– கதிர்
காரைக்குடி குறிப்பிட்ட சாதி, மதம் அதிகம் இல்லாத ஆதிக்கம் இல்லாத தனித்துவமான தொகுதி.
ஒரு பகுதி மக்கள் மியன்மார் (பர்மா) சிங்கப்பூர் மலேசியா அரபு நாடுகளில் செழிப்புற்று வாழ்ந்தாலும் தமது தாய் மண்ணுடன் இணைந்து வாழும் பழக்கம் உடையவர்கள் என்பதைப் பார்க்க முடிந்தது.
கல்வியும் மருத்துவமும் ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமாகிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே காரைக்குடி ஒரு கல்வி நகரம் !
பலருடைய பட்டயப் படிப்புக்கு அடித்தளத்தை நகரத்தார்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மருத்துவமனைகளும் சிறப்புற்று விளங்குகின்றன.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் நகரத்தார் உருவாக்கியதே.
பலவிதமான தொழிற் துறைகளுக்கும் காரைக்குடி மக்களே முன்னோடிகள்.
இந்தத் தொகுதியில் திரு சீமான் அவர்கள் போட்டியிட்டதால் இது உலக அளவிலான தமிழர்களின் பார்வை வட்டத்துக்குள் வந்ததோடு பேசு பொருளாகவும் ஆகியது. எல்லாவற்றையும் விட உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கும் தொகுதியாகவும் காரைக்குடி மாறிவிட்டது.
அரசியலும் அதிகார பலமும் வாய்ந்த திரு. ப. சிதம்பரம் அவர்களின் ஊரிலிருந்து எமது ஆய்வைத் தொடங்கினோம்.
மார்ச் 29, அன்று மாலை பாலையூர்- கண்டனூருக்கு திரு.சீமான் வந்தடைந்தார். சாலையின் இரு பக்கமும் பொதுமக்கள் கூடி நின்றார்கள்.
இது வேடிக்கை பார்ப்பதற்கா? அல்லது சீமான் அவர்களின் கருத்தை உள்வாங்குவதற்கா என்பதைத் துல்லியமாக கவனித்தேன்.
சீமான் அவர்கள் பேசப் பேச 80 சதவீத மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

அந்த வழியாகச் செல்லும் பேருந்துகள், மகிழுந்துகள், இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்லும்போது அதிலிருந்தவர்கள் சீமான் அவர்களைப் பார்த்து கை அசைப்பதும் செல்லில் புகைப்படம் எடுப்பதையும் அவதானிக்க முடிந்தது.
திரு. சீமான் அவர்களது, வெற்றியின் “மையப்புள்ளி” ப.சிதம்பரத்தின் ஊரிலேயே தென்பட்டது.
அடுத்ததாக புதுவயல் சென்றோம். பெரிய திடல் ; எங்கு பார்த்தாலும் மக்கள், இப்படி ஒரு கூட்டம் கூடி இந்த இடத்தில் எந்தக் கட்சியும் கூட்டம் நடத்தவில்லை என்று புதுவயல் வணிகர்கள் கூறினார்கள்.
இந்தக் கூட்டத்தில் திரு. சீமான் அவர்கள் படக் காட்சிகள் மூலமாக விளக்கி ; மக்களுக்கு அரசியல் புரிதலை ஏற்படுத்தினார்.
கூர்ந்து கவனித்த மக்கள் திரு. சீமானை வியப்புடன் பார்த்தார்கள். சீமான் பேராசிரியராக இருந்தாரா என்று வினவினார்கள் !
புதுவயலில் புதியதோர் மாற்றத்தை திரு.சீமான் ஏற்படுத்தினார்.
30ஆம் தேதி திரு சீமான் அவர்கள் தேவக்கோட்டையில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். மாலையில் பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். மக்களிடம் புதியதொரு நம்பிக்கையும் விதைத்தார்.

காரைக்குடியில் பொதுக்கூட்டம். இருவழிச் சாலை. ஒரு சாலை முழுவதும் மக்கள் நிரம்பி விட்டார்கள். நேரம் செல்ல செல்ல அடுத்த சாலையிலும் மக்கள் அலை மோதியது. போக்குவரத்தைத் திருப்பியனுப்பினார்கள்.
திரு சீமான் அவர்கள் 9 மணி அளவில் மேடைக்கு வந்தார். அவரது உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழர் என்ற உணர்வோடு, காரைக்குடி மக்கள் ஒன்று சேர்ந்து திரு. சீமான் அவர்களின் கருத்தியலைக் கேட்டவர்கள், சீமான்தான் இந்த மண்ணுக்குத் தேவையானவர் என்று பேசிக்கொண்டார்கள்.
மக்களின் எழுச்சியைப் பார்த்த சீமான் படக் காட்சியுடன் கல்வியின் தரம் குறித்து ஒப்பீட்டு முறையில் விளக்கினார்.
சீமான் பேசப் பேச நேரம் பத்து மணி கடந்தது. மக்கள் ஆர்வத்துடன் அசையாமல் கூர்ந்து கவனித்தார்கள். இதுவும் திரு. சீமான் அவர்களின் வெற்றியைப் பலப்படுத்தியது.
ஏப்ரல் முதலாம் தேதி அன்று மக்களை சந்தித்து கள நிலவரங்களை ஆராய்ந்தோம். ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கள ஆய்வை மீண்டும் தொடங்கினோம்.
இதில் ஒன்பது நாட்கள் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தோம். பலரும் எம்மோடு பேசினார்கள். திரு சீமான் அவர்களை நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். எங்கள் தொகுதியில் இருந்து, அவர் சட்டமன்றம் சென்றாக வேண்டும் என்று மன நிறைவோடு கூறினார்கள். கழனிவாசல் பகுதியில் ஆசிரியர் ஒருவர் மகிழ்ச்சியுடன் திரு சீமான் அவர்களுக்கு 40 வாக்குகள் சேர்த்து வைத்துள்ளேன் என்பதை உறுதிப்படக் கூறினார். அம்மையாரின் மகனும் தனது பங்கிற்கு உறுதி கொடுத்தார்.
காலையும் மாலையும் மக்கள் சந்திப்பு என்பது, மக்களின் மனநிலையை அறிய முடிந்தது.
சமூக ஆர்வலர் கடிகை இரவி அவர்களுடன் மன்னன் வயல், கண்ட தேவி, வெங்களூர், கீழ்குடி, தேரலப்பூர் போன்ற கிராமங்களில் ஊர் பெரியவர்கள் இளைஞர்கள் குடும்பத் தலைவிகள் ஆகியோரை சந்தித்தோம்.
அவர்களின் வாக்கு திரு சீமானுக்கு உறுதியானது. நண்பர் கையிலை பெரியசாமி அவர்களின் நண்பர்களை தேவகோட்டையில் சந்தித்தோம். அவர்கள் திமுகவாக இருந்தாலும் இம்முறை சீமான் அவர்களுக்கு வாக்கு செலுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.

காரைக்குடியில் கீழவூரணி, செஞ்சை, பனந்தோப்பு, கணேசபுரம் பகுதிகளில் மக்கள் அன்றாடம் கூலி வேலை செய்துதான் வாழ்கிறார்கள். திராவிட கட்சிகளுடன் இணைந்து ஒன்பது முறை வென்ற திரு.ப. சிதம்பரம் அம்மக்களின் வாழ்க்கைக்கு எதுவுமே செய்து கொடுக்கவில்லை என்று இப் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் நிர்வாகி கூறினார். மக்களின் பல இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதையும் சுட்டிக் காட்டினார். மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
திரு சீமான் வந்தால் எங்களுக்கு ஏதாவது செய்வாரா என்று ஏக்கத்துடன் மக்கள் கேட்டார்கள்.
கழனிவாசல் பகுதியில் நண்பர் சந்திரசேகரின் உறவினர்களைச் சந்தித்தோம். அவர்களின் ஆதரவும் நாம் தமிழருக்கு கிடைத்தது. அதே பகுதியில் பெரியவர் ஒருவரை சந்தித்தோம். தான் அண்ணா திமுக என்று அறிமுகம் செய்து கொண்டார். இம்முறை எனது ஓட்டும் குடும்பத்தார் ஓட்டும் சீமானுக்கு என்றார். அவரது வீடு கட்டுமான பணி செய்யும் பணியாளர்களிடமும் சீமானுக்கு ஓட்டு போடச் சொல்லி இருக்கிறேன் என்றார்.

“சீமான் இவ்வளவு நாள் வெளியில் மிரள விட்டார் ; இனி சட்ட சபைக்குள்ளே மிரளவிட வேண்டும்” என்றார். “வெளிநடப்பு செய்யக்கூடாது” என்று சீமானுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஐயா அவர்களின் கருத்தைப் பதிவு செய்து கொண்டோம்.
திரு.சீமான் அவர்களின் “வாய்மைக்கு” வலிமை இருக்கிறது. அது கிராமங்கள் வரை சென்றடைந்திருக்கிறது.
ஆம். மாவட்ட ஆட்சியர் முன்பாகவே கடலில் சிலையை வைத்தால் உடைப்பேன் என்று பேசியதின் “உயிரோட்டம்” அதுவே செயல் வடிவம் பெற்றது. அது தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் பல சமூக மக்களும் திரு சீமானுக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்க முடிந்தது.
உச்சகட்டப் பரப்புரையை ஏப்ரல் மாதம் பதினெட்டாம் தேதி காரைக்குடி கழனிவாசல் பகுதியில் திரு. சீமான் தொடங்கினார்.
சீமான் அவர்களின் கருத்தை கேட்பதற்கு மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூடியபோது, நாம் தமிழர் நிர்வாகிகள் குடிக்கத் தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அது, பொதுமக்களின் அன்பைப் பெற்றது.
சுட்டெரிக்கும் வெயிலில் சீமான் அவர்களின் “நெருப்புக் கருத்து”கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
தொடர்ந்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் திரு. சீமான் அவர்களின் பயணம் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டது. நேரம் நெருக்கடிகள் இருந்தாலும் தமக்காக காத்திருக்கும் மக்களை பார்த்தவுடன் சீமான் அவர்கள் முழுமையாக தமது கருத்துக்களைப் பேசி விடுவார். அதுதான் மக்களுக்கு மன நிறைவை ஏற்படுகிறது.
ஏப்ரல் 21 ஆம் தேதி, திறந்தவெளி ஜீப்பில் திரு சீமான் சென்றபோது சாலையில் இரு பக்கமும் கூடிய மக்கள் சீமானை வரவேற்றார்கள். கடைவீதியில் செல்லும் போது முதலாளிமார் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வாசலில் நின்று சீமானுக்கு ஆதரவு கரம் நீட்டினார்கள். இதனால் வாகனம் மெதுவாக சென்றது. பேரணியின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
மாலையில் பொதுக்கூட்டம். அத்துடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது.
இதில் திரு. சீமான் அவர்களின் உரையானது ; 234 தொகுதிகளுக்கும் உலகத் தமிழருக்குமான ஆவணமாக அமைந்திருந்தது.
தமிழினம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து தேர்தல் களத்தையே மாற்றி வடிவமைக்கிறார் திரு.சீமான்.
எமக்கான (தமிழர்களுக்கான) நிலையான ஒரு இடத்தை செந்தமிழன் சீமான் உருவாக்கி விட்டார்.
அவர் செல்லும் இடமெல்லாம் நிதி கொடுத்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிதி கொடுக்கும் போது அவர்கள் கண்ணில் ஒரு ஏக்கம் தென்பட்டது.
நாட்டு விடுதலைக்காக உடல் பொருள் அனைத்தையும் கொடுக்க முன்வரும் போராளிகளாகவே அந்த வாக்காளர்கள் தென்பட்டார்கள். அவர்களிடத்து எல்லாம் விடுதலை உணர்வு மேலோங்கி நிற்பதைக் காண முடிந்தது.
திரு. சீமான் அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் கடைசியாக இரண்டு நாட்கள் பணம் விநியோகம் செய்தார்கள்.
தவெக வேட்பாளர் பிரபு பிரச்சாரத்தின் போது கூட்டம் கூட்டமாகத் தாய்மார்களையும் நடுத்தர பெண்களையும் அழைத்துக் கொண்டு சென்று வாக்குக் கேட்டார். ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் அந்தப் பெண்களின் பணி முடிந்தது, அவர்கள் திரும்பிச் செல்லும் போது, தவெக கட்சிக் கொடியை என்னிடம் கொடுத்தார்கள். “ஏன் நீங்கள் அந்தக் கட்சி இல்லையா?” என்றபோது, “இல்லை 300 ரூபாய் கொடுத்து பரப்புரைக்கு உடன் வர அழைத்து வந்தார்கள் வந்தோம்” என்றார்கள். இதற்கு நானே சாட்சி. தவெக விளம்பரத்தின் வழியாக மக்களை ஏமாற்றி வருவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
எல்லாவற்றையும் நாம் ஆராய்ந்து பார்த்த போதும் தேர்தல் நாளன்று பல்வேறு பகுதியோடு, எமது தொடர்பாளர்களுடன் பேசும்போது, வாக்கு பதிவுகள் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது ; அதோடு அமராவதிபுதூர் போன்ற பகுதியில், (நாம் தமிழர் சின்னம் கொண்ட) இரண்டாவது பட்டன் பலமுறை உள்ளே அமுங்கி விட்டதாம். அந்த அளவிற்கு விவசாய சின்னத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை அறிய முடிந்தது.
காரைக்குடி வாக்காளர்களும் மக்களும் சீமானுக்கு அளித்த ஆதரவும், அவரது உரைகளைக் காது கொடுத்து கேட்டவிதமும், கூடிய கூட்டமும் அறம் சார்ந்த தமிழ்த் தேசியம் மக்களிடம் ஆழமாகச் சென்று சேர்ந்துள்ளதை உணர முடிந்தது.
மக்களின் இந்த ஆதரவு வாங்குகளாகவும் மாறும் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
எமது ஆய்வுக் குழுவில் : கையிலை திரு.பெரியசாமி, பலவான்குடி திரு.சந்திரசேகர், திருமிழிசை திரு. திருசைவேலன். திருமதி. சங்கீதா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

