ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார்.
தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத் தெரிவிக்கிறார். மேலும், பல அமெரிக்க இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாகக் கவலை தெரிவித்துள்ள ராபர்ட் ரைக் இந்தப் போர் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பொருளாதார இழப்பாக நாளொன்றுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் செலவாகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தப் பணத்தை அமெரிக்க மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் பயன்படுத்தியிருக்கலாம். அமெரிக்கர்களுக்கு மருத்துவ சேவை, மலிவு வீடுகள், குழந்தைப் பராமரிப்பு, நல்ல கல்வி போன்ற அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று அவர் கூறுகிறார்.
அவர் முன்வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காங்கிரஸ் அல்லது மக்களின் பெரும்பான்மையான ஆதரவு இல்லாமல் இந்தப் போரில் ஈடுபட்டுள்ளார் என்பதே. பல கருத்துக்கணிப்புகளின்படி, பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தப் போரை ஆதரிக்கவில்லை என்பதையும் ராபர்ட் ரைக் சுட்டிக் காட்டுகிறார்.
எனவே, இது அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வி என்றும் அவர் கூறுகிறார்.
சரி, அமெரிக்கர்கள் என்ன செய்யவேண்டும் ?!
* அமெரிக்கர்கள் பெரிய அளவில் அமைதியான போராட்டங்களில் பங்கேற்க வேண்டும்.
* தேர்தல் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
* தேர்தல்களில் அதிகமாக வாக்களித்து அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
* சமூகங்களையும் கல்வி நிறுவனங்களையும் அரசின் அழுத்தத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
மொத்தத்தில், இந்தப் போரின் அழிவுக்கு சரியான தீர்வு ஜனநாயக அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதே என்றும் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார்.

