– வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
நடப்பு 2025 – 26 ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் 10.83 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இந்தியப் புள்ளி விவரத்துறை அறிக்கை தெரிவிப்பதாக தி ஹிந்து நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகரித்து வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி GSDP அதிகரித்துள்ளது என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்திதான். ஆனால் இது முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உருவாக்கிய வளர்ச்சியா என்பதே கேள்வி.
இதற்கு விடை காணும் முன்பு, உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன என்று அறிந்துகொள்வோம்.
GDP என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் Gross Domestic Product – மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டில் “மொத்தமாக உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு” என்று பொருள்.
எடுத்துக்காட்டாக 5000 பேர் வசிக்கும் ஒரு ஊரில் 1,00,000 கிலோ அரிசி, 1,00,000 வாழைப்பழம் விளைவிக்கப்படுகிறது மற்றும் 10 ஆயிரம் மாவு அரைக்கும் எந்திரம் தயாரிக்கப்படுகிறது என்று எடுத்துக்கொண்டால் இந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு மற்றும் அதேபோல அந்த ஊரில் ஒரு 1000 பேர் “சேவைப்” பணி செய்தால் அதாவது உணவு விடுதி நடத்துதல், பெயிண்ட் அடித்தல், போக்குவரத்து, ஊடகம், பிளம்பர் வேலை செய்தல். மின்னணு (IT பணிகள்) உள்ளிட்ட சேவைத் தொழிலின் மதிப்பு” ஆகிய ஒரு ஊரில் உற்பத்தி ஆகும் எல்லாப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பே உள்நாட்டு உற்பத்தி என்பது.
அந்த வகையில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் தொழில் வகையிலிருந்து 53 விழுக்காடு வருவாயும், பொருட்கள் உற்பத்தி வகையில் 33 விழுக்காடு வருவாயும், 13 விழுக்காடு வேளாண்மை உற்பத்தி வகையிலும் வருவாய் கிடைக்கிறது. ஆக, இந்த மூன்றும் இணைந்த உற்பத்தியின் மொத்த மதிப்பே தமிழ்நாட்டின் GDP – உள்நாட்டு மொத்த உற்பத்தி என்று அழைக்கப்படுகிறது.
இன்னும் புரியும்படியாக சொன்னால், தமிழ்நாட்டில் செயல்படும் TCS போன்ற ஒரு மின்னணு நிறுவனம் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுகிறது என்றால் அந்த 10 ஆயிரம் கோடி ரூபாயும் இந்த மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கில் வரும்.
ஆக தனியாரோ, தனிமனிதரோ, நிறுவனங்களோ, வேளாண் நில உரிமையாளரோ ஒரு ஆண்டுக்கு மொத்தமாக உற்பத்தி மற்றும் செய்யும் சேவைகளின் மதிப்பே அந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி.
இதில் அரசே நேரடியாக நடத்தும் நிறுவனங்களின் உற்பத்தியும் அடங்கும்.
அப்படிப் பார்த்தால், தமிழ்நாடு அரசு நடத்தும் எத்தனை நிறுவனங்கள் இந்த மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்கு அளிக்கின்றன என்று பார்க்க வேண்டும்.
TAMIN எனும் தமிழ்நாடு அரசு கனிம நிறுவனம் அரசுக்கு பெருமளவில் வருவாய் தந்த நிறுவனம். இன்று அது காணாமல் போய்விட்டது. தமிழ்நாடு அரசின் நிறுவனங்களான போக்குவரத்து, மின் உற்பத்தி நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன, பல கோடி கடனில் மூழ்கிக்கொண்டு இருக்கின்றன.
தற்போது அரசுக்கு வருவாய் அளித்துவரும் துறைகள், கலால் வரி, வாகன வரி, விவசாய நில வரி, பத்திரப் பதிவுத்துறை, டாஸ்மாக் மதுபான விற்பனை, பெட்ரோல் டீசல் வரி, பொதுவான விற்பனை வரி (GST) மட்டுமே.
மத்திய அரசின் நிதிப் பகிர்வு, மானியங்கள், பொது நிறுவனத்திடம் இருந்து பெரும் ஈவுத் தொகை, சொத்துவரி, தண்ணீர் வரி, சுங்க, கனிம ராயல்டி , கடன் சந்தையில் வாங்குவது, மத்திய அரசிடம் வாங்குவது ஆகியவையும் அடங்கும்.
ஆக அதையெல்லாம் தாண்டி தமிழ்நாடு இத்தகைய பொருளாதார வளர்ச்சி அடைகிறது என்றால் அதற்கு 100 க்கு 99.9999 விழுக்காடு காரணம் தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்களே.
தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 40 ஆயிரம் தனியார் உற்பத்தி நிறுவங்கள் இயங்கின்றன, அதன் மூலம் 25 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். (எடுத்துக்காட்டாக துணி உற்பத்தி, வாகன உற்பத்தி, மின்சாரப் பொருட்கள், எந்திரங்கள் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை.)
தனியார் நிறுவனங்களுக்கு அரசின் முக்கியப் பங்களிப்பு முதலில் மின்சாரம், தண்ணீர், தரமான சாலைகள் ஆகியவை அடிப்படை.
சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால்தான் நிறுவனங்கள் அச்சமின்றி செயல்பட முடியும்.
சட்டம் ஒழுங்கு தவிர இவை அனைத்தும் கட்டணம் பெற்றே தரப்படும் என்றாலும் தங்கு தடையின்றி நியாயமான விலையில் கிடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு காரணமாக கோயமுத்தூரில் மட்டும் ஆயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.
இவை தவிர தமிழ்நாடு அரசு குறிப்பாக மு.க.ஸ்டாலின் அரசு மட்டுமே கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.
இந்தப் பணத்தில் வருவாய் தரக்கூடிய வகையில் முதலீடு செய்யப்பட தொகை எவ்வளவு என்றால் பெரிய அளவில் எதுவுமில்லை.
மாறாக, இந்தப் பணத்தைக் கொண்டே இலவசங்கள், மகளிர் உரிமைத்தொகை, மாணவர் உதவித்தொகை அளிக்கப்படுகின்றன.
மேலும், அரசுக்குக் கிடைக்கும் மொத்த வருவாயில் வாங்கியுள்ள 10 லட்சம் கோடிக்கு வட்டி மற்றும் அசல் திருப்பி செலுத்துதல், அரசு ஊழியர் மாத ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட செலவினங்கள் மாதம் தோறும் செய்தாக வேண்டியுள்ளது.
அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் எல்லா செலவுகளும் போக மீதம் உள்ள தொகை வெறும் 12 விழுக்காடு மட்டுமே.
ஆக, கடனை வாங்கிக் கடன் கட்டுதல் என்பதே தமிழ்நாடு அரசு செய்து வரும் ஒரு மாபெரும் பிழை.
இப்படிப்பட்ட நிலையில் இந்தக் கடனை வாங்குவதற்கு வேண்டுமானால் இந்த புதிய உள்நாட்டு மொத்த உற்பத்தி பயன்படுமே தவிர கடன் வாங்கி கடன் கட்டிக்கொண்டே இருந்தால் தமிழ்நாடு அரசை நாளை யார் ஆட்சி செய்தாலும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இதுதான் தமிழ்நாடு சந்தித்தித்துக் கொண்டிருக்கும் சிந்திக்கவேண்டிய மிகப்பெரிய பிரச்னை.
அந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் அதிகரித்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் தமிழ்நாடு அரசின் சாதனை என்று கற்றறிந்தவர்களே கூறுவதைப் பார்த்தால்தான் அதிர்ச்சியாக உள்ளது.

