுத்தையும், சொல்லையும் கவனமாக எடுத்துவையுங்கள் முதலமைச்சர் விஜய் அவர்களே.

திரைப் படங்களில் நீங்கள் நடித்திராவிட்டால், நீங்கள் கவர்ச்சியானவராக இருந்திராவிட்டால்..அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் 2026 தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் நீங்கள் வெற்றி பெற்று இருக்க முடியுமா ?!

ஆம்…உங்களின் திரைக்கவர்ச்சிதான் உங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தியது.

தேர்தல் அரசியலில் “கவர்ச்சி” எனும் சொல் திரைப்படத்தில் நடிகைகள் காட்டும் “கவர்ச்சி” அல்ல. மாறாக இது மக்களை ஈர்ப்பது.

பாசிட்டிவாக சிந்தியுங்கள் விஜய் அவர்களே ! All is Well !!

-தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம், 02/06/26

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...