HomeIndiaமக்களவை உறுப்பினர்களை அதிகரிக்கிறார்...

மக்களவை உறுப்பினர்களை அதிகரிக்கிறார் மோடி ! மாமூல் எண்ணிக்கையே போதும் என்கிறார் மு.க. ஸ்டாலின் ! : மாற்றுத் திட்டம் தருகிறது தமிழ்த்தேசியம் !

ஐயா பெ. மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

தேர்தல் பரப்புரைகள் தமிழ்நாட்டிலும் மேற்கு வங்காளத்திலும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் 09.04.2026 அன்று வாக்குப்பதிவு நடந்து முடிவுக்காக கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மக்களும் கட்சிகளும் தித் – திக் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு வாக்குப்பதிவு 23.04.2026; மேற்கு வங்காள வாக்குப்பதிவு 23.04.2026 மற்றும் 29.04.2026! இவற்றுக்கான தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக – தீவிரமாக நடந்து கொண்டுள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் அவசரம் அவசரமாக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி நாடாளுமன்றக் கூட்டத்தை வரும் 2026 ஏப்ரல் 16,17,18 ஆகிய மூன்று நாட்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். தேர்தல்களுக் கிடையே கூட்டப்படும் நாடாளுமன்றத்தின் நோக்கம் இரண்டு!

ஒன்று, நாடாளுமன்ற – சட்டமன்றத் தொகுதிகளில் 33% தொகுதிகள் மகளிர் மட்டும் போட்டியிடும் தொகுதிகளாக ஒதுக்கீடு செய்ய சட்டம் இயற்றுவது. இரண்டு, மாநிலங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப அந்தந்த மாநிலத்திற்குரிய நாடாளுமன்ற – சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

மேற்கண்டவாறு புதிய சட்டங்கள் இயற்றுவதற்கு வசதியாக இதே நரேந்திர மோடி ஆட்சி 2023 இல் நாடாளுமன்றத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் நிறைவேற்றி விட்டது. முப்பது மாதங்களுக்கு மேல் அத் திருத்தங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது.

இப்பொழுது பல மாநிலங்களில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது – மகளிர் தொகுதி ஒதுக்கீடு சிந்தனை எங்கிருந்து பிறந்தது? மாநில சட்டப் பேரவைகளின் உறுப்பினர் எண்ணிக்கையை அந்தந்த மாநிலத்தின் மக்கள் தொகைப் பெருக்க விகிதத்திற்கு ஏற்ப அதிகப் படுத்துவதை செயல்படுத்துவது என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது!

இப்பொழுது சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் பா.ச.க. வுக்கு பழைய செல்வாக்கு குறைந்து விட்டது என்ற கணிப்பா? தமிழ்நாட்டிலும் மேற்கு வங்காளத்திலும் இனிமேல் தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கப் போவதால் இம் மாநிலங்களின் மகளிர் வாக்குகளை ஈர்க்கும் தந்திரமா என்று பல்வேறு காரணங்கள் தோன்றுகின்றன.

ஏனெனில் மகளிர் உரிமைகளில் – ஆரியத்துவா வழிப்பட்ட இந்துத்துவா அக்கறைப் படாது. பிராமண குல மகளிர் உள்ளிட்ட அனைத்து மகளிரையும் அடிமைகளாக வரையறுத்துள்ளது ஆரியத்தின் மனுநீதி! வர்ண – சாதி ஆதிக்கவாத பிராமணியத்தின் அடிப்படைத் தத்துவ நூலாக உள்ள அந்த மனுதர்ம நூலை இன்று வரை மறுக்காதவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மற்றும் பா.ச.க. தலைவர்கள்!

இப்பொழுதாவது, ஏதோ ஒரு ஆதாயம் கருதி, மகளிர்க்கு மக்களவை – சட்டப் பேரவைகளில் 33% தொகுதி ஒதுக்கீடு கிடைக்க இருப்பதை வரவேற்கலாம்! ஆனால் மக்களவைத் தொகுதிகளை, புதிய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப (2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி) கூடுதலாக்க, அதன்படி நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர் தொகுதிகள் 816 என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.

இது பற்றி திராவிட மாடல் நிலைபாடு என்ன? இப்பொழுது இருக்கும் தொகுதிகள் எண்ணிக்கையை மாற்றக் கூடாது அப்படியே இன்னும் சில காலம் தொடர வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஏன்?

அ.தி.மு.க.வோ இதுபற்றி வாயே திறக்கவில்லை! அந்தளவிற்கு தில்லிக்கும் பா.ச.க.விற்கும் அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா!

மக்கள் தொகைப் பெருக்கம் இந்தி மாநிலங்களில் ஏற்கெனவே மிக அதிகம்! இப்பொழுது அம் மாநிலங்களின் மக்கள் தொகைப் பெருக்கம் மிக மிக அதிகம்.

பின்வருமாறு இந்தி மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் உயரும். அடைப்புக்குள் இருப்பது – புதிய திருத்தப்படி கிடைக்கும் தொகுதி எண்ணிக்கை :

1. உத்தரப் பிரதேசம் 80 (120)

2. பீகார் 40 (60)

3. மத்தியப் பிரதேசம் 29 (44)

4. இராஜஸ்தான் 25 (38)

5. அரியானா 10 (15)

6. உத்தரகாண்ட் 5 (8)

7. இமாச்சலப் பிரதேசம் 4 (6)

8. ஜார்கண்ட் 14 (21)

9. சத்தீஷ்கட் 11 (17)

10. டெல்லி 7 (11)

இந்த 10 மாநிலங்களிலும் இந்திதான் மாநில ஆட்சி மொழி; இந்திதான் கல்வி மொழி! இவற்றிற்கு இப்போதுள்ள மொத்த மக்களவைத் தொகுதிகள் 235, குசராத்தின் மாநில அலுவல் மொழி குசராத்தி! ஆனாலும் இந்தியை சரளமாக ஏற்றுக் கொண்டவர்கள். இந்தியாவின் ஏகபோக முதலாளிகள் பெரும்பாலும் குசராத்திகள் – அம்பானி, அதானி போன்றோர். எனவே இந்திக்காரர்களுடன் இணைந்தே இருப்பர் குசராத்திகள்!

குசராத்தியையும் சேர்த்துக் கொண்டால் இந்தி மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகள் இப்போது 261!

இனி கூடுதலாவதையும் சேர்த்தால் இந்திக்காரர்களுக்கு மொத்தம் 394 தொகுதிகள்!

இந்த மக்களவை உறுப்பினர்களின் புதிய கூடுதல் எண்ணிக்கை இப்போது வேண்டாம். நிறுத்தி வையுங்கள், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் மு.க. ஸ்டாலின். இந்தப் புதிய எண்ணிக்கை உயர்வை – மொத்தமாக எதிர்க்கவில்லை காங்கிரசுக் கட்சி! தேர்தல் நடைபெறும் காலத்தில் இப்படி அவசர அவசரமாக மகளிர் ஒதுக்கீடு உள்ளிட்ட சட்டத் திருத்தங்களை கொண்டு வரக் கூடாது என்பதுதான் காங்கிரசு எதிர்ப்புக்கு முதன்மைக் காரணம்.

இப்போதுள்ள 543 உறுப்பினர்களில், தமிழ்நாட்டிற்கு 39 உறுப்பினர்கள் மட்டுமே! புதுவை க்கான ஒரு இடத்தையும் சேர்த்தால், 40 தொகுதிகள் மட்டுமே! மொத்தம் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் இந்தி மாநிலங்களுக்கு மட்டும் உள்ள 261 மொத்த உறுப்பினர்களில் நம்முடைய 40 உறுப்பினர்கள் மிக மிகச் சிறுபான்மை! கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறுபான்மை! நம் தமிழ்நாட்டின் மக்கள் தொகை எட்டரைக் கோடி!

ஐரோப்பாவில் செர்மனி மக்கள் தொகை 8.35 கோடி; பிரிட்டன் மக்கள் தொகை 7.6 கோடி; பிரான்சு மக்கள் தொகை 6.9 !

எட்டரைக் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டின் நிலை என்ன? கண்ணுக்குத் தெரியாத சிறுபான்மை! ஏன் இந்த அவலம் ?

வெள்ளைக்கார வணிக வேட்டையாடிகளின் வணிகக் கொள்ளைக்கும் – அதிகார ஆக்கிரமிப்பு வெறிக்கும் பிறந்ததுதான் இந்தியா !

வெள்ளைக்கார காலனி ஆதிக்க வேட்டையாடிகளிடமிருந்து 1947 ஆகத்து 15 இல் இந்தியாவின் விடுதலையை வாங்கிய கட்சி காங்கிரசு !

காங்கிரசோ, ஆரிய பிராமண – ஆரிய வைசிய – இந்தி ஏகாதிபத்தியவாதிகளின் தலைமையில் இயங்கிய கட்சி ! பண்டித நேரு, வல்லபாய் பட்டேல், இராசேந்திர பிரசாத் போன்ற வடநாட்டுத் தலைவர்களே இந்தியாவின் அரசியல் அதிகாரத்தை ஆங்கிலேயரிடமிருந்து பெற்றவர்கள். இவர்களின் புனித மொழி சமற்கிருதம் ! பொதுமொழி இந்தி!

வெள்ளைக்கார வணிக வேட்டையாடிகள் தங்களின் நிர்வாக வசதிக்கேற்ப மாநிலங்களாகப் பிரித்து தங்கள் காலனியை ஆட்சி செய்தார்கள். எடுத்துக் காட்டாக – அவர்கள் உருவாக்கிய சென்னை மாகாணத்தில் இன்றையத் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் பகுதி, ஒரிசாவின் சில பகுதிகள் இருந்தன. பம்பாய் மாநிலம் அப்படித்தான் குசராத்தை இணைத்துக் கொண்டிருந்தது.

இன அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்த பிறகு மொழிவாரி மாநிலம் அமைத்தார்கள் காங்கிரசு ஆட்சியாளர்கள். ‘தேசிய இன மாநிலம்’ என்று கூறினால் தில்லிக்குத் தீட்டு வந்துவிடும். அதனால் மொழிவாரி மாநிலம் என்று நடைமுறையில் சொன்னார்கள். அப்படி மொழிவாரியாக அமைப்பதற்குக் கொண்டுவந்த இந்தியச் சட்டத்தின் பெயர் மாநில மறுசீரமைப்புச் சட்டம் – 1956. மொழிவாரி மாநில அமைப்புச் சட்டம் அல்ல. (State Re-organisation Act – 1956).

ஆங்கிலேய ஆட்சி 1935 ஆம் ஆண்டு இயற்றிய இந்திய ஆட்சிச் சட்டம் – 1935 (Government of lndia Act – 1935) ஐ விடக் குறைவான அதிகாரங்களையே இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியது.

தி.மு.க.1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு இந்தியாவுக்கு – இந்திக்காரர்களுக்கு அடிமையாக இருக்கிறது. முழு விடுதலை பெற தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள இனங்களுக்கு உரிமை வேண்டும் எனக் கேட்டு – அதன்வழி அக் கோரிக்கையில் தமிழர்களைப் பெருமளவில் திரட்டியது.

தி.மு.க.1957 இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு – தனி நாடு கோரியது. அம் முதல் தேர்தலில் 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தி.மு.க. வில் வென்றார்கள். அடுத்த ஐந்தாண்டில், 1962 சட்டப்பேரவைத் தேர்தலில் 50 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தி.மு.க. வில் வென்றார்கள்.

பெரும் எழுச்சியோடு தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. வின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தனர்.

தனிநாடு கேட்பதற்குத் தடைச் சட்டம் போட வேண்டும் என்று தில்லி ‘மேலிடத்தில்’ பேசிக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்டு, அச் சட்டம் வரும் முன்பே தனி நாடு கோரிக்கையைக் கைவிட்டு, பாரதமாதா பஜனையில் திராவிடம் சேர்ந்து கொண்டது.

இப்போது தி.மு.க.வும் அதன் சில்லறைத் தேர்தல் கூட்டாளிகளான கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு உயர்த்த வேண்டாம் – மாற்றி அமைக்க வேண்டாம் – இப்போதிருப்பது போலவே தொடரட்டும் என்கின்றார்கள்.

இதுதான் மக்களை மயக்கும் மாமூல் நிலைக் காப்புவாதம் !

இப்போது இந்திய அரசில் மிக மிகக் கொடிய, பிற இன ஒடுக்குமுறை அமைப்பு எது?

நாடாளுமன்றம் !

எட்டரைக் கோடி தமிழ் மக்களுக்கு, நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் 543 பேரில், வெறும் 39 பேர் தான் !

இது ஒரு கூட்டாட்சியா ? இல்லை ! இந்திய ஏகாதிபத்திய ஆட்சி ! சனநாயகம் என்று போலியாகக் காட்டி, இந்தி மாநிலங்களின் 260 உறுப்பினர்கள் கோலோச்சும் ஒற்றை இன ஆதிக்க ஆட்சி!

நாடாளுமன்றத்திற்கும் மேலே இந்தி பேசாத மாநிலங்களை ஆட்டிப் படைக்க, அடக்கி வைக்க ஆளுநர் பதவி உண்டு.

இந்த இன ஒடுக்குமுறை தொடரட்டும் என்பதுதானே, இப்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறாமல் – இருக்கட்டும் என்று கூறுவது!

இவ்வாறு கூறும் தி.மு.க.வினரும் கம்யூனிஸ்ட்களும் யார்? அரசமைப்புச் சட்டத்தில் – அடிப்படை மாற்றம் விரும்பாத மாமூல்வாதிகள் – மறைமுக இந்தி ஏகாதிபத்தியக் கையாட்கள்!

இன ஒடுக்குமுறை நிலவும் நாட்டில் இனச் சம உரிமை கிடைக்கும் வகையில் நாடாளுமன்றத்தை மாற்றி அமைக்க வேண்டும். இந்தியாவில் எல்லா தேசிய இனங்களுக்கும் சம எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஓர் இனத்திற்குள், அதாவது ஒரு தேசிய இன மாநிலத்திற்குள் – சட்டப்பேரவைக்கு மக்கள் எண்ணிக்கைக் கேற்ப தொகுதிகள் இருக்கலாம். பல இனங்களின் கூட்டரசில் இனங்களுக்கு சம எண்ணிக்கையில் தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் !

இப்பொழுதுள்ள நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தேசிய இனங்கள் ஒவ்வொன்றுக்கும் சம எண்ணிக்கை அடிப்படையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

மேலும் இந்திய அரசிடம் படைத் துறை, நாணய அச்சடிப்பு, வெளிநாட்டு உறவு முதலியவை மட்டுமே இருக்க வேண்டும். ஆளுநர் பதவியும், மாநில ஆட்சிக் கலைப்பு விதியும் புதிய அரசமைப்பில் இருக்கவே கூடாது. வரி விதித்து வசூலிக்கும் அதிகாரம் தேசிய இன (மாநில) அரசுகளிடம் இருக்க வேண்டும். அவ்வாறு தேசிய இன அரசுகள் வசூலிக்கும் வரியில் குறிப்பிட்ட விழுக்காடு இந்திய அரசுக்குத் தர வேண்டும். அந்தந்த மாநில மொழியும் அனைத்திந்திய ஆட்சி மொழி! அதையே கல்வி மொழி என்றும் ஆக்க வேண்டும்.

இந்த நேரத்தில் உண்மையான சனநாயக வாதிகள் இவ்வாறான இந்திய அரசமைப்பில் – நாடாளுமன்றத்தில் செய்ய வேண்டிய சனநாயக மாற்றங்களை முன்வைத்து விவாதிக்க வேண்டும் !

ஏற்கெனவே இந்தி அல்லாத இனங்களை ஒடுக்கும் அரசமைப்புச் சட்டமும், நாடாளுமன்றமும் அப்படியே தொடர்வதா – அதை மாற்றி புது வகையில் தேசிய இனங்களை ஒடுக்குவதா என்ற வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது.

புதிதாக வரும் ஒடுக்குமுறையை எதிர்க்கும்போது, பழைய ஒடுக்குமுறைகள் தொடரட்டும் என்று கூறக் கூடாது. புதிய ஒடுக்குமுறையை மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். அதை எதிர்ப்பதன் ஊடாக ஏற்கெனவே நிலவுகின்ற இன ஒடுக்குமுறைகளையும் இனங்காட்டி, மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்!

மக்களவை உறுப்பினர்களை அதிகரிக்கிறார் மோடி ! மாமூல் எண்ணிக்கையே போதும் என்கிறார் மு.க. ஸ்டாலின் ! மாற்றத் திட்டம் தருகிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

spot_img

Continue reading

தியாக தீபம் திலீபன் நினைவு நாளை ஒட்டி இளையராஜாவின் ஆஸ்திரேலியா இசை நிகழ்ச்சியின் தேதியை மாற்றக் கோரி வேண்டுகோள் !

இசைஞானி இளையராஜா அவர்களின் ஆஸ்திரேலிய இசை நிகழ்ச்சியின் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என உலகத் தமிழர்களின் உணர்வுகளை முன்வைத்து வேண்டுகோள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2026 செப்டம்பர் 26 அன்று இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாள் தமிழீ*ழப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த தியாக தீபம்...

அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம்; 4,000 கோயில் குடமுழுக்கு; குவிந்த தங்கக் கட்டிகள் !!

"தமிழ் ஊடகம் குழுமம்" சொன்னதை திமுக ஆய்வுக்குழு உறுதி செய்தது ! அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம் ; 4,000 கோயில் குடமுழுக்கு ; குவிந்த தங்கக் கட்டிகள் நேர்மையான அதிகாரிகளைப் பந்தாடிய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ! மீட்கப்பட்ட தமிழர் கோயில் இடங்களைத் தெலுங்கர்களுக்கு குத்தகை விட்ட...

தமிழ்த் தேசியத்திற்கு முதல் மரியாதை செலுத்திய பாரதிராஜாவுக்கு நாம் தமிழர் கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்திய சீமான் !

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிப்பயணத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் கொடி போர்த்தி புகழ் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்த்திரையுலகின் தன்னிகரில்லாத கலைஞன் பாரதிராஜா. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்த் தேசியத்தின்மீதும் அளவில்லாப் பற்றுக் கொண்டிருந்தவர். தமிழ்த்தேசிய விடுதலை பெறுவதற்கான 30 ஆண்டுகாலப் போராட்டம் நடத்திய மேதகு...