–முகிந்தன் துரைராஜசிங்கம்
பாரசீக வளைகுடாவின் மிக முக்கியமான பாதையான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரானின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவின் எச்சரிக்கையால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஈரானின் அனுமதியின்றி ஜலசந்தியைக் கடக்க முயன்ற ஒரு பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் மீது ஈரானிய கடற்படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இதில் கப்பல் தீப்பற்றி எரிந்ததைத் தொடர்ந்து, அந்தப் பாதை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து 90% சரிந்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தில் 20% இந்தப் பாதை வழியாகவே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி:
சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
மற்ற நாடுகளின் கப்பல்கள் ஜலசந்திக்குள் நுழைந்தால் அவை “எதிரி நாடுகளின் ஊடுருவலாகக்” கருதப்பட்டுத் தாக்கப்படும்.
இந்த விவகாரத்தில் அதிரடியாகத் தலையிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஈரான் உடனடியாக ஜலசந்தியை அனைத்து நாடுகளுக்கும் திறந்துவிட வேண்டும். இதற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்படுகிறது. தவறினால், ஈரானின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் (Power Plants) மீது அமெரிக்க விமானப்படை கடுமையான தாக்குதலை நடத்தும்,” என டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த மோதலால் ஒரு பேரழிவு ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் பல தங்களின் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரானின் பதிலடி ஏப்ரல் 6-ஆம் தேதி தெரியவரும்

