கோயமுத்தூரில் நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்கில் வலியுறுத்தல் !
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் கூறும் நல்லுலகு.
இதில் வடவேங்கடம் என்பது இமயமலையைக் குறிக்கிறது. தென்குமரி என்பது இப்போதைய கன்னியாகுமரியைக் குறிப்பதல்ல. மாறாக, கன்னியாகுமரிக்குத் தெற்கே கடலுக்குள் மூழ்கிய தென்னாட்டின் தெற்கு எல்லையைக் குறிக்கும் சொல்.
எனவே, தென்குமரி என்பது இப்போதுள்ள மடகாஸ்கர் மற்றும் குமரோஸ் தீவுகள் வரை நீண்டிருந்த ஒரு பெரிய கண்டமாக இருந்திருக்கிறது. அதன் நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியிருக்கிறது என்பதும் தெளிவாகிறது.
இந்தக் கண்டத்தின் எல்லைகளில் கிடைக்கப்பெற்ற லெமூர் வகைக் குரங்குகளின் படிமங்களை வைத்து “லெமூரியாக் கண்டம்” என்றும் அழைக்கப்பட்டது. குமரிக்கண்டம் மற்றும் லெமூரியாக் கண்டம் எனும் இரு பெயர்களும் குமரிக் கண்டத்தைக் குறிக்கும் சொற்களே.
தமிழர் இலக்கியங்களில் தென்புலம், தென்னாடு, தென்னகம் என்று குமரி நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன.
எனினும், இலக்கியச் சான்றுகளை வைத்துக்கொண்டு மட்டுமே உள்ளே ஒரு கண்டம் மூழ்கி இருப்பதாகக் கூற முடியாது என்று வாதிட்டுக் குமரிக்கண்டம் என்ற ஒன்றுமில்லை என்றே நீண்ட நெடுங்காலமாக வாதிட்டுவந்தனர் சிலர்.
இந்நிலையில் குமரிக்கண்டம் தொடர்பாக கடலுக்குள் இறங்கி ஆய்வு மேற்கொண்டார் கடல்சார் தமிழாய்வு அறிஞர் மறைந்த ஒரிசா பாலு. மீனவர்கள் அதிலும் குறிப்பாக ஆழ்கடல் மீனவர்கள் துணையுடன் பலமுறை கடலுக்குள் சென்று ஆய்வுகள் மேற்கொண்ட ஒரிசா பாலு அவர்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் கழுத்தளவு நீரில் மூழ்கும் அளவுக்கு நிலப்பரப்புகள் சில உள்ளதையும் மீனவர்கள் உதவியுடன் கண்டறிந்தார்.
மேலும், ஆழ்கடல் நீச்சல் அறிந்த “ஸ்கூபா டைவிங்” வல்லுனர்களைக் கொண்டும் ஒரிசா பாலு கடலுக்குள் இறங்கி ஆய்வுகள் செய்து நிழற் படங்கள், காணொலிகள் மூலம் தரவுகளை சேகரித்தார்.
ஒரிசா பாலு அவர்களின் ஆய்வு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மொழியியல் மற்றும் தொல்லியல் ஆய்வறிஞர் திரு. நாராயணமூர்த்தி, குமரிக்கண்டம் தொடர்பான அகழ்வாய்வுகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
சுமார் ஐந்தாண்டு காலம் நீடித்த இந்த வழக்கில், கடந்த டிசம்பர் (2025) மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், குமரிக்கண்டம் அகழ்வாய்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு இந்தியத் தொல்லியற் துறைக்கு முன்னெடுப்புத் திட்டம் அளிக்கவேண்டும் என்றும் அதனை ஏற்று இந்தியத் தொல்லியற் துறை ஆய்வுகள் செய்யவேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை வலியுறுத்தும் விதமாக மார்ச் மாதம் 29 ம் தேதியன்று (2026) கோயமுத்தூரில் உள்ள தி வின்டேஜ் கேசில் விடுதியின் மேலரங்கத்தில் சிறப்பு ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மொழியியல் மற்றும் தொல்லியல் ஆய்வறிஞரும், மனுதாரருமான திரு. நாராயணமூர்த்தி, வழக்கு குறித்த முழு விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். மேலும், “குமரிக்கண்டம் தொடர்பான வெறும் இலக்கியத் தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு நாங்கள் அகழ்வாய்வு செய்யுமாறு கோரவில்லை, மாறாக 2017 ம் ஆண்டு மொரிஷியஸ் தீவில் வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் மேற்கொண்ட அகழ்வாய்வில் “கோன்டுவானா” குறித்து உறுதி செய்யப்பட்டதாகவும், மொரிஷியஸ் தீவின் கீழே செருகி இருக்கும் நிலத்திட்டு ஒரு பழைய பெரு நிலப்பரப்பின் பகுதிதான்” என்று நிரூபிக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், “ஒரிசா பாலு அவர்களின் கள ஆய்வுத் தகவல்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன என்றும் கன்னியாகுமரிக்குத் தெற்கே மடகாஸ்கர் வரை ஒரு பெரு நிலப்பரப்பு கடலில் மூழ்கி இருப்பதும் உறுதியாகிறது” என்றும் தெரிவித்தார்.
இந்த அடிப்படியிலேயே தாம் வழக்குத் தொடுத்ததாகவும், அந்த வழக்கில் ஒரிசா பாலு அவர்களை “நீதிமன்ற நண்பராக” (Amicus curiae) நீதிபதிகள் நியமித்து அவரது கடலாய்வுத் தரவுகளை சாட்சியங்களாகக் கொண்டும் தீர்ப்பு அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.
குமரிக்கண்டம் என்ற ஒன்று இல்லவேயில்லை என்றெல்லாம் யாரும் விளையாட்டுக்கூடக் கூற முடியாது என்றும் உறுதிப்படக் கூறினார் திரு. நாராயணமூர்த்தி.
இந்த குமரிக்கண்டக் கடலாய்வு இந்திய மற்றும் தமிழ்நாடு தொல்லியற் துறையினர் மட்டுமல்லாது மொரிஷிஸ் கடல் ஆய்வு மேற்கொண்ட வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் குழுவினரைக் கொண்ட ஒரு பன்னாட்டு ஆய்வுக்குழுவினரையும் இடம்பெற வைத்து நடத்தப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் திரு. நாராயணமூர்த்தி.
இந்த ஆய்வரங்கக் கூட்டத்தில், வரவேற்புரை வழங்கினர் கோயமுத்தூர் கணபதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.நித்தியானந்த பாரதி, நோக்கவுரை வழங்கினார் தமிழ் ஊடகம் ஆசிரியர் திரு.வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், தொல்லியல் பார்வையில் குமரிக்கண்டம் எனும் தலைப்பில் இந்தியத் தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற முதன்மை அதிகாரி திருமதி. மூர்த்தீஸ்வரி உரையாற்றினார். தமிழர் முன்னணி பொதுச்செயலாளர் திரு.இமயம் சரவணன், புதிய தலைமுறை மக்கள் கட்சி நிறுவனர் திரு.கோபாலகிருஷ்ணன், இலக்கியா மற்றும் இழந்தமிழர் குழு மேகா சக்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்வுக்கு கோவா தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. பழனிச்சாமி மற்றும் ஒரிசா புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. ஒரிசா துரைசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

வழக்கு குறித்தும் குமரிக்கண்ட உறுதி குறித்தும் உரையாற்றினார் நாராயணமூர்த்தி. தமிழ் ஊடகம் சார்பில் நன்றியுரை ஆற்றினார் திரு.சுந்தர் எனும் மீனாட்சி சுந்தரம்.

நிகழ்வுக்கு தமிழ் ஊடகம், கணபதி தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழியல் நடுவம் ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்பு கொள்ள மின்னஞ்சல் : [email protected], [email protected]

