-தமிழ் ஊடகம் செய்தியாளர் குழு
தமிழ்நாட்டின் முக்கியமான தொகுதி சென்னை கொளத்தூர் தொகுதி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி. அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடுபவர் பி.சந்தான கிருஷ்ணன்.
சந்தான கிருஷ்ணனின் பரப்புரைப் பயணத்தை தமிழ் ஊடகம் செய்தியாளர் குழுவினர் நேரில் சென்று பார்த்தனர்.
எந்தவித ஆர்ப்பாட்டமும், அலட்டலும் இல்லாமல் எளிமையாக அதேவேளை உறுதியாக வலம் வரும் சந்தானகிருஷ்ணன் நம்பிக்கையுடன் தொகுதி முழுவதும் பம்பரமாகச் சுற்றி வருகிறார்.
வீடு வீடாகத் தெருத்தெருவாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார். பொதுமக்களும் அவரை அன்புடன் வரவேற்கின்றனர்.
அவருக்கு மிக சாதகமாக எம்ஜிஆர், இரட்டை இலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என வலுவான அடையாளங்கள் உள்ளன.
பொதுமக்களை சந்தித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுவரும் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்த முறை தோற்கடித்து வெற்றி பெறுவேன் என்கிறார்.
கொளத்தூர் தொகுதி புதியதாக அறிவிக்கப்பட்டு 3 முறை சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் 3 முறையும் வென்றுள்ளார்.
எனினும் தொகுதியை மேம்படுத்த எந்தவொரு திட்டத்தையும் ஸ்டாலின் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டும் அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் முக்கிய சாலைகள் வழியே வந்து “ரோட் ஷோ” மட்டும் செய்துவிட்டு ஸ்டாலின் சென்றுவிடுவதாகக் கூறுகிறார்.
தொகுதிக்குள் உள்வட்ட சாலைகளிலோ, தெருக்களிலோ பயணம் செய்யாத முதலமைச்சருக்கு தொகுதி மக்கள் படும் வேதனைகள் தெரிவதில்லை என்றும் கூறுகிறார்.
கொளத்தூர் தொகுதி பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற கடந்த 15 ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை என்று சுட்டிக்காட்டும் அதிமுக வேட்பாளர், “பெயரளவில் முதல்வர் தொகுதிதானே தவிர தொகுதிக்கென்று வேறு எதுவும் அவர் செய்யவில்லை. மாறாக, வீண் விளம்பரம் மட்டுமே ஸ்டாலின் செய்து வருகிறார். இந்த முறை முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள், அதிமுக கொளத்தூரில் நிச்சமாக வெல்லும். மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உறுதியாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்வார். கொளத்தூர் மக்களுக்கு உண்மையான சேவைகளை அதிமுக மேற்கொள்ளும். தொகுதியை உறுதியாக மேம்படுத்துவோம்” என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார்.
சில நாட்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் பரப்புரை செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி “இந்தத் தொகுதியில் மு.க. ஸ்டாலினுக்கும் தனக்கும்தான்( எடப்பாடி பழனிச்சாமி) போட்டி” எனக் குறிப்பிட்டு இருந்தார். எனவே, அதிமுக இந்தத் தொகுதிக்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் பணியாற்றி வருகிறது.
கொளத்தூரில் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 வது முறையாக வெற்றி பெறுவரா? அல்லது அதிமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் வெற்றி பெற்று திமுக சாதனையை முறியடிப்பாரா? என்பது பொது மக்களின் கைகளில் உள்ளது.
வரும் மே மாதம் 4 ஆம் தேதி வாக்கு எண்ணும்போது கொளத்தூர் எம்எல்ஏ யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விடும்.

