–வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
கடந்த 2021 ம் ஆண்டிலிருந்து 2024 ம் ஆண்டுவரை ஆட்சி ஆண்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வீழ்ச்சி அடைந்ததற்கு மிக முக்கியக் காரணங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, “போதை” நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள்.
இவற்றைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய கடமை காவல்துறையுடையது.
ஆனால் இவை எதுவுமே கட்டுப்படுத்தப் படாமல் சிறுமிகள் முதல் மூத்த பெண்மணிகள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெண்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டது.
இந்தக் கடும் கோபம்தான் பெண் வாக்காளர்களைக் கொதித்து எழுச் செய்தது, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து தேர்தலில் போட்டியியிட்ட காவல்துறை அமைச்சரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களையே தோற்கடித்தது.
முதலமைச்சர் தொகுதியில் மக்களின் எண்ண ஓட்டங்களைக் கடந்த ஐந்து ஆண்டுளாகக் கணிக்காமல் இருந்திருக்குமா IS எனும் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு ?!
அவர்கள் கண்காணித்து அறிக்கை அனுப்பியிருந்தும் அது உயர்மட்டத்திற்கு செல்லவில்லையா எனும் கேள்வியும் எழுகிறது இல்லையா ?
தமது சொந்தத் தொகுதியின் நிலவரம் கூட அறிந்திருக்காத ஒரு முதலமைச்சருக்கு எப்படித் தமிழ்நாடு முழுதுமான உண்மை நிலவரம் தெரிந்திருக்கும் ?
எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. சென்னையில் முன்னணி செய்திக் காட்சி ஊடகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம், ஒரு நாள் மாலை ஒரு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரி ஒருவர் என்னிடம் ஒரு தகவலைக் காதில் சொல்லிவிட்டுப் போனார்.
“திடீரென என்னை வேறு சரகத்திற்கு மாற்றிவிட்டார்கள். நாளை சுமார் 17 இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்று கூடும் ஒரு பெரும் போராட்டம் இங்கே நடக்கவிருக்கிறது. நான் சொன்னால் கேட்க மாட்டார்கள். நீ பார்த்துக்கொள்” என்று மட்டும் சொல்லவிட்டு நகர்ந்து விட்டார்.
காவல்துறை தொடங்கி பத்திரிகை ஊடகங்கள் வரை அது ஏதோ ஒரு சிறிய ஆர்ப்பாட்டம் என்றே இருந்து விட்டனர்.
ஒரு நேரலை வாகனம் (OB Van), நான்கு கேமிரா யூனிட்டுகள் வேண்டும் என்று நான் கேட்டபோது எமது அலுவலகத்தில் சிரித்தார்கள் .ஒரு சின்ன ஆர்ப்பாட்டம் கவர் செய்யவா இத்தனை யூனிட்டுகள் ? என்று கேட்டார்கள். பதில் ஏதும் சொல்லாமல் அனைத்து யூனிட்டுகளையும் அழைத்துக் கொண்டு முன்பே சென்று விட்டேன்.
இரண்டு யூனிட்டுகளுடன் அங்கே இருந்த உயரமான ஒரு கட்டடத்தின் மீது ஏறி நின்றுகொண்டோம். மீதம் ஆங்காங்கே உயரமான இடங்களில் இரண்டு, தரையில் ஒன்று என குழுவினரைப் பிரித்து விட்டேன். எல்லோரும் மேலும் கீழும் என்னைப் பார்த்தார்கள். காலை 10.30 மணி ஆக ஆக எங்கிருந்து வந்ததோ அத்தனை பெரும்கூட்டம். ஒட்டுமொத்த அண்ணா சாலையே உறைந்துவிட்டது. ஐந்து கேமிராக்கள் வழியாக நேரலை செய்தது எமது ஊடக நிறுவனம்.
காவல்துறை திணறி விட்டது. அப்படிப்பட்ட கூட்டத்தை முன் உணர்வு செய்து நுண்ணறிவுத் தகவலாக அளித்த அந்த அதிகாரியை அவருடைய உயர் அதிகாரி அலட்சியம் செய்ததால், அவரை வேறு இடத்திற்கு மாற்றியதால் மாநகரக் காவல்துறை ஆணையர் வரை வில்லங்கமாகிவிட்டது.
அன்று மாலை சென்னை காவல்துறை ஆணையர் மாற்றம் செய்யப்பட்டார்.
ஆக, காவல்துறையில் யாரோ ஒருவரின் தவறு கூட ஒட்டுமொத்தக் காவல்துறைக்கும் கெட்ட பெயரை உண்டாக்கிவிடும்.
அப்படிப்பட்ட நிலையில், மு.க.ஸ்டாலின் அரசின் காவல்துறை இயக்குநர் பொறுப்பை “டம்மி” ஆக்கிவிட்டு ஒரு நிழல் காவல்துறை டிஜிபி – அமைச்சர் போல ஒரு ஆற்றல் மிக்க அதிகாரியாக வலம் வந்தார் கடவுளின் ஆசிர்வாதம் பெற்றவர் போல தம்மைக் கருதிக் கொண்ட ஒரு அதிகாரி.
அவர் இருக்கும் துறை ஒன்று. ஆனால் அவரோ அனைத்துத் துறை காவல் அதிகாரி தொடங்கி காவலர் வரை நேரடியாக உத்தரவு இடும் அளவுக்கு முழு அதிகாரத்தையும் தமது கைகளில் எடுத்து நிழல் டிஜிபியாகவே ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்.
அவர் சொல் பேச்சுக் கேட்கும் உளவுத்துறை உயர் அதிகாரி, அவர் பேச்சைக்கேட்கும் சென்னை மாநகர ஆணையர் என அவர் கண்ணசைத்தால் இயங்கும் அதிகாரிகளை அவர் வசதிக்கு ஏற்ப நியமித்துக் கொண்டார்.
விளைவு காவல்துறையின் ஒழுங்கு படு மோசமாக சீர்குலைந்தது.
காவல்துறை இயக்குநர் பதவிக்காலம் ஆகஸ்ட் மதம் முடிவடைந்த நிலையில் அந்த இடத்திற்கும் தமது சொல்பேச்சு கேட்கும் ஒரு அதிகாரியை பொறுப்பு டிஜிபி ஆக்கினார் அந்த அதிகாரி.
ஆனால், விதிமுறைப்படி பணி மூப்பு அடிப்படையிலான அதிகாரிகளின் பட்டியலை இந்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி அதில் ஒருவரை அவர்கள் தேர்ந்தெடுத்த நிலையில் அவரைத்தான் இங்கே டிஜிபி ஆகியிருக்க வேண்டும்.
ஆனால் அந்த விதிமுறைகளை குப்பையில் வீசிவிட்டுத் தான் விரும்பிய ஒருவரை டிஜிபி பொறுப்பில் பொறுப்பு டிஜிபியாக அமர்த்திக்கொண்டார் அந்த உயர் அதிகாரி.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்குகள் தொடுத்தும் தேர்தல் ஆணையம் வந்து பொறுப்பு டிஜிபியை மாற்றும் வரை சுமார் ஆறு மாத காலம் பொறுப்பு டிஜிபியை வைத்துக்கொண்டு காவல் துறையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருதார் அந்த முதலமைச்சரின் ஆசிர்வாதம் பெற்ற காவல்துறை உயர் அதிகாரி.
தேர்தல் ஆணையம் வந்து மாற்றும் வரை ஒரு நிழல் காவல்துறை இயக்குனராகவே – டிஜிபியாகவே அவர் செயல்பட்டு வந்தார்.
திருபுவனத்தில் ஒரு கோயிலில் வேலை செய்த அஜித் எனும் இளைஞர் ஒருவரைக் காவல்துறையின் சிறப்புப் பிரிவு அடித்தே கொன்ற நிகழ்வில் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கே தெரியாமல் சென்னையில் இருந்து அந்த மாவட்டத்தில் பணியாற்றிய சிறப்புப் படையினருக்கு கட்டளையிட்டதும் இந்த நிழல் டிஜிபிதான் என்று கூறப்படுகிறது.
பாலியல் பாதிப்புக்கு உள்ளான அண்ணா பல்கலை மாணவியின் புகார் மனுவை கசியவிட்டு அந்தப்பெண்ணையே குற்றவாளி ஆக்கி ஒரு அவலமான செயலைச் செய்த சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் வேறு யாருமல்ல இந்த நிழல் டிஜிபி – நிழல் காவல்துறை அமைச்சராக செயல்பட்ட அதிகாரியின் ஆசி பெற்ற அதிகாரிதான்.
இந்த வழக்கில் அந்த ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த நடவடிக்கையைத் தடுக்க உச்சநீதிமன்றம் வரை தமிழ்நாடு அரசே செல்ல ஏற்பாடு செய்து ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியவரும் இதே நிழல் டிஜிபிதான்.
இந்த நிழல் டிஜிபியின் அதிகார வெறியால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களால் தமிழ்நாடு காவல்துறை கண்டிக்கப்படாத நாட்களே இல்லை எனலாம்.
நடிகர் விஜயின் கரூர் பயணத்தின்போது நடந்த அந்த மரணங்களின் போது நிகழ்விடத்திற்கு ஓடிய அதிகாரியும் இந்த நிழல் டிஜிபிதான். இவரால் பொறுப்பில் அமரவைக்கப்பட்ட அந்த டிஜிபி அன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திணறியதற்கும் இதே நிழல் டிஜிபிதான் காரணம்.
என்ன நடக்கிறது என்றே பொறுப்பு டிஜிபிக்கே தெரியாமல் காவல்துறையில் டிஜிபிக்கு ஈடாக நிழல் டிஜிபி செயல்பட்டார் என்பதால்தான் இந்தக் குளறுபடி.
இப்படி ஒன்றிரண்டு நிகழ்வுகள் அல்ல, ஏராளமான நிகழ்வுகளைச் சொல்லி வருந்துகிறார்கள் காவல்துறையினர்.
தமிழ்நாடு வரலாற்றில் ஒரு ஏடிஜிபி பொறுப்பில் உள்ள ஒருவரின் டிஜிபி பேராசை இப்படி ஒட்டுமொத்த காவல்துறையைத் தலைகுனிய வைத்த நிகழ்வு மு.க.ஸ்டாலின் அரசில்தான் நடைபெற்றது.
அதாவது எப்படியாவது பொறுப்பு டிஜிபியை வைத்து காலம் தள்ளிவிட்டதால் தாம் டிஜிபிக்கான மூப்பு (சீனியாரிட்டி) அடைந்தவுடன் தாமே டிஜிபியாக ஆகிக்கொள்ளலாம் என்பதே இவரது விபரீதமான கனவு.
எப்படியும் அடுத்தும் ஸ்டாலின் ஆட்சிதான் வரும் என்று எண்ணியே இவர் இப்படி ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார்.
இதை நன்கு அறிந்து மோப்பம் பிடித்த தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் இந்த நிழல் டிஜிபியை காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியது, இவரது ஆசி பெற்ற பொறுப்பு டிஜிபி மாற்றப்பட்டு சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக அமர வைக்கப்பட்டார். நுண்ணறிவுப் பிரிவுத் தலைவராக இருந்த அதிகாரியும், சென்னை காவல்துறை ஆணையரும் விலக்கி வைக்கப்பட்டனர். தேர்தல் பணிகள் பக்கமே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டனர்.
ஒருபடி மேலே சென்று, “காவல்துறையினர் தங்களுக்கு நேர் மேலே பணிபுரியும் அதிகாரிகளின் கட்டளைக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் என்றும் அவ்வாறு இல்லாத எந்த அதிகாரிகளின் கட்டளைக்கும் கட்டுப்படக்கூடாது” என்றும் சுற்றறிக்கை வெளியிட்டார் சந்தீப் ராய் ரத்தோர்.
இந்த சுற்றறிக்கை இந்த நிழல் டிஜிபி மற்றும் அவரது சகாக்களான முக்கிய மூன்று அதிகாரிகளைக் கருத்தில் கொண்டே வெளியிடப்பட்டது.
இதுவும் காவல்துறை வரலாற்றில் ஒரு பெரும் கரும்புள்ளி.
இப்போது புரிகிறதா ஏன் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறை கட்டவிழ்க்கப்பட்டதுபோல தறிகெட்டு ஓடியது என்று ?!
இந்த நிழல் டிஜிபியால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளில் ஒருவர்தான் தேர்தல் ஆணையம் நியமித்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர். இந்த சந்தீப் ராய் ரத்தோர் சென்னை மாநகர ஆணையராக இருந்த நிலையில் இவரை அகற்றிவிட்டு அந்த இடத்திற்கு தமது சொல்பேச்சு கேட்கும் அதிகாரியை ஆணையராக அமர வைத்ததும் இந்த நிழல் டிஜிபிதான். அந்த ஆணையர்தான் பத்திரிகை ஊடகர்கள் மீது தாறுமாறாக வழக்குகள் பதிவு செய்து, குண்டர் சட்டம் பாய்ச்சி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்.
ஆக ….அதிகார உலகமும் வட்டம் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும் ?
இப்போது மு.க. ஸ்டாலினே அவரது கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். ஸ்டாலினின் வலது கரமாகத் திரிந்த நிழல் டிஜிபிக்கு ஐந்தாண்டுகளில் கொளத்தூர் தொகுதி மக்களின் நிலை தெரியாமால் போனது ஏனோ ?!
//தமிழ் ஊடகம், தனித்துவமான ஊடகம், 05/05/2026 Tamil Oodagam Digital Media//

