— தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திரைப்படக் கதாநாயக நடிகர் சத்தியராஜ் அவர்கள் தமிழின உணர்வாளர்களால் “புரட்சித் தமிழர்” என்று சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.
தமிழீழ விடுதலைப் போரை அவர் ஆதரித்தார். குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளை அதற்குத் தடைகள் இருந்தபோதும் வெளிப்படையாக ஆதரித்தார்.
இராசீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனைக் கைதிகளாக – வாழ்நாள் தண்டனைக் கைதிகளாகச் சிறைபட்டிருந்தோரை மீட்கும் தமிழின உணர்வாளர்கள் போராட்டங்களில் பங்கேற்று செயல்பட்டது என சத்தியராஜ் அவர்களின் பங்களிப்புகள் பல!
இவற்றுக்கப்பால், இயல்பான தமிழின உணர்வாளர்; தமிழ்மொழிப் பற்றாளர். திரைப்பட நடிப்புத் திறமையால் இலட்சோபலட்சம் இரசிகர்களைக் கவர்ந்தவர் சத்தியராஜ். நடிகர் சத்தியராஜ் அவர்கள் மிகத் தீவிரமான ஈ.வெ.ரா. பற்றாளர்! கலைஞர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் இரசிகர்! இப்பற்றுகள் அவரின் உரிமை!
இவைபற்றி இங்கு திறனாய்வு செய்யவில்லை. தி.மு.க.வின் சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பு சார்பில், அண்மையில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவில் சத்தியராஜ் பேசிய இரு கருத்துகள்தான் இங்கு திறனாய்வு செய்யப்படுகின்றன. மேற்கண்ட நிகழ்வில் சத்தியராஜ் ஆற்றிய உரை மாலை மலர் நாளேட்டில் 6.6.2026 அன்று வந்துள்ளது.
கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோற்றதைக் கண்ணீர் வடியவடியச் சொல்லி மேடையில் அழுதுள்ளார் சத்தியராஜ்! அது அவரது பாசம்! அதில் நாம் தலையிடவில்லை.
ஆனால் மு.க. ஸ்டாலின் ஆட்சியை தமிழ்நாட்டின் பொற்காலம் என்றும், தி.மு.க. ஆட்சியைச் சமூக நீதி ஆட்சி என்றும் சத்தியராஜ் அந்தப் பேச்சில் வர்ணித்திருப்பதுதான், தமி்ழர்களை எவ்வளவு ஏமாளிகளாக அவர் கருதுகிறார்; இவ்வளவு பெரிய ஏமாற்றுக்கார அரசியல்வாதியா சத்தியராஜ் என்ற வினாக்களை நமக்குள் எழுப்புகின்றன.
மு.க. ஸ்டாலின் ஆட்சி தமிழர்களின் பொற்காலம் என்றால், தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற உதவிகள் தேவைப்பட்டது ஏன்?
அந்தத் தாய்மார்கள், இருக்கின்ற சொத்துக்களை விற்று, கடன் வாங்கி தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி கற்க வைத்திருக்கிறார்கள். சற்றொப்ப ஒரு கோடித் தமிழ்ப்பிள்ளைகள், – உயர்கல்வி – தொழிற்கல்வி கற்ற ஆணும் பெண்ணும் – கல்வித் தகுதிக்குரிய வேலை கிடைக்காமல் நொந்து நூலாகக் கிடக்கிறார்களே, அது சத்தியராஜூக்குத் தெரியுமா, தெரியாதா?
உயர் தொழிற்கல்வி உட்பட கற்ற பெண்கள் தனியார் தொடக்கக் கல்வி நிலையங்களில் மாதம் ரூ.4000, 5000 ஊதியத்தில், ஆசிரியர் வேலை பார்ப்பதும், பெரிய ஸ்டோர்களில், பட்டம் பல பெற்ற ஆண்களும், பெண்களும் 10.000 அல்லது 12.000 ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலை பார்ப்பதும், சொமாட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் 8,000-10,000 ரூபாய் ஊதியத்துக்கு சோறு வாங்கிக் கொடுக்கும் வேலைகள் பார்ப்பதும் நடிகர் சத்திராஜூக்குத் தெரியுமா, தெரியாதா?
பொற்கால ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின் காலத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் ஐந்து இலட்சம் அளவிற்கு காலி பணியிடங்கள் இருந்தும் அவற்றை நிரப்பாமல் ஏமாற்றியவர் ஸ்டாலின் என்பதாவது சத்தியராஜூக்குத் தெரியுமா? அப்பணிகளில் சில ஆயிரம் பேர்க்கு அடிமாட்டுச் சம்பள அத்துக்கூலி – ஒப்பந்தக் கூலி வேலை தந்து ஸ்டாலின் வேலை வாங்கிக் கொண்ட சமூக அநீதி சத்தியராஜூக்குத் தெரியுமா? (ஒவ்வாரு துறைவாரியாக நிரந்தர பணியிடங்கள் எவ்வளவு, அவற்றில் நிரந்தரமாக எவ்வளவு இடங்கள் காலியாகக் கிடக்கின்றன என்ற புள்ளி விவரங்களை – கணக்குகளை அந்தத்தத் துறைகளின் தொழிற்சங்க தலைவர்கள் வெளியிட்டுள்ளார்கள்!)
நிரந்தரப்பணி கொடுத்தால் அதற்குரிய சம்பளம் கொடுக்க வேண்டும். அப்படிச் சம்பளம் கொடுத்தால் அரசுப் பணத்தில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது போல் இவலசப் பேருந்து பயணம், மாத உதவித்தொகை தரமுடியாது. இப்போது பத்தரை இலட்சம் கோடி ருபாயாகத் தமிழ்நாட்டைக் கடனாளி ஆக்கிவிட்ட ஸ்டாலின் இன்னும் பல இலட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பார்.
தேர்தல் (2026) நெருங்கும்போது, இப்போதாவது மனமிரங்கி, தங்கள் வேலையை நிரந்தரப்படுத்துவார் ஸ்டாலின் என நம்பி, பத்தாண்டு, பதினைந்தாண்டு என்று தற்காலிகப் பணியாளர்களாக, ஒப்பந்த ஊதியத்துக்கு வேலையில் இருந்த அரசு பல்கலைக் கழக – கல்லூரிப் பேராசிரியர்கள் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிவரை பணியாற்றி வரும் அத்துக்கூலி ஆசிரியர்கள் பணி நிரந்தம் வேண்டி போராடினார்கள். அவர்களைப் பணிநிரந்தரம் செய்து அவர்கட்கு உரிய சம்பளம் வழங்கினாரா ஸ்டாலின்? இல்லை!
அதேபோல், அரசு மருத்துவமனை செவிலியர்கள், தகுதியுள்ள பெண்பிள்ளைகள், பல ஆண்டு பணிபுரிந்தோர் பணி நிரந்தரம் கோரி – அப் பணிக்கு அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் கோரி – மாதக் கணக்கில் போராடினார்கள். மசிந்தாரா ஸ்டாலின்? இந்தக் கோரிக்கையெல்லாம் சத்தியராஜ் அவர்கள் கூறிக்கொள்ளும் சமூக நீதிக்குள் வராதோ?
தூய்மைப் பணியாளர்கள் – சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள உழைக்கும் மக்கள். பத்தாண்டுகளுக்கு மேல் பல ஆண்டுகளாகத் தற்காலிக அத்துக்கூலிகளாக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் பணிநிரந்தரம் கோரி மாதக் கணக்கில் போராடினார்கள். திராவிட மாடல் பொற்கால ஆட்சியின் பூதேவர் மு.க.ஸ்டாலின் கனிந்தாரா? அவர்கள் கோரிக்கையை ஏற்றாரா? இல்லை!
அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என எல்லாத் துறையிலும் அடிமாட்டுச் சம்பள அத்துக் கூலிகள்! எத்தனை ஆண்டுகளாக? பத்தாண்டுகளாக, பதினைந்தாண்டுகளாக ஒருகரு இரட்டையர்களான தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சிகளில்!
மு.க. ஸ்டாலினும் – எடப்பாடி பழனிச்சாமியும் அரசியல் துறையில் அண்ணன் தம்பிகள்! ஊழலிலும் சரி, புதுதில்லி ஆதிக்கவாதிகளுக்கு தமிழ்நாட்டை அடகு வைப்பதிலும் சரி இருவரும் ஒருகரு இரட்டையார்கள்!
தில்லி ஏகாதிபத்தியத்தின் இருபெரும் கட்சிகளான காங்கிரசு அல்லது பா.ச.க.வுடன் இவ்விரு கழகங்களும் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ குள்ளக் கூட்டணியோ, கள்ளக் கூட்டணியோ வைத்துக் கொள்ளும்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 ஏப்ரல் மாதம் வருவதற்கு ஓராண்டிற்கு முன்பே, அரசு வரிப்பணத்தை தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்குத் தண்ணீராய்ச் செலவு செய்தவர் மு.க. ஸ்டாலின்! ஒவ்வொரு நாளும் தமிழ் – ஆங்கில நாளேடுகளில் தமிழ்நாடு அரசின் கோபுர முத்திரையுடன் தி.மு.க. அரசின் “சாதனைகள்” பற்றிய முதல்பக்க – முழுப்பக்க விளம்பரங்களாக வந்து கொண்டே இருந்தன! காட்சி ஊடகங்களிலும் வந்தன. ஏழை – எளிய தமிழ் மக்கள் கொடுத்த வரிப்பணத்தில், தி.மு.க. வுக்கான தேர்தல் விளம்பரங்கள்! இதற்கெல்லாம் பணமிருக்கும். பத்தாண்டுகளுக்கு மேல் அத்துக் கூலிகளாய் அரசுப் பணிசெய்வோரை நிரந்தரமாக்கப் பணம் இருக்காது. இதுதான் சத்தியராஜ் மெச்சும் திராவிட மாடல் ஸ்டாலின் ஆட்சி! அந்த ஆட்சியை இழந்தது பற்றிப் பேசும்போது சத்தியராஜூக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டது.
தனியார் தொழிற்சாலைகளில் தொழிலாளிகளை நிரந்தர அத்துக் கூலிகளாக – ஒப்பந்தக் கூலிகளாக – குறைந்த சம்பளத்தில் வைத்துக்கொள்ள முதலாளிகளுக்கு அரணாக விளங்கியவர் மு.க. ஸ்டாலின். சாம்சங் தொழிலாளர் போராட்டம் ஓர் எடுத்துக்காட்டு. அத் தனியார் தொழிற்சாலைகளில் சி.ஐ.டி.யு போன்ற மையத் தொழிற்சங்க அமைப்புகளில் இணைத்து தொழிற்சங்கம் அமைத்த ஆலை முதலாளிகள் தடை போடுகின்றனர். அவ்வாறான தடைக்கு பாதுகாப்பு கொடுத்தது மு.க. ஸ்டாலின் ஆட்சி.
தனியார் தொழிற்சாலைகளில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்ப்பதை உறுதிப்படுத்தியது ஸ்டாலின் ஆட்சி. இதற்கான சட்டம் கொண்டுவந்தார் ஸ்டாலின். கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தவுடன் சட்டத்தைக் கைவிட்டார். ஆனால், 12 மணி நேர வேலை தொடர பாதுகாப்பாக இருந்தார் ஸ்டாலின். இதுதான் சமூக நீதியா? சத்திய ராஜ் அவர்கள் இவ்வினாக்களுக்கெல்லாம் வெளிப்படையாக விடையளிக்காவிட்டாலும் தன் மனச் சான்றுக்காவது விடையளிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் பன்னாட்டு – வடநாட்டு முதலாளிகளைக் கொண்டுவந்து நிரப்பினார் ஸ்டாலின். தமிழ்நாட்டில், முதலாளிகளும் தமிழர்களாக இல்லை, தொழிலாளர்களும் தமிழர்களாக இல்லை; இந்திக்காரர்களைக் கொண்டுவந்து குவித்தார். இதுதான் தமிழர்களின் பொற்காலம் என்கிறாரா “புரட்சித் தமிழர்”?
தி.மு.க. வின் சமூகநீதி பற்றி….
கருணாநிதி கழகத் தலைமைக்கு வந்தபின், சாதிபார்த்து கட்சிப் பொறுப்பு – சாதி பார்த்து வேட்பாளர் தேர்வு என்ற எழுதப்படாத விதி வகுத்தார். சாதி தேர்வில் வெற்றி பெற வேண்டும். இது இருந்தால்தான் தி.மு.க. வில் எந்தப் பொறுப்புக்கும் வரமுடியும். எங்காவது ஒன்றிரண்டு விதி விலக்குகள் இருக்கலாம்.
தி.மு.க. வும், அ.தி.மு.க. வும் தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகள்! இவை ஒன்றுமாற்றி ஒன்று ஆட்சிக்கு வந்தன. இவை சாதி அளவுகோலைக் கெட்டியாகப் பிடித்து முழுமையாகப் பயன்படுத்தியபின் 1980 க்குப் பிறகு, தமிழ்நாட்டில் சாதி எழுச்சி புத்துயிர் பெற்று, புதியபுதிய சாதிக் கட்சிகள் தோன்றின! சாதிக் கலவரங்களும் வெடித்தன.
இப்போது தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் சாதி மாறிக் காதல் செய்தால் படுகொலைகள் – தீவைத்து எரித்து, பெண்ணையும் ஆணையும் கொல்வது போன்றவை பரவலாக நடந்து வருகின்றன. சாதிக் கலவரங்கள் அங்கங்கே அதிகமாக நடக்கின்றன.
தி.மு.க. வின் சமூக நீதிப்படி – சட்டமன்ற – நாடாளுமன்றத் தேர்தல்களில் பட்டியல் வகுப்பார், தனித்தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிட முடியும். தி.மு.க. வின் சமூக நீதிச் சிங்கம் – சமூக நீதிச்சுரங்கம் ஆ. இராசா அவர்கள் பெரம்பலூர் மக்களவைத் தனித் தொகுதியில் நின்று மக்களவைத் தேர்தலில் வென்றார். பெரம்பலூர் அவரது சொந்த தொகுதி! ஆனால் அது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டவுடன் அடுத்துவந்த தேர்தலில் நீலகிரி தனித்தொகுதியில் போட்டியிடுமாறு சொந்தத் தொகுதியிலிருந்து விரட்டப்பட்டார் ஆ. இராசா! கருணாநிதியின் சமூக நீதி இது! பெரம்பலூர் மக்களவை பொது தொகுதியில் கே.என்.நேரு மகனை வேட்பாளராக நிறுத்தியது தி.மு.க.!
தி.மு.க. கட்டமைப்பில் பெண்களுக்கு, கருதத்தக்க பிரதிநிதித்துவம் உண்டா? வேட்பாளர் தேர்வில் பெண்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு ஏன்?
தி.மு.க. தோற்றதால் சமூக நீதிக்கே ஆபத்து வந்துவிட்டதாக அழுகிறார் சத்தியராஜ்!
சத்தியராஜ் கட்சி தி.மு.க.! அது தோல்வி அடைந்தால் அவருக்கு வருத்தம் – துயரம் ஏற்படுவது இயல்பு! ஆனால், தமிழ்நாட்டின் பொற்காலத்தில் பொத்தல் விழுந்துவிட்டது, சமூகநீதியில் அநீதிபுகுந்துவிட்டது என்று சத்தியராஜ் புலம்புவதுதான் அநீதி!”
இவ்வாறு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் பெ. மணியரசன்

